பொள்ளாச்சி தென்னை சீக்ரெட்!
பொள்ளாச்சி தென்னை சீக்ரெட்!
##~##
யில் தோகையாய் மட்டைகளை அசைத்து, பார்வை படரும் தூரம் வரை மனதை வருடிக்கொடுக்கும் பொள்ளாச்சி தென்னந்தோப்புகள் வெகு பிரபலம். தென்னந் தோப்புகள் மட்டும் அல்ல; பொள்ளாச்சியின் இளநீருக்கும் ஏக கிராக்கி. சென்னையில் 50 ரூபாய் கொடுத்தால்கூட பொள்ளாச்சி இளநீர் கிடைப்பது இல்லை. ''இந்தப் பெருமை எல்லாம் பொள்ளாச்சி அருகில் உள்ள ஆலாம்பாளையம் கிராமத்துக்குத்தான் சொந்தம். பொள்ளாச்சி தென்னந் தோப்புகளுக்கான 80 சதவிகிதம் தென்னங்கன்றுகள் அந்தக் கிராமத்தில்தான் உற்பத்தி ஆகின்றன'' என்ற தகவலை என் விகடன் 'வாய்ஸ் ஸ்நாப்’ பகுதியில் தெரிவித்து இருந்தார் ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த வாசகர் தனபால். அவரைச் சந்தித்தேன். ''கறுப்பு - வெள்ளை காலத்து சினிமாவிலேயே பொள்ளாச்சி தென்னை மரங்கள் இடம்பெற ஆரம்பிச் சுடுச்சு. அதுபோக ஜமீன் மற்றும் மிராசுதாரர் கதைகள் பெரும்பாலும் பொள்ளாச்சி பகுதியில்தான் படமாக்கப்பட்டு இருக்கு. இந்தப் படங்கள்ல, பொள்ளாச்சி தென்னைமரங்கள் ஒரு காட்சியிலாவது வந்திடும்.

இப்படி சினிமாக்காரங்களையும் இயற்கையை நேசிப்பவங்களையும் வெகுவாகக் கவரும் இந்தப் பொள்ளாச்சித் தென்னைமரங்களில் முக்கால்வாசி எங்க ஆலாம்பாளையத்தில் உற்பத்தியான தென்னை நாற்றுகள்தான், ஆயிரக்கணக்கான ஏக்கரில் இங்கே நடவு செய்யப்பட்டு இருக்கு. இங்கு உள்ள வடக்குத் தோட்டம், கல்லாங்காடு, முத்துக்கவுண்டர் தோட்டம், ஊர்க்கவுண்டர் தோட்டம், கணபதி தோட்டம், ஜல்லித்தோட்டம், சாமிசெட்டியார் தோட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் தென்னை நாற்று உற்பத்திக்குப் பெயர் போனவை. இங்கே வாழுகிற மக்கள் தென்னங்கன்று உற்பத் தியில் 100 வருடம் அனுபவம் கொண்டவங்க.

இங்கே நாற்று உற்பத்திச் செய்றவங்க 'நெத்து’ தேங்காய் தேர்வில் ஆரம்பிச்சு, அதைப் பறிக் கிறது, முளைப்பு போடுறதுனு எல்லாத்துலயும் சில நுட்பங்களைக் கடைபிடிப்பாங்க. நாற்றுக் காய் பறிக்கத் தகுதியான மரங்களை அதுக்கா கவே ஒதுக்கிடுவாங்க. அந்த மரங்களின்  காய் களை வெட்டும்போது மரத்தின்  கீழே சேற்று மண் நிறைய இருக்கும்படி பார்த்துக்குவாங்க. ஏன்னா கெட்டியான தரையில் நெத்து விழுந்தா முளைப்புத் திறன் பாதிக்கும். இப்படிப் பறிச்ச பிறகு அதுல இருந்து தரம் மிக்கக் காய் களை மட்டும் தேர்ந்து எடுத்து அதை நிழலில் குவிச்சுவைப்பாங்க. அடுத்து குழைவான மண் ணும் மணலும் கலந்து நாற்று நடுகிற இடத்தைத் தயார் செய்வாங்க. மணல் கலந்தால்தான் எந்த நேரமும் ஈரப் பதம் இருக்கும். மிதமாக வெயில் படும் வகையில் தோப்பு நிழலில் இந்த நாற்ற டியை அமைப்பாங்க. தினசரி தண்ணீர் பாய்ச் சுறது மட்டும்தான் இதுக்கான பராமரிப்பு. பத்து மாசம் வளர்ந்த தென்னங்கன்றுகளை எடுத்து நடவு போடலாம். அதில் இருந்து அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் நடுகிற கன்றுகள்தான் ஆரோக்கியமான மரங்களாக வளரும். இப்படி ஆண்டு முழுக்கத் தென்னை நாற்றுகளை உற்பத்திச் செய்ற தொழிற்சாலையாகவே எங்க ஆலாம்பாளையம் இயங்குது'' என்கிறார் பெருமையுடன்!  

பொள்ளாச்சி தென்னை சீக்ரெட்!

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: க.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு