Published:Updated:

என் ஊர் - ஒண்ணாம் தேக்கு...ரெண்டாம் தேக்கு !

ஆ.கோமதிநாயகம், படங்கள்: ஏ.சிதம்பரம்

'ஏரல்’ இமான்

திருவழுதிநாடார்விளை

##~##

நடிகரும் சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆன, ஏரல் இமான் தன்னுடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சியில் அமைந்து உள்ள திருவழுதிநாடார்விளையைப் பற்றி இங்கே பேசுகிறார்.

''திருவழுதிங்கிறது ஒரு தெய்வத்தோட பெயர். இங்க நாடார் சமுதாயமக்கள் அதிகமா இருக்கிறதனால திருவழுதிநாடார்விளைனு  பெயர் வந்துச்சு. அது காலப்போக்குல மருவி, திருடாமழைனு மாறிடுச்சு. என் ஊர் தாமிரபரணி ஆத்துக்கும், ஆத்துல இருந்து பிரியுற வாய்க்காலுக்கும் நடுவுல இருக்கு. நான் அஞ்சாப்பு வரைக்கும் உள்ளூர் பள்ளிக்கூடத்துல படிச்சேன். ஊர்ப் பக்கத்துல ஒண்ணாம் தேக்கு, ரெண்டாம் தேக்குன்னு இடங்கள் இருக்கு. அங்கே புங்கை, யூகலிப்டஸ், புளி, தேக்குன்னு பத்தாயிரம் மரங்களுக்கு மேல இருக்கும். பொங்கல் அன்னைக்கு செட்டு சேர்ந்து கௌம்புவோம். பாம்பு நிறைய இருக்கும்கிறதால, ஊர்ப் பெருசுங்க 'புள்ள பிடிக்கிறவன்’ இருக்குறான்னு பயம் காட்டுவாங்க. நாங்க அதை எல்லாம் கண்டுக்கிறது இல்ல. தைரியமாப் போய் கபடி, மரக் குரங்கு, ஊஞ்சல்னு  வெளையாடுவோம்.

என் ஊர் - ஒண்ணாம் தேக்கு...ரெண்டாம் தேக்கு !

எனக்குப் படிப்பைவிடப் பாட்டுப் பாடுறது, வில் அடிக்கிறது, நாடகம் நடிக்கிறதுலதான் ரொம்ப விருப்பம். பள்ளிக்கூடத்து ஆண்டு விழாவுல 'கேளுங்கள் தரப்படும்... தட்டுங்கள் திறக்கப்படும்’கிற பாட்டை முழுசாப் பாடி பரிசு வாங்கினேன். அஞ்சாப்பு படிக்கிறப்ப பள்ளிக்கூடத்துல நாடகம் போடுவோம். அந்த நாடகத்துக்கு எழுத்து, இயக்கம் எல்லாமே நான்தான். நாடகத்துல நெறைய ஜோக் இருக் கும். அது எல்லாமே ஆனந்த விகடன்ல இருந்து உருவினதுதான். அது தெரியாத மாதிரி நாடகத் தோட கதையில போறபோக்குல  ஜோக்கைச் சொருகி நகாசு பண்ணிடுவேன்.

என் ஊர் - ஒண்ணாம் தேக்கு...ரெண்டாம் தேக்கு !

ஊர்ப் பசங்க எல்லாரும் சேர்ந்து 'இளைஞர் நற்பணி மன்றம்’ ஆரம்பிச்சோம். ஒரு தடவைத் தாமிரபரணி ஆத்துல வெள்ளம் வந்து வாய்க்கால் மடை வழியாகப் பக்கத்துல இருக்கிற ஆத்தாம்பள்ளம் ஊருக்குள்ள வெள்ளம் போயிடுச்சு. மடையைச் சுத்தி போலீஸ் ஆபீஸர் ராஜேஷ்தாஸ் தலைமையில் நிறையப் போலீஸ் காரங்க மடையை  அடைக்கிற பணியில இருந்தாங்க. நான் அவர்கிட்டே போய், 'சார் நான்  உள்ள இறங்கி அடைக்கட்டுமா’னு கேட்டேன். உடனே அவரு 'நீ சின்னப் பையன் மடையை அடைக்கப் போறீயா.. ஒடுலே’ன்னு விரட்டுனாரு. விடாப்பிடியா 'எனக்கு முங்கு நீச்சல் தெரியும், நான் எப்படியாவது அடைச்சுருவேன்’னு சொன்னேன். தயக்கத்தோட என் உடம்புல கயித்தைக் கட்டி இறக்கிவிட்டாரு.  ஒவ்வொரு கல்லாக் கொண்டுபோய் மடையை அடைச்சேன். மறுநாள் பேப்பர்ல என்னைப் பத்தி பெருமையாகப் போட்டு இருந்தாங்க.

என் ஊர் - ஒண்ணாம் தேக்கு...ரெண்டாம் தேக்கு !

எங்க ஊர்ல எல்லார் வீட்டுலயும் வேப்ப மரம் உண்டு. அதுல வேப்பம் பழம் பறிச்சுக் காயவச்சு ஒரு படி அறுபது பைசாவுக்குவித்துரு வோம். அந்தக் காசை எல்லாம் சேத்து வெச்சுக் குற்றாலம் டூர் போவோம். அங்கே 'முன்ன பின்னத் தெரியாத யார்கிட்டேயாவது பேசி அவங்களைச் சிரிக்கவைக்கணும்’னு நம்ம நட்புங்க 50 ரூபா பந்தயம் கட்டுவாங்க. பெரும்பாலும் நான்தான் ஜெயிப்பேன். அப்பு றம் 'காமராஜர் கலைக் குழு’னு ஆரம்பிச்சு நாசரேத், சாயர்புரம், நடுவக்குறிச்சினு பக்கத்து ஊர்கள்ல போய் நாடகம் போடுவோம். ஊர்ல அண்ணாச்சி ஒருத்தர் இருந்தாரு. 'மக்கள் மேம்பாட்டு மன்றம்’னு நாடகக் குழு வெச்சிருந்தார். அவரு நாடகத்துல என்னைச் சேர்க்க மாட்டாரு. விடாப்பிடியா கேட்டதால ஒரு தடவை வில்லன் வேஷம் கொடுத்தார். கதைப்படி கதாநாயகியைக் கடத்தி வந்து, கட்டிப்போட்டு, பீடிப் புகையைக் கதாநாயகி முகத்துல ஊதணும். நானும் அதே மாதிரி தத்ரூபமா நடிச்சேன். நாடகத் தைப் பாத்துட்டு இருந்த ஒரு பாட்டி கொந்தளிச்சிருச்சு. 'பேதி யில போறவன்... கொள்ளையில போறவன்.. பொட்டப்புள்ள மூஞ்சியில பீடியைக் குடிச்சு ஊதுறாம் பாரு’னு கல்லெடுத்து எறிய ஆரம்பிச்சிடுச்சு. ஸ்டேஜ்ல இருந்து எகிறி எஸ்கேப் ஆகிட்டேன். அந்த நாடகத்துல என் நடிப்புக்காக எனக்குச் சிறந்த நடிகர் விருது கொடுத்தாங்க.

என்னை வளர்த்த திருவழுதிநாடார்விளையை இப்போப் பார்க்கறதுக்கு எனக்குச் சங்கடமா இருக்கு. நான் படிச்ச பள்ளிக்கூடம் இப்போ கோயில் சாமான்களைப் போட்டு வெக்கிற குடோனா மாறிக்கிடக்கு. ஆத்துல இருந்த மணலையெல்லாம் அள்ளிட்டதால, தண்ணி ஓடுற திசையே மாறிப் போய்ட்டு.  மரங்களெல்லாம் அழிஞ்சு, வெறும் 200  மரங்கள்தான் இருக்கும். தூர் வாராம விட்டதால பனை மரம் அளவு  இருந்த ஆத்தோட ஆழம் ஏழெட்டுஅடியாகக் குறைஞ்சி ருச்சு. சென்னையிலேயே செட்டில் ஆகிட்டதனால கோயில் பிரதிஷ்டை, கிறிஸ்துமஸுக்கு மட்டும் ஊருக்கு வருவேன். பழைய நினைவுகள்தான் என்னை இன்னமும் ஊரை நேசிக்க வெச்சுக்கிட்டே இருக்கு!''

என் ஊர் - ஒண்ணாம் தேக்கு...ரெண்டாம் தேக்கு !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு