Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : சு.வெங்கடேசன், சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர்படம் : பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி

பிரபலங்கள்   விகடனுடனான  தங்களின்  இறுக்கத்தை, நெருக்கத்தை,   விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும்    பக்கம்!

##~##

ங்கள் ஊரில் புதிதாகத் திறக்கப்பட்ட ராமர் சலூன் மூன்று பக்கமும் கண்ணாடிகள்  சூழ்ந்த கடை. அதுவும் ரங்கூன் கண்ணாடிகள். கண்ணாடிகளில் அழகான சாமி படங்கள் நிறைந்திருக்கும். வசீகரம் மிக்க அழகோடு தெய்வங்களை முதன்முதலாகப் பார்த்தது அங்குதான். அதுவும் எதிரில் மாட்டி இருக்கும் லட்சுமி படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

தீபாவளியை முன்னிட்டு எங்களை ராமர் சலூனுக்கு அழைத்துச் சென்றார் அப்பா. உள்ளே நுழைந்தபோது கடைக்காரர் லட்சுமி படத்தைக் கீழே இறக்கிக் கண்ணாடியைக் கழற்றிக்கொண்டு இருந்தார். மேஜையில் இருந்த ஆனந்த விகடனை எடுத்து அதில் வந்திருந்த குத்துச்சண்டை வீரர் தாராசிங்கின் விதவிதமான படங்களை லட்சுமியின் மீது திறந்துவைத்தார். 'பத்து வருஷத்துக்கு முன்னாடி மதுர தமுக்கத்துல தாராசிங்கோட மல்யுத்தப் போட்டி நடந்துச்சு. ஊருல இருந்து மொத நாளே போய்ட்டேன். ஆனா, குறைஞ்ச கட்டணமே ஒரு ரூபாய்னுட்டாங்க. மனுஷனைப் பார்க்க முடியாமலேயே திரும்பிட்டேன்’ என்ற ஆதங்கத்தோடு ஆசை ஆசையாகப் படத்தை நிரப்பினார்.

லட்சுமி இருந்த இடத்தில், திரண்டு இருந்த சதைகளோடு புடைப்புச் சிற்பமாக தாராசிங் உருவாகி சட்டகத்தில் தொங்கினார். இப்படித்தான் கடவுளை மறைத்து அல்லது மறுத்து ஆனந்த விகடன்

நானும் விகடனும்!

எனக்கு முதன்முதலில் அறிமுகமானது.

எங்கள் ஊரில் பத்திரிகைகள் இருக்கும் ஒரே இடம் நூலகம் மட்டும்தான். அங்கு என்னை ஈர்த்தது ஆனந்த விகடன் மட்டுமே. பக்கம் பக்கமாகத் திருப்பிப் படம் பார்ப்பேன். கொஞ்ச நாளில் விகடன் தாத்தா எங்களோடு வர ஆரம்பித்தார். தாத்தாகூடக் கண்ணாடி போடுவாரா என்று வியப்போடு நாங்கள் பேசிக்கொண்டோம்.

மேல்நிலைப் பள்ளிப் பருவத்தில் கவிதைகளில் ஈடுபாடு அதிகமானது. பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில் த.மு.எ.ச. (இப்போது த.மு.எ.க.ச.) நடத்திய இலக்கியக் கூட்டம் ஒன்றுக்கு கவிதை வாசிக்க நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். கவிதை வாசிப்புக்குப் பின் சிறப்புரை ஆற்றியவர் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார். 'இது ஆனந்த விகடன் ஆசிரியரின் பிரச்னை மட்டுமல்ல. அனைத்து எழுத்தாளர்கள், கலைஞர்களின் பிரச்னை. ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால். எழுத்துரிமையைக் குழி தோண்டிப் புதைக்கும் செயல். விகடன் ஆசிரியர் மீதான தண்டனையை ரத்து செய்யாவிட்டால், எழுத்தாளர்கள்... கலைஞர்களாகிய நாங்கள் போராடுவோம்!’ என்று கூறிப் பேச்சை முடித்தார்.

விகடனுக்கும் குத்துச்சண்டைக்குமான உறவை ஒரு தொடர்கதையைப் போல நான் உணர்ந்தேன். இரண்டு நாட்களுக்குப் பின்,

'தமிழக அரசே

எழுத்துரிமையில் கை வைக்காதே

விகடன் ஆசிரியர் மீதான

அநீதித் தீர்ப்பை ரத்து செய்!’

என்று அச்சடிக்கப்பட்ட போஸ்டரை ஒட்ட நாங்கள் புறப்பட்டோம். காதல் கவிதை வாசிக்க வந்தவனின் கையில் பசைச் சட்டியைக் கொடுத்தது விகடன் செய்த முக்கியப் பணிகளில் ஒன்று. எழுத்துரிமை சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னையை எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கும்போது நாம் போய் காதல் கவிதையைப் படித்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு என்னைக் குடைந்துகொண்டே இருந்தது. எனவே, கண்டன போஸ்டர் ஒட்டப்போவதாக கிளைத் தோழர்கள் சொன்னபோது, மிகுந்த ஆவேசத்தோடு கிளம்பிப்போனேன்.

போஸ்டர் ஒட்டிய அந்தத் தோழர் வாள் வீசியபடி இருக்கும் 'நாடோடி மன்னன்’ எம்.ஜி.ஆரின் படத்தைக் கையில் பச்சை குத்தி இருந்தார். பசை தடவும் நேரத்தில் சின்னச் சின்ன கேள்விகளை வேகமாகக் கேட்பார். ஒரு இடத்தில் பீடியைப் பற்றவைத்தபடி 'ஏன் தோழர், அந்த பாலசுப்பிரமணியன் அவ்வளவு பெரிய ஆளா?’ என்று கேட்டார். அவர் கையில் இருந்த படத்தில் இருந்து கத்தி நழுவிக் கீழே விழுந்துகொண்டு இருந்தது.

அது வரை பெட்டிக் கடையின் குறுக்குக் கம்பியில் தொங்கிக்கொண்டு இருந்த விகடன், அதன் பின் பசையோடு சேர்ந்து கைகளில் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது.

90-களில் முழு நேர அரசியலில் தீவிரச் செயல்பாட்டாளனாக இயங்க ஆரம்பித்த காலத்தில், வெகுஜன ஊடகங்களின் செயல்பாட்டுக்கு எதிரான மனநிலையே இருந்தது. அதனையும் மீறி ஆனந்த விகடனை அவ்வப்போது கவனிக்கவைத்தவர்கள் எழுத்தாளர்கள் சுஜாதாவும் கி.ரா-வும்.

97-ம் ஆண்டு ஏப்ரல் மாத அதிகாலை ஒன்றில் மதுரை வில்லாபுரத்து வீதியில் எங்கள் தோழர் லீலாவதி வெட்டிச் சாய்க்கப்பட்டார். கொலை நடந்து மிகக் குறுகிய நேரத்துக்குள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். அதன் பின் பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். வெட்டப்படும்போது தடுக்க முயற்சித்த அந்த வீராங்கனையின் இடது கை விரல் ஒன்று தனியாகக்கிடந்தது. நீண்ட நேரத்துக் குப் பின்னர்தான் அதனைக் கவனித்தோம். ரத்தம் மண்ணுக்குள் இறங்கியபோது அந்த உடல், அரசியல் களத்தில் மேலெழுந்து வந்தது. அதிகாரவர்க்கம், ஆளும் கட்சி, சமூக விரோதிகள் என மூவர் கூட்டின் கோர முகம் அந்தக் கொலை. சே குவேரா வின் வெட்டப்பட்ட கையும் லீலாவதி யின் துண்டிக்கப்பட்ட விரலும் எங்கள் ரத்தத்தைக் கொதிப்புடனேயே வைத்திருந் தன. 'தியாகிகள் ஆவதற்கு அல்ல... வீரர் கள் ஆவதற்குத்தான் வாழ்கிறோம்’ என்று திமிறிய உறுதிப்பாட்டோடு மதுரையின் வீதிகளில் அலைந்து திரிந்தபோது நாங்கள் தனித்துவிடப்படவில்லை என்ற உணர்வை ஏற்படுத்தியதில் பத்திரிகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதில் ஆனந்த விகடன் தனித்துவம் மிக்க பங்களிப்பைச் செய்தது. நீண்ட காலத்துக்குப் பின் விகடனை மிக நெருக்கமாக உணர்ந்த கணம் அது.

2000-த்துக்குப் பின் வணிக வெளியில் இலக்கியக் கனத்தை அதிகப்படுத்தியதன் மூலம் தனக்கென்று ஒரு புதிய வடிவத்தை விகடன் உருவாக்கிக்கொண்டது. தனது வாசக ரசனையின் தரத்தைவிடக் குறைவான எழுத்துகளை அது அச்சேற்றியது இல்லை. அதே நேரத்தில், அதைவிடச் செறிவான எழுத்துகளைப் படித்த ஞாபகம் இல்லை. தன்னுடைய பாதையைப் பற்றிய தெளிவின் அடையாளமாக இதனைப் பார்க்கிறேன்.

1960 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின், தமிழ்ப் பத்திரிகைகள் மிகக் காத்திரமான செயல்களமாக விளங்கிய இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டன. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஈழப் பிரச்னையை விகடன் கையாண்ட முறை அசாத்தியமானது. தமிழ் மக்களின் அறச் சீற்றமென அது அடையாளப்பட்டது. பிரதான எதிர்க் கட்சியின் பணியை விகடனின் கட்டுரைகள் நிறைவேற்றிக்கொண்டு இருந்தன. முள்ளிவாய்க்கால் சூழப்பட்ட கனத்தின் வெப்பத்தைத் தமிழ் மண்ணில் உணரவைத்தது அதன் எழுத்துகள். தேர்தல் முடிவை உருவாக்கிய இடங்களில் ஒன்றாக விகடன் அலுவலகமும் இருந்தது. ஆனால், அதற்குக் கைம்மாறு கோரிக்கொண்டு இராமல் அடுத்த இதழிலேயே த்ரிஷாவின் படத்தை அட்டையில் போட்டபடி அது தனது பயணத்தைத் தொடர்ந்துகொண்டு இருந்தது.

நானும் விகடனும்!

நான் எழுதிய 'காவல் கோட்டம்’ நாவல் 2008-ம் ஆண்டுக்கான விகடனின் சிறந்த நாவலுக்கான அங்கீகாரத்தைப் பெற்றது. தொடர்ந்து 2009-ம் ஆண்டு மூன்று விருதுகளும் 2010-ம் ஆண்டு கனடா இலக்கியத் தேட்டம் அமைப்பின் விருதும் 2011-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும் 'காவல் கோட்டம்’ நாவலை வந்தடைந்தது. எனது நாவலை நோக்கி விருதுகளின் வருகையைத் துவக்கிவைத்தது ஆனந்த விகடன். புதியவற்றோடு தன்னை இணைத்துக்கொள்வதில் அதனது கட்டற்ற வேகத்தின் அடையாளமாகவே இதனை நான் காண்கிறேன்.

என்னுடைய நாவலின் சிறு பகுதி 'அரவான்’ படமாக உருவானபோது விகடன் அதற்குத் தந்த முக்கியத்துவமும் காவல் கோட்டம் மிகப் பரவலான வாசக கவனத்தைப் பெறுவதற்கு விகடன் துணை நின்றதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

'இன்பாக்ஸ்’ முதல் 'இன்று... ஒன்று... நன்று!’ வரை எல்லாவித ரசனைக்குமான இடமுமாக விகடன் இருக்கிறது. வடிவமைப்புக் கலைஞர்களும் புகைப்படக் கலைஞர்களும் விகடனின் பக்கத்தை நகர்த்தவிடாமல் நிறுத்த முயற்சிக்கிறார்கள். அதன் எழுத்தாளர்களோ, நிறுத்தவிடாமல் நகர்த்த முயற்சிக்கிறார்கள். இந்த முரண் சுவையே விகடனின் அழகு!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு