Published:Updated:

’பெண்ணொன்று கண்டேன்!’

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - வேலூர்

''பெண் பார்க்கப் போன மறக்க முடியாத அனுபவத்தைச் சொல்லுங்களேன்...'' என்று இவர்களிடம் கேட்டபோது...

’பெண்ணொன்று கண்டேன்!’

டில்லி, குளிர்பானக் கடை உரிமையாளர்:

''அம்மா, அப்பாவோட குடியாத்தம் பகுதியில் பொண்ணு பார்க்கப் போனோம். இரண்டு மணி நேரமா பொண்ணைக் கண்ணுல காட்டவே இல்லை. போதாக்குறைக்கு அஞ்சு டீக்கு மேல குடுத்துட்டாங்க. எனக்கு உள்ளுக்குள்ள ஏகக் கடுப்பு. பொண்ணு அழகாத்தான் இருந்தாங்க. ஆனா, ஜாதகப் பொருத்தம் அமையல. ரெண்டாவதாப் பார்த்த பொண்ணுதான் இப்ப வரைக்கும் என் மேல அன்பா இருக்காங்க. என் மனைவியைத்தான் சொல்றேங்க!''

குப்புசாமி, சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்:

''ஏற்கெனவே அறிமுகமான என் அத்தைப் பொண்ணைத்தான் பொண்ணு பார்க்கப் போனோம். இருந்தாலும் அந்தத் தருணத்தை மறக்க முடியாது. எப்பவும் என்கிட்ட சிரிச்சுப் பேசுறப் பொண்ணு அன்னிக்கி ரொம்ப அடக்கமா 'மாமா காபி குடிங்க’னு சொல்லிக் கொடுத்துட்டுப் போனாங்க. அப்போ காபியில் விழுந்தவன்தான். இன்னைக்கு வரைக்கும் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாப் போய்ட்டு இருக்கு!’'

மோகன், விவசாயி:

''திருமணம் மேல அக்கறை இல்லாம இருந்தவனை ஒருவழியா சமாளிச்சுக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. எனக்கு ஒருபக்கம் கோபம் இருந்தாலும் வெளியிலக்காட்டிக்காம அமைதியா பஜ்ஜி சாப்பிட்டுட்டு இருந்தேன். மின்னல் மாதிரி வந்து டீ கொடுத்தாங்க. சர்க்கரை கொஞ்சம் அதிகமா இருந்தது. இன்னைக்கு வரைக்கும் 'ஏன் டீயில் சர்க்கரை அதிகமா போட்டீங்க?’னு நான் கேட்கவே இல்லை!''

அசைன் பாட்ஷா, உணவக ஊழியர்:

''நல்ல நட்பு, நல்ல மனைவி இரண்டும் கிடைப்பது வரம் மாதிரி. அதுபோலதான் எனக்கும் அமைஞ்சு இருக்கு. எங்க வீட்டில் எல்லோரும் போய்ப் பொண்ணைப் பார்த்துட்டு வந்துட்டாங்க. ஆனா என்கிட்ட போட்டோவை மட்டும்தான் கொடுத்தாங்க. பார்த்தவுடன் முடிவு பண்ணிட் டேன். காலம் முழுதும் இவங்க கையாலதான் சாப்பிடணும்னு!''

ஜெய்சங்கர், செல்போன் சர்வீஸ் செய்பவர்:

''சின்ன வயசில் இருந்தே என் மாமாப் பொண்ணு உமாதேவியைதான் கல்யாணம் செய்யணும்னு உறுதியா இருந்தேன். வீட்டில் சொல்லி பொண்ணு பார்க்கப் போனோம். அமைதியா வந்து காபியைக் கொடுத்துட்டு கண்ணைப் பார்த்து சிரிச்சிட்டுப் போனாங்க. மின்னல் அடிச்சது மாதிரி இருந்துச்சி. அந்த மின்னல் இப்போ என் மனைவி!''

- கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்

’பெண்ணொன்று கண்டேன்!’
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு