Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

கேரன் க்ளைன் நியூயார்க் மாநிலத்தில் இருக்கும் கிரீஸ் என்ற நகரில் வசிக்கிறார். 68 வயதாகும் கேரனைச் சில வாரங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாது. இந்த வாரத்தில் கேரன் ஒரு குட்டிப் பிரபலம். அவர் பிரபலமாவதற்குத் தொடக்கமாக இருந்த சம்பவம் மனதை அழுத்துவதாக இருந்தாலும், அலைபேசி/இணையத் தொழில்நுட்பங்கள் மூலம் அவருக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு நெகிழ்ச்சியை வரவழைக்கிறது. என்ன, எப்படி நடந்தது?

 கேரனுக்கு 8 குழந்தைகள். அதில் ஒரு குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் நோய் வேறு. வயதாகிவிட்டாலும் கேரனுக்கு வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம். அவரது வேலை, அவர் இருக்கும் ஊரில் உள்ள பள்ளி மாணவர்களை வீட்டில் இருந்து பள்ளிக்கும் பள்ளியில் இருந்து வீட்டுக்குமாக அழைத்துச் செல்லும் பேருந்தில் அமர்ந்து மாணவர்களைக் கண்காணிக்கும் 'பஸ் மானிட்டர்’!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்கையில் அவர்களது பாதுகாப்புக்காக பள்ளி நிர்வாகம் இப்படி ஒரு கண்காணிப்பாளரை ஒவ்வொரு பேருந்திலும் வைத்திருக்கும். மாணவர்கள் யாராவது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ வீட்டிலோ, வெளியிலோ துன்புறுத்தப்பட்டதாகத் தெரியவந்தால், பேருந்து கண்காணிப்பாளர், பள்ளி நிர்வாகத்திடமோ அல்லது காவல் துறையிடமோ அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். கேரனுக்கு நடந்தது தலைகீழ்!

ஏழாவது படிக்கும் மாணவர்கள் நான்கு பேர், பேருந்தில் அமர்ந்திருந்த கேரனைத் தரக்குறைவாகப் பேசிக் கிண்டல் செய்து அவமதிக்க, முதலில் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல இருந்த கேரன் ஒருகட்டத்தில் கதறி அழ, இதைத் தனது அலைபேசி கேமரா மூலமாக காணொளியாக எடுத்துக்கொண்ட மற்றொரு மாணவர், அன்று மாலையே தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய, இந்தச் செயல் உலகுக்குத் தெரியவந்தது. சில நாட்களுக்குள் ஃபேஸ்புக், யூ டியூப் போன்ற பல சமூக ஊடகத் தளங்கள் மூலமாக லட்சக்கணக்கானவர்களுக்குத் தெரியவர, இதைச் செய்த நான்கு மாணவர்கள் மீது கடும் ஆத்திரமும் கேரன் மீது பரிதாபமும் பொதுக் கருத்தாக உருவெடுத்தது.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

பொதுமக்களிடம் இருந்து இணையத்தில் நிதி திரட்டும் க்ரௌட்ஃபண்டிங் (Crowdfunding)  தளம் ஒன்றில் கேரனுக்கு விடுமுறை அளிக்க 5,000 டாலர்கள் தேவை என்ற புராஜெக்ட் தொடங்கப்பட்டது. அந்த நான்கு மாணவர்களை ஒரு வருடம் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறது பள்ளி நிர்வாகம். அவர்கள் பேசிய தரக்குறைவான பேச்சுகளின் காரணமாக, அவர்களை அடித்து உதைக்கப்போவதாக வரும் மிரட்டல்கள் காரணமாக, அவர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை. கேரன் தொலைக்காட்சி சேனல்களில் பேட்டி எடுக்கப் படுகிறார். க்ரௌட் ஃபண்டிங் புராஜெக்ட் என்ன ஆனது என்ற கேள்வி வருகிறதா?

பொதுமக்கள் ஆதரவின் காரணமாக இரண்டு வாரங்களுக்குள் இதுவரை கிட்டத்தட்ட ஏழு லட்சம் டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டன. கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்குகையில் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் கேரனுக்கு இருக்காது.

இணையம் இல்லாதிருந்தால், இந்தச் சம்பவம் யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். குளியல் அறையில் கேமரா வைத்து வீடியோ எடுத்துப் பிரசுரிக்கும் கீழ்த்தரமான செயல்களுக்கும்கூட அலைபேசி, இணையத் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்பட்டாலும், இந்த நிகழ்வினைப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது... அலைபேசி இணையத்தின் வலிமையில் வெகு விரைவில் குடிமக்கள் இதழியல் (Citizen Journalism)  என்பது வலுவானதாக மாறப்போகிறது. தெருவில் பள்ளமும் குழியுமாக இருக்கிறது என்பதில் இருந்து, ராணுவ ஊழல் வரை அம்பலப்படுத்த இது உதவலாம். பிரபலமாகிவரும் க்ரௌட் ஃபண்டிங் பற்றி ஆழமாக இன்னொரு வாரம் பார்க்கலாம்.

சென்ற வாரம் இன்ஸ்டாகிராம் (Instagram),  நெட்ஃபிளிக்ஸ் (Netflix), ரெட்டிட் (Reddit) போன்ற பிரபல வலைதள மற்றும் அலைபேசிச் சேவை கள் பல கிட்டத்தட்ட ஒரு நாள் முழுதும் இயங்கவில்லை. காரணம், அமேசான்!

அமேசானே பொருட்கள் விற்கும் ஒரு வலைதளம்தானே என்ற கேள்வி எழுந்தால், நீங்கள் இந்தத் தொடருக்குப் புதிய வாசக ராக இருக்க வேண்டும். காரணம், அமேசான் பொருட்களை விற்கும் மின் வணிகத்தைவிட (e-commerce) அதிகம் சம்பாதிப்பது அவர்களது இணையக்கூறு சேவைப் பிரிவில்  ( Amazon Web Services )  இருந்துதான். அதில் நிகழ்ந்த மின்சாரக் கோளாறே பல சேவைகளை முடக்கியது.

மேகக் கணினியச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் முதல் இடத்தில் இருக்கும் அமேசானின் உள்கட்டமைப்பைப் பயன் படுத்தி, பிரபலமான பல வலைதளங்கள் இயங்குகின்றன. மேகக் கணினிய சேவை என்பதால், பயன்படுத்துவதற்குத் தக்க பணம் கொடுத்தால் போதும் என்பதால் புதிய நிறுவனங்கள் அமேசானைப் பயன்படுத்த விருப்பம் காட்டுகின்றன. இணைய உலகில் சிறிய நிறுவனங்கள், சில தருணங்களில் கிடுகிடுவென இமாலய வளர்ச்சி அடைந்துவிட்டாலும், அவர்களது உள்கட்டமைப்பை எளிதாக மாற்ற முடிவது இல்லை. உதாரணத் துக்கு, இன்ஸ்டாகிராமையே எடுத்துக்கொள்ளலாம். ஆப்பிளின் ஐ-போனில் ஒரு மென்பொருள் என்றிருந்த துக்கடா தொழில்நுட்பம், தொடங்கப்பட்ட இரண்டு வருடங்களுக்குள் பில்லியன் டாலர்களுக்கு மதிப்பிடப்பட்டு ஃபேஸ்புக்கால் வாங்கப்பட்டது. இது நடந்து பல மாதங்கள் ஆன பின்னரும் இன்ஸ்டாகிராம் அமேசானில் இருக்கும் தங்களது உள்கட்டமைப்பையே தொடர்ந்து பயன்படுத்திவருகிறது.

பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகளில் அதிகம் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளாமல் அமைதி காக்கும் அமேசான், இந்த நிகழ்வில் என்ன, எப்படி நடந்தது என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறது. இதைத் தெரிந்துகொள்வது அவசியம் என நினைத்தால், சூடான டீ போட்டுக்கொண்டு, இந்த உரலியைச் சொடுக்குங்கள் http://aws.amazon.com/message/ 67457/

log off

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு