Published:Updated:

மாஜி கொள்ளைக்காரர் மேஜிக் ஷோ நடத்துகிறார்!

அரவரசன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

11 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1972-ம் ஆண்டு, கல் மனம்கொண்ட 180 சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரர்கள், தங்களது ஆட்கொல்லி ஆயுதங்களை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பாதங்களில் சமர்ப்பித் ததையும் மறுவாழ்வு பெற்றதையும் அறிந்திருப்பீர்கள். ஆனால், கொள்ளைக் காரர் மாதோ சிங்கின் முயற்சியினால்தான் மற்ற கொள்ளைக்காரர்கள் சரணடைந்தார்கள் என்பதைச் சிலரே அறிவர். இவர், கொள்ளைக்காரர்களால் துன்பப்படும் ஒரு மர வியாபாரிபோல வேஷமிட்டு வினோபாஜியையும் ஜே.பி-யையும் சந்தித்த நிகழ்ச்சிகள் சுவையானவை.

 மாதோ சிங்கின் தலைக்கு அரசு 1.5 லட்சம் ரூபாய் பரிசு வைத்திருந்தது என்றால், மாதோ சிங் எத்தனை பயங்கரமானவர் என்பது புரியும்.

''வணக்கம் மிஸ்டர் மாதோ சிங்... உள்ளே வரலாமா?''

''வணக்கம். வாருங்கள், உட்காருங்கள்!'' தன் இரு கரங்களையும் அன்பாக நீட்டினார்.

அந்தக் கரங்களை நான் அணைத்தவுடன் எனக்கு 'ஷாக்’ அடித்தது. என் கரங்கள் நடுங்கின. மாதோ சிங்கின் கைகளை மனம் விமர்சனம் செய்தது.

மாஜி கொள்ளைக்காரர் மேஜிக் ஷோ நடத்துகிறார்!

'துப்பாக்கியை இயக்கி நிறைய குடும்பங்களைக் கொன்று குவித்திருக்கும் கரங்களாயிற்றே... மணமான பெண்களை மானபங்கம் செய்துள்ள மட்டமான கரங்களாயிற்றே... குடும்பப் பெண் களின் குங்குமத்தை அழித்த அக்கிரமக் கரங்கள் ஆயிற்றே... அராஜகத்தினால் அரசாங்கத்தையே ஆட்டுவித்த கரங்களாயிற்றே. அந்தக் கரங்கள் செய்யாத பாவம் இல்லை. ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால், இன்று... இப்போது?

தற்போது அந்தக் கரங்கள் பிராயச்சித்தமாகப் புரியும் பணிகளை எண்ணினேன்... தற்போது பல குடும்பங்களை அரவணைத்துப் பாதுகாக்கும் கரங்கள்... கணக்கற்ற ஏழைப் பெண்களுக்கு மணம் செய்வித்து மகிழும் கரங்கள்... அநாதை இல்லங்கள், ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என்று பொதுப் பணிகளுக்கு லட்சக் கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுக்கும் அருங்கரங்கள்...

தோன்றி வரும் புதிய கொள்ளைக்காரர்களின் உள்ளத்துக்குப் புத்தி புகட்டி, புதிய பாதையைக் காட்டும் கருணைக் கரங்கள்... முதலில் கொள்ளைக் காரனாக இருந்து, பிற்பாடு பக்திமானாக மாறிய திருமங்கை ஆழ்வாரின் வாழ்க்கை என் நினைவுக்கு வந்தது. திருடனாகவும் வேடுவனாக வும் இருந்து, பின்னால் மாமுனியாக மாறிய வால்மீகியை நினைத்துக்கொண்டேன். உரையாடலைத் தொடங்கினேன்.

''தங்களைச் சில கேள்விகள் கேட்க விரும்பு கிறேன். பதில் கூறுவீர்களா?''

''தாங்கள் என்ன புதிதாகக் கேட்கப்போகிறீர் கள்? என் பழைய வாழ்க்கையைப் பற்றித்தான் அநேகமாக இருக்கும். நான் கொள்ளைக்காரனாக மாறக் காரணம் வறுமை. ஏழ்மையின் பிடியில் சிக்குண்டு தவித்த எங்களையும் எங்கள் நிலத்தை யும் பணக்காரர்கள் ஏமாற்றி வஞ்சகமாக அபகரித்துக்கொண்டனர். ஒரு நாள் இந்த ஆத்திரம் தாங்காமல் அவர்களைக் கொலை செய்தேன். தண்டனைக்குப் பயந்து சம்பல் பள்ளத்தாக்கில் அடைக்கலம் புகுந்தேன். என் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ள, கொள்ளைக் காரனாக மாறுவதைத் தவிர, வேறு வழி ஒன்றும் அப்போது எனக்குப் புலப்படவில்லை!''

மாஜி கொள்ளைக்காரர் மேஜிக் ஷோ நடத்துகிறார்!

''அந்த மாதிரி எவ்வளவு ஆண்டுகள் வாழ நேர்ந்தது? தங்கள் கைவரிசையைக் காட்டிய பிரதேசங்கள் எவை?

''13 ஆண்டுகள் அவ்வாறு வாழ்ந்த நான், சுமார் 10 ஆயிரம் கொள்ளைகளை நடத்தி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சம் 11 லட்சம் ரூபாய் வரை நகைகளாகவோ, ரொக்கமாகவோ கிடைத்தன. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகியவை நான் திரிந்த மாநிலங்கள். கொள்ளை அடித்த பின், ஒரு மாறுதலுக்காக நான் மாத்திரம் கல்கத்தாவோ, பம்பாயோ, காஷ்மீரோ செல்வது வழக்கம்.''

''தங்களுக்கு மணமாகிவிட்டது அல்லவா?''

(சிரித்துக்கொண்டே) ''ஒரு முறை அல்ல; இரு முறை! முதல் மனைவி குழந்தைகளோடு முரேனாவில் வசித்துவருகிறாள். இரண்டாவது மனைவி ஓம்பிரகாஷிக்கு இரு குழந்தைகள். பஞ்சாபில் அவளுக்கு ஒரு பங்களா கட்டிக் கொடுத்து இருக்கிறேன்.''

''ஆம், இப்போதுதான் எனக்கும் ஞாபகம் வருகிறது. மீனா என்ற மலை சாதியைச் சார்ந்த அவர் பெயர் கட்டோரி என்றும் நல்ல அழகி என்றும், நவநாகரிகமாக உடை உடுத்துவார் என்றும் எங்கேயோ படித்ததாக ஞாபகம். இந்த இரண்டாவது மணம் காதலில் மலர்ந்ததுதானே?''

''ஆமாம். பிறகு, அவள் என்னுடனேயே இருந்ததால் குதிரைச் சவாரி, துப்பாக்கி சுடுவது முதலியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றாள். என்னைப் பற்றி திரைப்படம் தயாரிக்கப் போவதாக அவளிடம் கூறி, முன்பணமாக ஐயாயிரம் ரூபாயை ஒருவன் வாங்கிச் சென்றான். படம் உருவாகவில்லை; பணம் பெற்றவனும் நழுவிவிட்டான்; ஓம்பிரகாஷியா அவனை விட்டுவிடுவாள்? அவன் குடும்பத்தையே கடத்தி வந்து விட்டாள். ஐம்பதாயிரம் ரூபாயை மீட்புப் பணமாகப் பெற்ற பின்தான் அவர்களை விடு வித்தாள். அவ்வளவு சாமர்த்தியசாலி அவள்.''

மாஜி கொள்ளைக்காரர் மேஜிக் ஷோ நடத்துகிறார்!

''தங்களது பழைய வாழ்க்கையில் நடந்த பயங்கர நிகழ்ச்சி ஒன்றைக் கூற முடியுமா?''

''கொள்ளைக்காரன் வாழ்வில் ஒவ்வொரு கணமும் பயங்கரமாகவே இருக்கும். ஒரே இடத்தில் தங்கி இருந்தால், அவனுக்கு எப்போதும் அபாயம். அலைந்துகொண்டோ, ஓடிக்கொண்டோதான் இருக்க வேண்டும். மழை, வெயில், குளிர், பனி இவற்றைப் பொருட்படுத் தவே கூடாது. உடலும் உள்ளமும் பாறை மாதிரி கெட்டியாகவே இருக்க வேண்டும். போலீஸ் எப்போது பிடித்துவிடுமோ என்ற பீதி அவனைத் தொடர்ந்துகொண்டே இருக்க, மறுபுறம் வெற்றிகரமான கொள்ளைக்குத் திட்டம் தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். கொள்ளையைத் தொடங்கும் முன் உதவியாளர்களுக்குப் பெரும் விருந்து படைக்கவும், தோட்டாக்கள் வாங்கவும் ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். கைவசம் ஆயிரக்கணக்கில் பணம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். கொள்ளையில் எதிர்ப்பு ஏற்பட்டால், கொலை செய்யத் தயங்கக் கூடாது. மனிதாபிமானம் தலை தூக்கவே கூடாது.''

''அது சரி, எப்போதாவது இக்கட்டான நிலைமை ஏற்பட்டு மாட்டிக்கொண்டது உண்டா? அதை எப்படிச் சமாளித்தீர்கள்?''

''பல இருக்கின்றன. சுமார் 275 முறை நேருக்கு நேர் போலீஸாருடன் மோதி இருக்கிறேன். ஒரு முறை தொடர்ச்சியாக 28 மணி நேரம் போலீஸ் படையுடன் தோட்டாக்கள் பரிவர்த்தனை நடந்தது. ஏழு முக்கிய நபர்கள் எங்கள் குழுவில் இறந்துவிட்டனர். எங்கள்  தோட்டாக்களும் காலியாகிவிட்டன. தலை தப்பினால் போதும் என்று பக்கத்தில் இருந்த சம்பல் நதியில் குதித்து, நதியோடும் திசையில் வெகு தூரம் வரை அமிழ்ந்தே சென்றோம். மெஷின் கன்களில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்களும் நதியில் உள்ள முதலை களும் எங்களைத் துரத்தின. அன்று குழாமில் 46 பேர் இருந்தனர். இறுதியில் நான் 8 பேருடன்தான் தப்ப முடிந்தது. மற்ற யாவரும் இறந்துவிட்டனர்.''

மாஜி கொள்ளைக்காரர் மேஜிக் ஷோ நடத்துகிறார்!

''கேட்கவே பயங்கரமாக இருக்கிறது. வேறு சம்பவம் ஏதாவது கூற முடியுமா?''

''எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். 7.5 லட்சம் பணம் ரொக்கமாக ஒரு ஜமீன்தாரிடம் இருப்பது எனக்குத் தெரியவந்தது. அந்தப் பொக்கிஷம் கிடைத்தால் பெரிய வெங்கல மணி வாங்கிக் கட்டுவதாக ஒரு காளி கோயிலுக்குப் பிரார்த்தனை செய்துகொண்டேன். பிரார்த்தனை வெகு சுலபமாகப் பலித்துவிட்டது. ஒரு திருவிழாவில் மணி கட்டத் தீர்மானித்தேன். அந்தச் சமயம் என்னோடு மோதாமல் இருக்க, அந்த மாவட்ட டி.எஸ்.பி-க்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தேன்.

அன்று ஏகக் கூட்டம். என் கையால் சந்நிதியில் மணியைக் கட்டிவிட்டு, அம்மனைக் கரம் குவித்து வணங்கினேன். அப்போது என் விலாவில் ரிவால்வர் பதிவதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தால் டி.எஸ்.பி!

இளைஞரான அவர் ரொம்பத் துடிப்பாகக் காணப்பட்டார். முகத்தில் வெற்றிப் பெருமிதம். நான் திகைத்தேன். ஆனால், தைரியத்தை இழக்கவில்லை. 'என்னைக் கைதுசெய்தாலோ அல்லது சுட்டாலோ நீங்கள் வீடு போய்ச் சேர மாட்டீர்கள்’ என்று சீறினேன். அவர் மசியவில்லை. கோயிலைச் சுற்றி போலீஸ் சூழ்ந்துள்ளது என்றார். அது எனக்கு முன்பே தெரியும் என்றும் ஒவ்வொரு போலீஸ் ஜவானின் பின்புறம் என் இரு ஆட்கள் துப்பாக்கி, ரிவால்வர் இவற்றைத் தங்கள் ஆடையில் மறைத்துக்கொண்டு கண்காணிக்கிறார்கள் என்றும், ஒரு வேட்டுச் சத்தம் கேட்டால், அவர்கள் எல்லோரும் அடுத்த நிமிஷமே குளோஸ் என்றும் கூறினேன். என் வார்த்தையில் நம்பிக்கை இல்லாவிட்டால் வெளியில் போய்ப் பார்த்து வரும்படி கூறினேன்.

எனக்குத் தகுந்த காவலைப் போட்டுவிட்டு, வெளியில் போய்ப் பார்த்துத் திரும்பிய டி.எஸ்.பி-யின் முகம் தொங்கிவிட்டது. என்னை விட்டுவிட்டால் தன் வேலையை இழக்க நேரிடும் என்று கூறி வருத்தப்பட்டார். என்னைக் கைது செய்தாலோ, போலீஸார் பலர் உயிர் இழப்பதுதான் மிச்சம். தர்மசங்கடமான நிலை என்று அவர் கூறவே, நான் ஒரு யோசனை சொன்னேன். என்னைச் சற்று ஓட விடுங்கள், முடிந்தால் பிடியுங்கள் அல்லது கொன்றுவிடுங்கள். நான் தயார் என்றேன். அவரும் சம்மதித்தார். நான் தப்பிப் பிழைக்க அந்தப் பெருங்கூட்டம் ஒருவிதத்தில் சாதகமாக இருந்தும் 36 ஆட்களை அன்று நான் இழந்துவிட்டேன்.''

''இப்படியெல்லாம் சாகசங்கள் புரிந்து இருந்தும் முடிவில் தாங்கள் சரணடைந்துவிட்டீர்களே, அதற்கு என்ன காரணம்?''

''அதற்கு முக்கியக் காரணம், என் மன சாட்சி! பல கொலைகள், கொள்ளைகள்... நான் பெரும் பாவியாகிவிட்டேன். நாளுக்கு நாள் அந்த வாழ்வில் என் பிடி தளரலா யிற்று. போலீஸ் நெருக்குதல் இறுகலா யிற்று. மடிவதைத் தவிர, வேறு மார்க்கம் இல்லை என்ற நிலை. அப்போதுதான் ஜே.பி-யின் அப்பீல், பி.ஸி.சேத்தியின் (முதலமைச்சர்) உறுதிமொழி, இந்திரா காந்தியின் வாக்குறுதி ஆகியவை எங்களை வாழவைக்க வழிகாட்டின. இதனால் சத்தர்பூர், தத்தியா, முரேனா மாவட்டங் களில் திரிந்துவந்த சுமார் 521 கொள்ளைக் காரர்கள் தங்கள் ஆயுதங்களைத் துறந்து விட்டு, ஜே.பி-யிடம் சரண் அடைந்தனர். அதில் நானும் ஒருவன்.''

''சரண் அடைந்த பின்னர், வாழ்க்கை யைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''ஆரம்பத்தில் இருந்தே வாழ்க்கையை வெறுத்தவன் நான். கொள்ளைக்காரனாக இருந்தபோது என் உயிருக்கு எப்போதும் ஆபத்து இருந்தது. அந்தப் பயம் நீங்கி இப்போது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம்.''

''தற்போது பல நகரங்களில் தங்களின் மேஜிக் ஷோ நடக்கிறதே, எதற்காக இதை நடத்திவருகிறீர்கள்?''

''சிறு வயது முதற்கொண்டே கலைகளில் எனக்கு ஆர்வம் உண்டு. அதுவும் மேஜிக் என்றால் எனக்கு ரொம்ப ஆசை. ஆனால், சம்பலைவிட்டு வெளியேறிய பின்தான் இதைக் கற்க முடிந்தது. வங்கத்தில் இருக்கும் குரு சங்கர் தாஸிடம் ஓர் ஆண்டுக் காலம் தங்கி இதைக் கற்றேன். வட இந்தியாவின் பல இடங் களில் என் ஷோ நடந்துள்ளது. என் பாவத்தைப் போக்கிக்கொள்ள ஒரு முறை ராமேஸ்வரத் துக்குப் போய் வர ஆசை. சந்தர்ப்பம் ஏற்பட்டால் அப்போது என் மேஜிக் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறலாம்.''

''கடைசிக் கேள்வி... ஆழ்ந்த அனுபவம்கொண்ட தங்களைப் போன்றவர்களும் ஆற்றல் மிகுந்த பல கொள்ளைக்காரர்களும் அதை அறவே உதறித் தள்ளி, சரணடைந்து புது வாழ்வு நடத்தும் இந்த நாட்களில், மீண்டும் மீண்டும் புதிய கொள்ளைக்காரர்களை சம்பல் பள்ளதாக்கு உருவாக்கிவருகிறதே... இதற்கு முடிவே இல்லையா?''

''இந்தக் கேள்வியைத்தான் நான் வெகு நேரமாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன். இதற்குக் கட்டாயம் ஒரு முடிவு காண முடியும். ஆனால், அரசு என்ன நினைக்கிறது தெரியுமா? கொள்ளைக்காரர்களைக் குண்டுகளால் தாக்கி, துப்பாக்கியினால் சுட்டுத் தள்ளி, தூக்கிலிட்டு, சிறையில் வைத்துச் சித்ரவதை செய்து அடக்கிவிடலாம் என்று நினைக்கிறது. யாருமே கொள்ளைக் காரர்களாகப் பிறப்பது இல்லை. சுற்றுபுறச் சூழ் நிலையும் சமூகமும் அரசாங்கத்தின் அலங்கோல மும்தான் சாதாரண ஏழை மனிதனைக் கொள்ளைக்காரனாக மாற்றுகின்றன.

சம்பல் பள்ளத்தாக்கில் வறுமை தாண்டவம் ஆடுகிறதே... சாதிப் பூசல்கள் சகஜமாகப் பரவி உள்ளதே... நிலச்சுவான்தார்களின் ஆதிக்கம் இன்னும் நீடித்து உள்ளதே... கொத்தடிமை முறை இன்னும் அங்கு குடிகொண்டு உள்ளதே... இவற்றை எல்லாம் வேரோடு ஒழித்து, அங்கு நிலவும் நீர்வளத்தினால் நிலவளத்தைப் பெருக்கி, பல தொழிற்கூடங்களை நிறுவி, ஏழ்மையை விரட்டினால் அப்புறம் கொள்ளைக்காரர்களே இருக்க மாட்டார்கள்.

இந்தத் திசையில் சென்ற சில ஆண்டுகளாகத் தான் அரசு ஊக்கம் காட்டிவருகிறது. ஆனால், அதன் பலன் அடிமட்டத்தை இன்னமும் தொட வில்லை. ஏன் தெரியுமா? வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. இதற்கான நிதியைக் கையாளும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அதைப் பங்கு போட்டுவிடுகின்றனர். இவர்களைவிடக் கேவலமானவர்களா புதிதாகத் தோன்றும் கொள்ளைக்காரர்கள்?'' 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு