Published:Updated:

குட்டீஸ் தொடங்கி குடுகுடு பாட்டி வரை!

யோகா பயிலும் ஓஹோ கிராமங்கள்!

பொதுவாகக் கிராமப்புறங்களில் யோகா கலை பற்றிய விழிப்பு உணர்வு குறைவு என்பார்கள். ஆனால், தருமபுரி மாவட்டம், அஜ்ஜிப்பட்டி மற்றும் ஜருகு கிராமங்களில் குட்டீஸ் முதல் குடுகுடு பெருசுகள் வரை பிராணாயாமம், பத்மாசனம், வஜ்ராசனம், சர்வாங்காசனம்... என்று கலந்துகட்டி, வளைந்து காட்டி அசத்துகிறார்கள். இதற்கு எல்லாம் காரணம், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பது ஸ்பெஷல் நியூஸ்.

குட்டீஸ் தொடங்கி குடுகுடு பாட்டி வரை!
##~##

நான் அஜ்ஜிப்பட்டிக் கிராமத்துக்கு அதி காலையில் சென்றபோது, கிராம மக்கள் ஓர் இடத்தில் ஒன்று திரண்டு மூச்சுப் பயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள். யோகா பயிற்சிகளை முடித்துவிட்டு வந்த எஸ்.ஐ. வெங்கடேசன் என்னிடம்,

''இது என் சொந்த ஊர். 2002-ம் வருஷம் தமிழ்நாடு போலீஸாருக்கு 'வேதாத்ரி மனவளக் கலை மன்றம்’ யோகா பயிற்சி கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி வேலை காரணமா ரொம்ப டென்ஷனா இருப்பேன். ஆபீஸ் கோபத்தை வீட்டுல காட்டுவேன். ஆனா, யோகா பயிற்சி செஞ்ச ஒரே வாரத்தில் கோபம் எல்லாம் குறைஞ்சு, நிறைய மாற்றங்களை உணர்ந்தேன். அப்புறம் என் குடும்பத்தினருக்கு யோகா பயிற்சியை அறிமுகம் செஞ்சேன்.

சின்னப் பிரச்னைக்கே அருவாளைத் தூக்கிடுற அளவுக்கு என் கிராம மக்கள் கோபக்காரங்க. தவிர, கிராம மக்கள் பலரும் மதுவுக்கு அடிமையாகி இருந்தாங்க. குடும்பச் சண்டை எல்லாம் சர்வ சாதாரணம். அதனால், கிராம மக்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கலாம்னு முடிவு செஞ்சேன். முதலில் 50 பேருக்கு மட்டும்  பயிற்சி கொடுத்தேன். அவங்களே சில வாரங்களில் பயிற்சி செய்ததன் பலன்களை ஊருக்குச் சொல்ல ஆரம்பிச்சாங்க.

இப்படி வாய்மொழி பிரசாரத்தினாலேயே அஜ்ஜிப்பட்டி மட்டும் இல்லாம, பக்கத்துல இருக்குற ஜருகு கிராம மக்களும் யோகா பயிற்சிக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க. ஆரம்பத்தில் நானே நேரடியாகப் பயிற்சி கொடுத்துட்டு இருந் தேன். இப்போ  நான் வரலைன்னாலும் மக்களே தினசரி காலை ஒரு மணி நேரம் யோகா செய் றாங்க. அந்த அளவுக்கு யோகா கலை அவங்களை உடல் அளவிலும் மனசு அளவிலும் ஆரோக் கியமா மாற்றி இருக்கு.

சொன்னா நம்ப மாட்டீங்க. எங்க கிராமத்துல கோபம், ஈகோ காரணமாகப் பிரிஞ்சு இருந்த மூன்று தம்பதிங்க யோகா பயிற்சிக்கு  அப்புறம் ஒண்ணு சேர்ந்துட்டாங்க.  மதுவுக்கு அடிமையாக இருந்த சுமார் 30 பேர் மதுவில் இருந்து பூரணமாக மீண்டுட்டாங்க. மூட்டு வலி, முழங்கால் வலின்னு புலம்புகிற எந்தப் பெருசையும் ஊர்ல பார்க்க முடியாது'' என்கிறார் உற்சாகமாக.

ஊர் மக்கள் மட்டுமின்றி, ஜருகு ஊராட்சிக்கு உட்பட்ட 14 அரசுப் பள்ளிகளிலும் தினசரி யோகா பயிற்சி ஜோராக நடக்கிறது. பூரிக்கல் தொடக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் குமரவேலு, ''யோகா பயிற்சி செய்யும் குழந்தைகளுக்குப் படிப்பில் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பே இல்லை. இங்கு இருக்கிற அரசுப் பள்ளியின் ப்ளஸ் டூ மாணவர்கள் யோகா பயிற்சி எடுக்குறதுக்கு முன்னாடி 60 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் தேர்ச்சி பெற்றாங்க. யோகா பயிற்சிக்கு அப்புறம் கடந்த வருஷம் தேர்ச்சி விகிதம் 68 சதவிகிதமாகவும், இந்த வருஷம் 78 சதவிகிதமாகவும் உயர்ந்து இருக்கு'' என்றார் மகிழ்ச்சியுடன்.

குட்டீஸ் தொடங்கி குடுகுடு பாட்டி வரை!

யோகா கற்றுக்கொண்டு இருக்கும் 80 வயதுப் பாட்டி பச்சமுத்தி, ''முன்ன எல்லாம் இளவட்டப் பசங்க சண்டை வந்தா கம்பு எடுப்பாங்க. ஆனா, இப்ப சண்டை வந்தா நேருக்கு நேர் நின்னு 'வாழ்க வளமுடன்’னு சொல்லிட்டுப் போயிடுறாங்க'' என்றார் பொக்கை வாய்ச் சிரிப்புடன்.

குட்டீஸ் தொடங்கி குடுகுடு பாட்டி வரை!

ஜருகு கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போக்குவரத்துப் பணியாளர் பாஸ்கர். ''நான் கடந்த 20 வருஷமா சர்க்கரை நோய், ஆஸ்துமா நோயால ரொம்ப அவதிப்பட்டேன். ஒரு வருஷம் யோகாவை சின்சியரா செஞ்சதில இப்ப ரெண்டு நோயில் இருந்தும் முழுமையா விடுபட்டுட்டேன்'' என்றார் உற்சாக மாக!

குட்டீஸ் தொடங்கி குடுகுடு பாட்டி வரை!

-எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

அடுத்த கட்டுரைக்கு