'ஆன உட்டோ ஆன, ஆன படு ஆன, நட ஆன’ - பாகன்களின் கட்டளைக்குக் குழந்தைகளைப் போல் பவ்யம் காட்டி கீழ்படிகிறார்கள், பாரியும் நஞ்சனும்!

யானைக்கு டிரான்ஸ்ஃபர்!
யானைக்கு டிரான்ஸ்ஃபர்!

கோவை, ஈரோடு மாவட்டங்களில் வன எல்லைகளில் இருக்கும் விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்னை, வனம் தாண்டி வலசைவரும் காட்டு யானைகள். ஒரே இரவில் ஆறேழு தோட்டங்களை துவம்சம் செய்து விடுகின்றன இவைகள். நகரத்துக்கு வரும் இந்தக் காட்டு யானைகளைக் காட்டுக்குள் விரட்ட முதுமலை அல்லது டாப் சிலிப் பகுதிகளில் இருந்து பயிற்சி பெற்ற கும்கி யானைகளை வரவழைக்கிறது வனத் துறை. அவ்வளவு தொலைவில் இருந்து கும்கிகளைக் கொண்டுவருவதும், திருப்பி அனுப்புவதும் சிரமமாக இருந்ததால், இப்போது கோவைக் குற்றாலம் அருகே சாடிவயல் பகுதியில் சுமார்

யானைக்கு டிரான்ஸ்ஃபர்!

75 லட்சம் செலவில் கும்கி யானைகள் முகாமைத் துவக்கி இருக் கிறது வனத் துறை. நஞ்சன், பாரி எனும் இரு கும்கி யானைகள் டாப் சிலிப் பகுதியில் இருந்து இங்கே டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வாங்கி வந்துவிட்டன. இரு யானைகள் நிற்கவும், படுத்துக்கொள்ளவும் மெகா சைஸ் கூடங்கள் இரண்டு இருக்கின்றன. யானை களுக்குச் சமையல் செய்வதற்காக 'கும்பியகம்’ என்ற சமையலறையும் தயார்.  

##~##

கும்கிகள் எப்படிக் காட்டு யானைகளை விரட்டுகின்றன? பாகன் கும்கியின் மேல் அமர்ந்து, அதன் கழுத்தில் இருக்கும் கயிற்றினுள் காலை செருகிக் கொள்வார். யானையின் காதுக்கு பின்புறம் இருக்கும் சென்சிடிவ் ஏரியாதான் பாகனுக்கு ரிமோட் கன்ட்ரோல். அங்கு மெதுவாகக் கால்களால் அழுத்திப் பாகன்கள் கொடுக் கும் சிக்னல்களின்படி கும்கிகள் செயல் படுகின்றன.

பொதுவாகக் கும்கிகளுக்குப் பொறுமை மிக அதிகம். அவை முத லிலே தாக்குவது இல்லை. காட்டு யானைகளை வெறும் சப்தங் களாலேயே மிரட்டி வனத்துக்குள் செல்லக் கட்டளை இடுகின்றன. அதையும் மீறிக் காட்டு யானை தாக்க வந்தால்தான் கும்கியும் பதிலுக்குத் தாக்கும். ஆனால், காட்டு யானைக்கு வலிக்குமே தவிர, பெரியதாகக் காயம் எதுவும் படாது. உயிருக்கும் ஆபத்து ஏற்படாது. கும்கிக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் பயிற்சி அப்படி. கும்கியிடம் மொத்து, மொத்தென நான்கு அடி வாங்கி விட்டால் போதும்... காட்டு யானையின் கோபம் பாகனை நோக்கித் திரும்பும். பாகனை இழுத்துப்போட்டு தாக்குவதற்கான முயற்சியில் அது இறங்கும்.

இந்த நேரத்தில்தான் கும்கியின் கடமை உணர்ச்சி பாகனை நெகிழவைக்குமாம். எத்தனைக் காட்டு யானைகள் சுற்றி நின்றாலும் சரி... தன் மேல் அமர்ந்து இருக்கும் பாகன் மீது ஒரு அடிகூடப் படவிடாமல் கடுமையாகப் போராடுமாம் கும்கி. பாகனை நோக்கித் தும்பிக்கையை உயர்த்தியபடி ஓடிவரும் காட்டு யானையின் தும்பிக்கையை வளைப்பது, தந்தத் தால் அதை அடக்குவது என்று பாகனுக்காகத் தன் உயிரையும் பணயம்வைத்துக் கும்கிகள் போராடுவது மயிர்க்கூச்செரியும் காட்சி. இதுபோன்ற சமயங்களில் வனத் துறையினர்கூட அந்த ஏரியாவுக்குச் செல்வது இல்லை. வேற்று ஆட்களின் வாசனை யானைகளை மேலும் கலவரப்படுத்தும் என்பதால் இந்த ஏற்பாடு. மிகக் கோபமான காட்டு யானைகளைச் சமா ளிக்க கும்கிகளுக்கு இரும்புச் சங்கிலிப் பயிற்சியும் கொடுக்கிறார்கள். தும்பிக்கையால் இரும்புச் சங்கிலியைத் தூக்கிச் சுழற்றி அடித்துக் காட்டு யானைகளை அடக்கிவிடுமாம் கும்கிகள்.

பொதுவாக ஆண் யானைகளைத்தான் கும்கியாகத் தேர்வு செய்கிறார்கள். ஆண் யானை, குட்டியாக இருக்கும்போதே அதன் நடவடிக் கைகள், உடல் அமைப்புகள், பிற்காலத்தில் அது எப்படிப்பட்ட யானையாக வளரும்? என்பதைத் திறமையான பாகன்கள் கவனித்துக் குட்டி யானையைக் கும்கியாகத் தேர்வு செய்கிறார்கள். சுமார் ஐந்து ஆண்டுகளில் பாகனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது, மரக்கட்டைகளைத் தூக்குவது, பெரிய மரத்தை முட்டி மோதி நெற்றிப் பகுதியை உறுதி ஆக்கிக் கொள்வது, குட்டிக் கரணம் அடிப்பது போன்ற அடிப்படைப் பயிற்சிகளை எல்லாம் கற்றுத் தேர்ந்துவிடுகின்றன கும்கிகள்.

யானைக்கு டிரான்ஸ்ஃபர்!

இவை வாலிப வயதை அடைந்ததும், கம்புகளால் ஆன பெரிய கூடாரத்தில் அடைக்கிறார்கள். கம்புகளின் இடைவெளி வழியே பெரிய மூங்கில் தடிகளை உள்ளே நுழைத்து... யானைகள் முன்பாக ஆட்ட... அவை தங் களுடைய தும்பிக்கையால் மூங்கில் தடிகளை வளைத்துப் பிடித்து எதிர்கொள்ளுமாம். காட்டு யானைகள் கும்கியை அடிக்கத் தும்பிக்கையை ஓங்கும்போது எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சி இது.  

பொதுவாகக் காட்டு யானைகளுக்கு கும்கி களைக் கண்டால் ஆகாது. காரணம், கும்கிகளின் மேல் மனித வாசம் வீசுவதுதான். அதனால், காட்டு யானைகள் தங்களுடைய ஏரியாவுக்குள் நுழைந்திருக்கும் கும்கியை அட்டாக் செய்யத் துடிக்கும். ஆனால், சில நூறு அடிகள் தூரத்தில் காட்டு யானை வருவது தெரிந்தாலே  பாகனுக்கு அதன் வருகை பற்றி சிக்னல் கொடுத்து அலர்ட் செய்துவிடுகின்றன புத்திசாலிக் கும்கிகள்.

நஞ்சன் மற்றும் பாரியைப் பற்றிப் பேசினார் பாகன் குமார். ''இவங்களுக்கு காலை 8 மணிக் கும் சாயந்திரம் 6 மணிக்கும் ராகி, கொள்ளு, அரிசி இதை எல்லாம் அவிச்சு ஒண்ணா சேர்த்து, கவளமாக் கொடுப்போம். உப்பு, வெல்த்தோடு ஸ்நாக்ஸ் மாதிரி தேங்காய், கரும்பும் கொடுப் போம். மரக் கிளைகள், தென்னை ஓலைகளையும் சாப்பிடுவாங்க. ரெண்டு பேருமே வேலையில ரொம்ப சுத்தம். பாரிக்கு 32 வயசுதான்.  மரத்தை முட்டிச் சாய்க்கிறது, மிதிக்கிறதுன்னு எப்பவும் பையன் துறுதுறுன்னு இருப்பான்'' என்கிறார் நட்பான சிரிப்போடு!

யானைக்கு டிரான்ஸ்ஃபர்!

- எஸ்.ஷக்தி,
படங்கள்: வி.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு