Published:Updated:

நட்பு பூங்கா!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - வேலூர்

நட்பு பூங்கா!
##~##
ங்கள் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டை எடுத்தால் ஆயிரக்கணக்கில் இருக்கலாம். ஆனால், நீங்கள் நன்கு அறிந்த, புரிந்த நண்பர்கள் என்று பார்த்தால்...? நூறைத் தாண்டாது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் மாலையில் சந்தித்து நட்பு  வளர்க்கிறார்கள் இந்த வேலூர் இளைஞர்கள். இளைஞர்களின் வயது என்ன தெரியுமா? 50 முதல் 80 வரை.

  வேலூர் பெரியார் பார்க்கில் பேசிக்கொண்டு இருந்த நண்பர்களிடம் நானும் பேசினேன்.  எஸ்.எம்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ''எனக்கு வயசு 80 ஆகுது. தினமும் மாலை 5 மணிக்கு இந்தப் பூங்காவுக்கு வந்துடுவேன். இப்போ இருக்கிற இளைஞர்கள் ரொம்ப வேகமா இருக்காங்க. ஆனா, விவேகம்தான் பூஜ்யம்'' என்று ஆரம்பத்திலேயே தத்துவம் உதிர்க்க ''என்னங்க மூர்த்தி, இப்படிப் பேசினா அவங்க நம்மகிட்ட பேட்டியே எடுக்க மாட்டாங்க, பிரதர் என்கிட்ட பேசுங்க'' என டிராக் மாற்றினார் ஏ.வி.சரவணன். வேலூரில் ஃபைனான்ஸ் தொழில் செய்துவருகிறார்.

  ''நாங்க மொத்தம் ஆறு பேர் நண்பர்கள்.  ரவி மட்டும் இன்னைக்கு ஆப்சென்ட். நான், கிருஷ்ணமூர்த்தி, தாஸ் மனோகர், சந்திரசேகர், சண்முகம் தினமும் மாலை இங்க வந்துடுவோம். நாங்க ஒரு முக்கியமான வி.ஐ.பி-யைக் காட்ட மறந்துட்டோம்!'' என்றபடி ''ரோஸி'' என்று அழைக்க, பக்கத்தில் இருந்து ஓடிவந்தது வெள்ளை நிற நாய்.

நட்பு பூங்கா!

''இந்த ஜீவன் ஆறு மாசமா எங்களுக்குப் பழக்கம். நாங்க இங்கே வந்தவுடன் எங்க பக்கத்துல வந்து உட்கார்ந்துக்கும். வேற யாராவது கூப்பிட்டாக்கூட போகாது. வீட்டில் இருந்து ஏதாவது எடுத்துவந்தால் கண்டிப்பா ரோஸிக்குத்தான் முதலில் கொடுப்போம்'' என்று ரோஸியைப் பார்த்தார். நன்றியுடன் வாலை ஆட்டியது ரோஸி.

   சந்திரசேகர் ''இங்க வந்தா ஒரு அமைதி தெரியுதுங்க தம்பி. 30 வருஷமா அரசாங்க வேலையில் இருந்தேன். ஏதேனும் மனக் கஷ்டம்  இருந்தாக்கூட இங்க வந்து நாங்க பேசும்போது அது காணாமப் போயிடும். சினிமா, அரசியல் பற்றி அதிகமாப் பேச மாட்டோம். இந்தக் காலத்து சினிமா, அரசியல் எங்களுக்கு எங்க தம்பி பிடிபடுது? சண்முகம் சார், பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல்களை அழகாப் பாடுவார். சண்முகம் பாட்டு பாடுங்க'' என்று நட்போடு மிரட்ட குரலைச் சரி செய்தபடி ஆரம்பித்தார் சண்முகம்.

நட்பு பூங்கா!

''பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள், காணாத கண்களைக் காண வந்தாள்'' என ராகத்தோடு பாட, எதிரே வந்த ஒரு குடும்பம் கை தட்டி ரசித்தது. ''சின்ன வயசுல படிக்கும் போது பாடியது. அது இன்னும் அப்படியே நினைவில் இருக்கு. என்ன இருந்தாலும் அந்தக் காலத்தை மறக்க முடியுமா?'' என அண்ணாந்து வானத்தை பார்த்தார். ''சார், ஃபிளாஷ்பேக் வேண்டாம்'' என்று கிண்டல் செய்தார் ஏ.வி.சரவணன்.

''இப்போ நண்பர்கள் வட்டாரம் ரொம்பக் குறைவா இருக்குதுங்க. வாரத்துக்கு ஒருநாள் மகிழ்ச்சியாகச் செலவிட முடியாதக் காலகட்டத்தில் இருக்கோம். போனில் பேசுறதே ரொம்பக் குறைவு. இந்தப் பூங்காவில் அதிகம் குடும்பத்தோட வர்றாங்க. அப்புறம் லவ்வர்ஸ் வர்றாங்க. ஆனா, நண்பர்கள்னு அதிகமா வந்து பார்த்தது இல்லை. அதுக்காக இளைஞர்களை நான் குறை சொல்லலை'' என்றபடி பெருமூச்சுவிட்டார்.

''என்னப்பா, வீட்டுல வரும்போது உன் பையன்கிட்ட ஏதாவது சண்டை போட்டுட்டு வந்தியா?'' என்று சந்திரசேகர் கூற, மற்ற நண்பர்கள் சிரித்தனர்.  மாலை 7 மணி ஆனதும்  அனைவரும் விடைபெற, பூங்கா வாசல்வரை வந்து வழி அனுப்பிவிட்டு மீண்டும் பூங்காவுக்குள் ஓடியது ரோஸி!

- கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்

அடுத்த கட்டுரைக்கு