Published:Updated:

”சேலத்துக்கு என்றும் அழிவு கிடையாது!”

”சேலத்துக்கு என்றும் அழிவு கிடையாது!”

”சேலத்துக்கு என்றும் அழிவு கிடையாது!”

ஜெயப்பிரகாஷ் காந்தி. சிறந்த கல்வியாளர், கல்வி ஆலோசகர். பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான சரியான வழிகாட்டி. இவர் தன்னுடைய சொந்த ஊரான சேலம் நகரில் உள்ள சொர்ணபுரியைப் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

”சேலத்துக்கு என்றும் அழிவு கிடையாது!”
##~##

''எங்களுக்கு பூர்வீகம் குஜராத் என்றாலும் எங்க தாத்தா காலத்திலேயே சேலத்துக்குக் குடி பெயர்ந்துட்டாங்க. நான் பிறந்தது, வளர்ந்தது, இப்போ வசிப்பது, எல்லாமே சேலத்தில்தான். ஐந்து ரோட்டுக்கும்  புது பஸ் ஸ்டாண்டுக்கும் இடையில் இருக்கும் சொர்ணபுரியில்தான் எங்க வீடு இருக்கிறது. நான்கு ரோட்டில் இருக்கும் லிட்டில் ஃபிளவர் பள்ளியில்தான் படிச்சேன்.

இப்போ புது பஸ் ஸ்டாண்டாக இருக்கும் இடம், அந்தக் காலத்துல பள்ளப்பட்டி ஏரியாக இருந்தது. அந்த ஏரியில்தான் நான் நீச்சல் கத்துகிட்டேன். அந்த இடத்துல இரண்டு பக்கமும் கருவேல மரங்கள் சூழ்ந்து குளுகுளுன்னு இருக்கும். நடுவுல ஒரு ரோடு போகும். சாயங்காலம் 6 மணிக்கு மேல அந்த ரோடு கடும் இருட்டாக இருக்கும். ஜனங்கள் போறதுக்கே பயப்படுவாங்க. ரயில் நிலையத்துக்கு ஒரு டவுன் பஸ்ஸும், ஜலகண்டபுரத்துக்கு ஒரு தனியார் பஸ்ஸும் மட்டும்தான் அந்த வழியில் போகும். ஆனா, இன்னைக்கு சேலத்தோட மையப் பகுதி யாக அந்த இடம் மாறிடுச்சு.

நான்  படிச்சிட்டு இருந்தபோதுதான் சேலம் இரும்பாலைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் அந்த விழாவுக்கு வந்து இருந்தாங்க. அப்ப நான் நடந்தே இரும்பாலைக்குப் போய் எம்.ஜி.ஆரை நேர்ல பார்த்துட்டு வந்து, எல்லோர்கிட்டயும் பெருமையா சொல்லிட்டு இருந்தேன்.

அந்தக் காலகட்டத்தில்தான் காந்தி ஸ்டேடியமும் திறந்தாங்க. அப்போ தமிழ்நாட்டுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது. அந்த ஒரு வாரம் காந்தி ஸ்டேடியத்துலயேதான் நான் இருந்தேன். கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் ஐந்து ரோட்டில் இருந்த கோகுலம் ஹோட்டல்ல தங்கி இருந்தாங்க. அந்தக் கோகுலம் ஹோட்டல்தான் இன்றைக்கு கோகுலம் மருத்துவமனை ஆகிடுச்சு.

மதுரைக்கு அடுத்து கையேந்தி பவன்கள் அதிகம் இருக்கும் ஊர் சேலம்தான். சென்ட்ரல் இறக்கத்துல வரிசையாகக் கையேந்தி பவன்கள் இருக்கும். புரோட்டாவும் சிக்கன் குழம்பும் அந்த அளவுக்கு ருசியா இருக்கும்.  அப்புறம் சேலம் சரவணபவன் ஹோட்டல் காபி. அப்படி ஒரு காபியை வேற எங்கேயும் சாப்பிட்டது கிடையாது. தமிழ் சினிமாவின் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் ரசிகர்கள் சேலத்தில்தான் இருக்காங்க. அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவின் தலை எழுத்தை மாற்றி எழுதியது மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.

நான் படிச்சது தமிழ் மீடியத்துல. எனக்கு இங்கிலீஷ் கத்துக்கணும்னு நிறைய ஆசை. அதுக்காக செவ்வாய்ப்பேட்டை இம்பீரியல் தியேட்டரில் இங்கிலீஷ் படங்கள் நிறைய பார்ப்பேன். இன்னைக்கு அந்த தியேட்டரே இல்லை. ஆடி மாசத்துல கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா ரொம்ப பிரசித்தம். நாலு நாளைக்கு உள்ளூர் விடுமுறை விடுவாங்க. கூடுதலாகப் பொருட்காட்சியும் நடக்கும். சுத்துப்பட்டு கிராமங்கள் மொத்தமும் அங்கேதான் கூடிக்கிடக்கும்.

”சேலத்துக்கு என்றும் அழிவு கிடையாது!”

சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பக்கத்துல ஊத்துமலை முருகன் கோயில் இருக்கு. நான் கல்லூரி படிக்கும்போது அங்கே அடிக்கடிப் போவேன். அங்கே ஒரு சாமியார் இருந்தார். அவரை நான் பார்த்தபோது, 'இந்தக் கல்லில் ஒரு சக்கரம் தெரியுது பார்த்தியா... இந்தச் சக்கரம் இந்தியாவுல ஆறு ஊருல மட்டும்தான் இருக்கு. இது  இருக்கும் ஊருக்கு எந்தக் காலத்துலேயும் இயற்கைச் சீரழிவு வரவே வராது’னு சொன்னார். அதனாலேயே என்னமோ இதுவரை சேலத்துக்கு அப்படி எந்த விதமான பாதிப்பும் வந்தது கிடையாது.

'உங்க எதிர்காலத்துக்கு நீங்க சென்னைக்கு வர்றதுதான் சரியாக இருக்கும்’னு பலரும் வற்புறுத்திக்கிட்டு இருக்காங்க. ஆனா, எனக்கு சேலத்தை விட்டு பிரிய மனசு இல்லை. எவ்வளவு உயர உயரப் பறந்தாலும், நான் சேலத்துப் பிள்ளைதானே!''

”சேலத்துக்கு என்றும் அழிவு கிடையாது!”

- சந்திப்பு: கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள்: எம்.விஜயகுமார்

அடுத்த கட்டுரைக்கு