Published:Updated:

வலையோசை

வலையோசை

திரை - பறை

வலையோசை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப்பொதுச்செயலாளரான கருணா, 'ஏழுமலை ஜமா’ என்ற குறும்படத்தை இயக்கியவர். இவருடைய http://thirai-parai.blogspot.com//  வலைப்பூவில் பல அனுபவங்கள் குறித்து எழுதிவருகிறார். அவருடைய வலைப்பூவில் இருந்து...

தனிமை கொடுமை!

வலையோசை

சிங்கக்குட்டிகள்
காலடியில் விளையாட
ஊஞ்சலில் அமர்ந்தபடி
சிரிக்கிறார் அமைச்சர்.

நடந்தும்..
உட்கார்ந்தும்...
ஏதோ சிந்தித்தபடியும்...
கையசைத்தபடியும்...
எல்லாத் தெருக்களின்
மூலைகளிலும்
நின்று கொண்டிருக்கிறார்
முன்னாள் அமைச்சர்.

மஞ்சள் நீராட்டு விழாவுக்குவரும்
பச்சைத்தமிழனே வருக..
காது குத்த வரும்
கலங்கரை விளக்கமே வருக...

பிரியாணிக் கடையைத் திறக்கவரும்
பெருமகனே வருக..
பியூட்டி பார்லர் திறக்கவரும்
பியூட்டியே வருக....

##~##
கல்யாணத்துக்கு வாழ்த்துச் சொல்லி...
கருமாதிக்கு சேதி சொல்லி...
இலக்கியம் பேசவரச் சொல்லி..
இன்னும் விதவிதமாய்
இன்னும் வகைவகையாய்
எல்லாரும்...
யாரையோ...
எதற்கோ...
அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அழைக்க ஆளில்லாமல்
அகண்ட திரைகளில்
காலியான இருக்கைகளை
பார்த்தபடியே
வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அம்பேத்கர்.

முழக்கங்களுடன் விடிந்த மார்கழிக்காலை!

வலையோசை

அந்த அதிகாலையில் அப்படி ஒரு போராட்டம் நடக்கும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். ஆன்மிக நகர மான திருவண்ணாமலையில் எந்த நாளும் திருவிழாதான்.

இப்போது மார்கழி மாதம் என்பதால் இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே கோயில் நடை திறந்துவிடுகிறார்கள். அதி காலையிலேயே பக்தர்கள் கோயிலுக்கு வந்துவிடுகிறார்கள். அதைப்போலத்தான் நேற்றும் பக்தர்கள் வந்தார்கள். ஓம் என்ற பக்தி நாதம் ஒலிக்கும் என எதிர்பார்த்து வந்தவர்களுக்கு 'திரும்பிப்போ திரும்பிப்போ.. நித்தியானந்தனே திரும்பிப்போ’ என்ற கோஷங்களின் சத்தம் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

பாலியல் குற்றவாளியான பிறகு... காவிவேஷம் கலைந்த பிறகு... முதன்முறையாகப் பிறந்தநாளைக் கொண்டாட.. (இதுக்கு பேரு அவதாரப் பெருவிழாவாம்) நித்தியானந்தா திருவண்ணாமலைக்கு வந்தார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் திரண்டவர்கள் போட்ட முழக்கம்தான் அது. 'சரச சாமியாருக்கு சத்சங்கம் எதுக்குடா?’ என அதிகாலை 4 மணிக்கே அம்மணியம்மன் கோபுரத்தின் அருகே கருப்புக் கொடிகளுடன் தோழர்கள் திரண்டனர்.

கருப்புக்கொடிகளுடன் காத்திருக்கும் செய்தியறிந்து கொண்ட நித்தியானந்தா தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தார். உடனே ராஜகோபுரத்தின் அருகே திரண்டது கூட்டம். போராட்டக்காரர்கள் போனால்தான் வெளியே வருவேன் என கோவிலுக்குள்ளேயே தஞ்சம் அடைந்துவிட்டார் நித்தியானந்தா. நாமும் சரியெனப் போக்குகாட்டிவிட்டு அவர் வெளியே வரட்டுமெனக் காத்திருந்தோம்.

கூட்டம் கலைந்துபோய்விட்டதாக போலீஸ் சொல்லியும் நம்பாத நித்தியானந்தா,  ஆட்களை அனுப்பி உறுதி செய்து கொண்டபின்தான் கோயிலைவிட்டு திருமஞ்சனக் கோபுரம் வழியாக வெளியே வந்தார். செங்கம் சாலை சந்திப்பில் காத்திருந்த போராட்டக்காரர்கள் அவருடைய  கார் வந்த போது குறுக்கே பாய்ந்து கருப்புக்கொடியைக் காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரண்டு போன நித்தியானந்தா சினிமாவில் வருவது போல காரைத் திருப்பிக்கொண்டு தப்பி ஓடினார்!

அடுத்த கட்டுரைக்கு