Published:Updated:

என் ஊர்: நடிகர் கரிகாலன்

கள்ளிகுளம்பழைய ராசாவும்... கச்சாமுச்சாவும்!

##~##

நடிகர் கரிகாலன் தான் பிறந்து வளர்ந்த  கள்ளிகுளம் குறித்து தன் ஞாபகப் பெட்டியில் இருந்து இளமைக் கால மலரும் நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள் கிறார். 

''திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்ல இருந்து அஞ்சு கி.மீ. தொலைவுல இருக்குது கள்ளிகுளம். நெடுங்குளம், தெப்பாங்குளம், பொட்டங்குளம், கண்டியபெரியான்குளம், கள்ளிகுளத்தான்குளம்னு ஊரைச் சுத்திக்  குளங்களும் கள்ளிச்செடிகளும் நிறைஞ்சு இருக்கும்.

கள்ளிச் செடிகளைப் பார்க்கப் பச்சைப்பசேல்னு இருக்கும். திடீர்னு ஒரு நாள் சீரியல் பல்பு போட்ட மாதிரி சிவப்பு கலர்ல கள்ளிப்பூக்கள் பூத்திருக்கும். அதைப் பாக்குறப்ப, ஏதோ சொர்க்கத்துல இருக்குற மாதிரி சந்தோ ஷமா இருக்கும். 'வித்தாரக்கள்ளி விறகொடிக் கப் போனாளாம்... கத்தாழ முள்ளு கொத்தோட தெச்சுச்சாம்’னு ஒரு பழமொழி உண்டு. புடை வையைத் தூக்கி இடுப்புல சொருகிட்டு சண்ட போடும்போது இதைச் சொல்வாங்க. இப்படிச் சொன்னா 'ஏதோ கதைவிடுற... நீ சொல்ற கதை எங்களுக்குத் தெரியாதா’னு அர்த்தம்.

என் ஊர்: நடிகர் கரிகாலன்

வீட்டுல அப்பாவோட அடிக்குப் பயந்து நாங்க கள்ளிச் செடிகள் நெறைய இருக்கிறஎடத் துலபோய் ஒளிஞ்சிப்போம். தரை சுடும்கிறதால  வீட்டுல உள்ள பழைய பாய், போர்வையை எடுத்துட்டுப் போயிருவோம். வயிறு பசிச்சாக் கள்ளிப் பழத்தைப் பறிச்சுச் சாப்பிடுவோம். கள்ளிப் பழம் சாப்பிட்டா தாகமே எடுக்காது. செடியில பழம் இருக்கோ, இல்லையோ... செடி மேல 'குமார்-சந்திரா’, 'ஜான்சன்-எஸ்தர்’னு இதயம் போட்டு படம் வரைஞ்சிருப்பாங்க. ஜோசப், மதுரம், இம்மி, பெலிகஸ்னு நாங்க மொத்தம் பதினஞ்சு பேர் ஒரே குரூப்பா திரிவோம். ஒரே மாதிரிதான் டிரெஸ் போடுவோம். ஊருக்கு நடுவுல 126 வருஷத்து பழமையான 196 அடி உயரமான அதிசயப் பனி மாதா கோயில்இருக்கு. பெரிய கோபுரம் மட்டும் 150 அடி உயரம் இருக் கும். பனை வெல்லம், கருப்பட்டி, முட்டை, பதநீர், இளநீர்னு எல்லாத்தையும் போட்டு இந்தக் கோயிலை ரொம்ப ஸ்ட்ராங்கா கட்டி இருக்காங்கன்னு எங்க பாட்டி அடிக்கடி பெருமையாச் சொல்வாங்க. இந்த சர்ச் தெருவில தான் தினமும் கபடி விளையாடுவோம். மழை அதிகமாப் பேஞ்சா ரோட்டுல ஜல்லிக் கற்கள் செம்மண்ணுக்கு நடுவுலத் தெரியும். கொஞ்சம் பெரிய கல்லாத் தோண்டி எடுத்து, 'பழையராசா விளையாட்டு’ விளையாடுவோம். ''ஒண்ணுக்கும் கல்லெடுத்து குழிக்கும் புண்ணாக்கு/ரெண்டுக் கும் பீச்சங்கொட்டை/மூணுக்கும் முக்காலி/ நாலுக்கும் நாற்காலி/ அஞ்சுக்கும் பஞ்சரணை/ ஆறுக்கும் பாலோடு/ ஏழுக்கும் எழுத்தாணி/ எட்டுக்கும் மொட்டக்கட்டை/ ஒம்போதுக்கும் ஒத்தே பாகம்/பத்துக்கும் பழைய ராசா...’ அப்ப டின்னு பாட்டுப் படிச்சுக்கிட்டே கல்லை எடுத்து வீசணும். கல், குழிக்குப் பக்கத்துல வரக் கூடாது. கல்லுக்கும் குழிக்கும் ஒரு முழம் இடைவெளி வெச்சு விளையாடுவோம். 'கச்சா முச்சா’ விளையாட்டும் ரொம்ப ஃபேமஸ். பத்மாசனத் துல ஒருத்தன் உட்கார்ந்து இருப்பான். பத்துபேரு வந்து உட்கார்ந்திருக்கிறவனோட காலைப் பிடிச்சு இழுக்கணும். ஆனால் இவன், காலை  விடக்கூடாது. சப்பு சப்புனு மூஞ்சியில அடிப் பான்.  ஆனா, சின்னப்பையனா இருந்தாஈஸியா காலைப்பிடிச்சு இழுத்துடுவோம். நாங்க இழுத் துபோட்டுத் திருப்பி அடிச்சதும் அவங்கஅம்மா வைக் கூட்டிட்டு வந்துருவாங்க. 'ஏலே.. என்னல  விளையாட்டு விளையாடுறீங்க... புள்ளய இப் படி போட்டு அடிச்சிருக்கீங்க’னு சண்டைக்கு வருவாங்க. அப்படி அம்மாவக் கூட்டிட்டு வர்றவங்களை அடுத்த நாள் ஆட்டத்துக்குச் சேர்த்துக்க மாட்டோம். வால்பிடுங்குதல், சாக்கு ஓட்டம், செங்கல் ஓட்டம்னு நாங்க விளையாடாத விளையாட்டே இல்ல.

என் ஊர்: நடிகர் கரிகாலன்

ப்ளஸ்-டூ  படிக்கும்போது தினமும் நைட் ஸ்டெடி நடக்கும். கிளாஸ் முடிச்சுட்டு எல்லாரும் சைக்கிள்ல போவாங்க.  நானும் என் நண்பர்களும் தெருவில் கட்டிப்போட்டிருக்கிற கழுதைகளை அவுத்து அதுமேல ஏறிப்போவோம். லீவு விட்டா 30 கி.மீ. தூரத்துல இருக்குற நம்பிமலைக்கு சைக்கிள்ல போவோம். மலைமேல ஏறி முதல் அடுக்கு, ரெண்டாவது அடுக்குனு மொத்தம் இருக்குற ஏழு அடுக்கு அருவியிலயும்  குளிச்சுட்டு  நம்பிமலைக் கோயிலுக்கும் போயிட்டு சாயங்காலம்தான் திரும்பிவருவோம்.

என் ஊர்: நடிகர் கரிகாலன்

தினமும் தின்பண்டம் வாங்கிச் சாப்பிட வீட்ல ரெண்டு ரூபா தருவாங்க. அந்தத் துட்டுக்கு வள்ளியூர் கண்ணன் கடை மைசூர்பாகும்  தாத்தா கடையில 25 பைசாவுக்கு மண்டவெல்லமும் வாங்கிச் சாப்பிடுவோம். எங்க ஊர்ல மாதாகோயிலும் சிவன் கோயிலும் ரொம்ப ஃபேமஸ். மாதாகோயிலில் இந்துக்கள் மெழுகுவர்த்தி பொருத்தி வேண்டுவதையும் சிவன் கோயில் தேரோட்டத்தைக் கிறிஸ்துவர்கள் கண்டுகளிப்பதையும் நான் பார்த்திருக்கேன். அடுத்த வீட்டுப் பிள்ளைகளைத் தன்னோட சொந்தப் பிள்ளைகளாகவே நினைச்சிப் பாசம் காட்டுறதுதான் என் ஊரு. இல்லை... இல்லை... எங்க ஊரு!''

- இ.கார்த்திகேயன்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

அடுத்த கட்டுரைக்கு