Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

டெக் இண்டஸ்ட்ரியில் போதுமான அளவுக்குப் பெண்களின் பங்களிப்பு இல்லை என்பது அவ்வப்போது டெக் மீடியாவிலும் வலையுலகத்திலும் விவாதிக்கப்படும் விஷயம். பங்களிப்பு தொடக்க நிலைப் பணிகளில் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

 இந்த விவாதம் சென்ற வாரத்தில் விறுவிறுப்பானது. காரணம், மரிசா மேயர்! கூகுளின் தொடக்கக் காலத்தில் இருந்தே பணிபுரிந்துகொண்டு இருக்கும் மரிசா, இப்போது யாஹூ ( yahoo.com ) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. தொடர்ந்து சரிந்துகொண்டே இருந்தா லும், யாஹூ நிறுவனம் இன்றைய நாளில் 'ஃபார்சூன் 500’ பட்டியலில் உள்ள, உலகின் முக்கிய 500 நிறுவனங்களில் ஒன்று. கடந்த சில வருடங்களில் பல தலைமைச் செயல் அதிகாரிகள் யாஹூவை இழுத்துப் பிடித்து முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முயன்றாலும், இயலவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

37 வயதாகும் மரிசாவுக்கு கூகுளின் வணிகச் செயல்பாடுகள் அத்துப்படி என்பதால், நேரடிப் போட்டியாளராக இருக்கும் யாஹூ வைச் சரிப்படுத்திவிட முடியும் என்று பலரும் நம்புகிறார்கள். 90-களின் கடைசியில் ஆப்பிள் மோசமாக வீழ்ந்துகொண்டு இருந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ஆப்பிளை உலகின் மிகப் பெரிய டெக் நிறுவனமாக மாற்றியதுபோல மரிசாவும் செய்வார் என்ற அதீத எதிர்பார்ப்புகள் மரிசாவின் மேல்!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ஹெச்பி நிறுவனத்துக்குத் தலைமை வகிக்கும் மெக் விட்மன், ஃபேஸ்புக்கை இயக்கும் ஷெரில் சேன்ட்பர்க் இருவருக்கும் அடுத்து டெக் நிறுவனப் பொறுப்பில் மரிசா வந்திருப்பது பெண்களின் தலைமைப் பங்களிப்பு கணிசமாக முன்னேறியிருப்பதைக் காட்டுகிறது.

கொசுறு செய்தி: மரிசா இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதும் வெளியிட்ட அறிக்கையில், தான் நான்கு மாதக் கர்ப்பமாக இருப்பதைச் சொன்னது டெக் உலகை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் மரிசாவின் பிரசவம் நடந்ததும், யாஹூவின் வளர்ச்சியையும் பிரசவத்தையும் இணைத்து 'மரிசா டெலிவர்ஸ் ரிசல்ட்ஸ்’ (Marissa delivers results) போன்ற கவர்ச்சிகரமான தலைப்புகளை மீடியாக்களில் பார்க்கத் தயாராகிக்கொள்ளுங்கள்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

'ஃபார்சூன் 500’ நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரி கர்ப்பமாக இருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை என்கிறார்கள் (அது சரிதானா? தவறாக இருந்தால் @antonprakash என்ற எனது ட்விட்டர் முகவரிக்கு ட்வீட்டு கீச்சல் ஒன்று கொடுங்கள்).

ட்விட்டர் என்றதும் நினைவுக்கு வருவதை மறக்காமல் சொல்லிவிடுகிறேன். டேப்லட் கணினியை, 'குளிகை’ என்று சொல்வது தவறு என ஆணித்தரமாக ட்விட்டரில் வாதமிட்ட கீச்சாளர்களுக்கு எனது நன்றிகள். எந்தத் தமிழ்ப் பதம் இதற்குப் பொருந்தும்? பலகைக் கணினி? தொடு கணினி? சிலேட்டுக் கணினி? ஆனந்த விகடனின் ஃபேஸ்புக் பக்கத்தில் (www.facebook.com/anandavikatan) இதற்கான கருத்துக் கணிப்பு ஒன்றைப் பிரசுரித்திருக்கிறேன். உங்களது வாக்குகளை அதில் கொடுங்களேன்).

ட்விட்டரைப் பற்றி மற்றொரு செய்தி. சமூகப் பொறுப்புடன் ட்விட்டர் ஒரு முக்கியமான கட்டுப்பாட்டை இந்த வாரத்தில் கொண்டுவந்து இருக்கிறது. மது வகைகளைத் தயாரிக்கும் பல நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடமும் விநியோகஸ்தர்களிடமும் நெருங்கிய தொடர்பில் இருப்பதற்காக முக்கியச் சமூக வலைதளமான ட்விட்டரைப் பயன்படுத்துவதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், அதில் கீச்சப்படும் தகவல்கள் குடிப்பதற்கான விருப்பத்தை, குடி அனுமதி வயதான 21-க்கும் கீழாக இருப்பவர் களுக்கு உண்டாக்கும் வாய்ப்புகள் இருக்கும் என்பதால், மேற்கண்ட வயதில் உள்ளவர்கள் ஆல்கஹால் நிறுவன ட்விட்டர் பக்கத்தைப் பார்க்க முடியாமல் இருக்கும் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்திருக்கிறது. வயதுக் கட்டுப்பாடுகள் கொண்ட நிறுவனம் ஒன்றின் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர வேண்டும் என்றால், அது உங்களை age.twitter.com என்ற உரலிக்கு அனுப்பும். அங்கே, உங்களது வயது விவரங்களைப் பூர்த்திசெய்த பின்னரே நீங்கள் குறிப்பிட்ட ட்விட்டர் பக்கத்தைப் பார்க்க முடியும். ஜூ.வி-யில் வெளிவரும் 'மயக்கம் என்ன?’ தொடரின் இந்த வார அத்தியாயத்தைப் படித்துவிட்டு, ட்விட்டர் பற்றிய செய்தியை அவர்களது வலைப் பக்கத்தில் (http://www.buddymedia.com/newsroom/2012/07/twitter-buddy-media-age-screening-brands-marketing/) படித்ததும், சமூகப் பொறுப்பு உணர்வில் நாம் எவ்வளவு முன்னேற வேண்டி இருக்கிறது என்ற பெருமூச்சு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கடைசியாக, கூகுள்பற்றிய செய்தி... சென்ற வாரம் கூகுள் வெளியிட்டு இருக்கும் சேவை, சாதாரண அலைபேசிகளின் ( Feature Phones) பயனீட்டாளர்களுக்கு நல்ல செய்தி.  இமெயிலை அலைபேசிகளில் பயன்படுத்த டேட்டா சேவை தேவை இல்லை என்ற நிலை கூகுள் தயவில் விரைவில் வந்துவிடும்போல் இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளான கானா, நைஜீரியா, கென்யா ஆகியவற்றில் அலைபேசிப் பயனீட்டாளர்களுக்குக் குறுஞ்செய்தி மூலமாக கூகுளின் இமெயில் சேவையான ஜிமெயிலைப் (www.gmail.com) பயன்படுத்திக்கொள்ளலாம். குறுஞ்செய்தி சேவை அதிகமாகப் பயன்படுத்தப்படும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள பயனீட்டாளர்களைக் குறிவைத்து வெளியிடப்பட்டு இருக்கும் இந்தச் சேவை கூகுள் வளர்ந்துவரும் சந்தைகளுக்குக் (Emerging Markets) கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படையாகக் காட்டுகிறது!

LOG OFF

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism