Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : பழ.நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய இயக்கம்படம் : என்.விவேக்

நானும் விகடனும்!

இந்த வாரம் : பழ.நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய இயக்கம்படம் : என்.விவேக்

Published:Updated:

பிரபலங்கள்   விகடனுடனான  தங்களின்  இறுக்கத்தை, நெருக்கத்தை,   விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும்    பக்கம்!

##~##

''எனது உயர்நிலைப் பள்ளிப் பருவம் முதல் விகடன் என்னோடு பயணித்துவருகிறது. தொடர்கதைகள்தான் விகடனின் எனது முதல் ஈர்ப்பு. கல்கியின் 'கள்வனின் காதலி’, தேவனின் 'துப்பறியும் சாம்பு’ உட்பட பல தொடர்களை நான் விரும்பிப் படிப்பேன். அந்த ஈர்ப்பு பின்னாளில் ஆயுட்காலப் பந்தமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் கேலிச் சித்திரங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை. சமூக நடப்பைச் சித்திரிக்கும், வாசகனைச் சிரிக்கவைத்துச் சிந்திக்கச் செய்யும் நகைச்சுவைத் துணுக்கு ஒன்றைப் பிரசுரித்ததற்காகவே, விகடன் ஆசிரியர் சிறைக்குச் செல்லத் துணிந்தார் என்றால், விகடன் கேலிச் சித்திரங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் புரியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் விகடன் தனது நேர்மையையும் துணிவையும் வெளிப்படுத்திவந்திருக்கிறது. அது எஸ்.எஸ்.வாசன் வழி இன்றும் தொடரும் பாரம்பரியம். விருப்பு வெறுப்பற்ற நிலை யில் பிரச்னைகளை அணுகுவதற்கும் அவர் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். பெரியாருடன் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் பெரியார் சமூகச் சீர்திருத்தத்துக்கு வழி வகுத்த உண்மையான தலைவர் என்பதைத் தனது பத்திரிகை வழியே சுட்டிக்காட்டிவந்திருக்கிறார். எஸ்.எஸ்.வாசன் அவர்களுக்கு காமராஜர் மீதும் அளப்பரிய அன்பு இருந்தது. ராஜாஜி, காமராஜர் ஆகியோரிடையே முரண்பாடு எழுந்தபோதுகூட அதில் தலையிடாமல் அவர்கள் ஆற்றிவந்த நல்ல காரியங்களை மட்டும் விகடன் ஆதரித்தது. அதைப் போலவே அண்ணாவுக்கும் தக்க மரியாதையை உரிய காலத்தில் செய்து இருக்கிறது விகடன்.

நானும் விகடனும்!

ஆரம்பக் காலத்தில் ஜெயகாந்தனின் சிறுகதைகளை நான் விரும்பி வாசித்து இருக்கிறேன். குடும்பக் கதைகளையே எழுதும் லக்ஷ்மியின் கதைகளும் அப்போது என்னைக் கவர்ந்தன. என் அபிமான ஓவியர் கோபுலுவின் ஓவியங்களை விகடனில் பார்த்தபோது எனக்குள் உண்டான மலர்ச்சியை இப்போதும் என்னால் உணர முடிகிறது. யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டும் விகடனின் தலையங்கம் எப்போதும் நான் விரும்புவது... நம்புவது. தவறு செய்தவர்கள் கோபப்படாமல் அதேசமயம், தங்கள் தவறை உணரும் வகையில் தலையங்கங்கள் எழுதப்படுவது விகடனின் தனிச் சிறப்பு!

எண்பதுகளில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். நான் எதிர்பாராத சமயம் என் சட்ட மன்ற நடவடிக்கைகளுக்கான பாராட்டு விகடனில் இடம்பெறும். அப்போது என் பேட்டிகள் சீரிய இடைவேளைகளில் விகடனில் வெளிவந்து கொண்டு இருந்தன. அந்தப் பேட்டிகள் அப்போதைய என் பணிகளை ஊக்குவிக்கும் சக்தியாக இருந்தன. 1984-ல் நியூயார்க்கில், உலகத் தமிழீழ மாநாடு என் தலைமையில் நடந்தது. அதில் தமிழகத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது அமெரிக்காவில் இருந்த என்னிடம் விகடன் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு மாநாட்டைப் பற்றி உடனடியாக ஒரு கட்டுரை எழுதித் தருமாறு கேட்டனர். புகைப்படங்களுடன் நான் அந்தக் கட்டுரையை அனுப்பினேன். 29.7.84 விகடன் இதழில் அந்தக் கட்டுரை வெளியானது. தமிழகம் அந்த மாநாட்டைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் விகடன் மூலம்தான் அறிந்துகொண்டது.

பிரபாகரன், கிட்டு போன்ற தலைவர்கள் சென்னையில் இருந்தபோது, அவர்களிடம் தகவல்களைத் திரட்டி செய்தியாக்கி இருக்கிறது விகடன். 1985 அக்டோபர் மாதம் ஈழத்துக்கு ரகசியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். ஒரு மாத காலம் அங்கு இருந்து பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன். அந்த விஷயங்களை ஜூனியர் விகடன் இதழில் 'அழுகையை அடக்கிக் கொண்டேன்’ என்கிற தலைப்பில் பயணக் கட்டுரையாக எழுதினேன். அதையட்டி வேறு பல தமிழகத் தலைவர்களிடமும் கட்டுரைகளை வாங்கி வெளியிட்டது விகடன்.

1990-ம் ஆண்டு தமிழீழத்துக்கு 25 நாட்கள் சுற்றுப்பயணமாகச் சென்றேன். திரும்பி வந்தவுடன் 'தம்பி இருக்குமிடம் தமிழீழம்’ என்ற தலைப்பில் விகடனில் அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். அந்தக் கட்டுரையின் மூலம்தான் ஈழத் தமிழர்களின் உண்மையான நிலையைப் பலரும் அறிந்துகொண்டனர். அதே கட்டுரையை 21 ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாத இதழொன்றின் 'பொக்கிஷம்’ பகுதியில் மீள்பிரசுரம் செய்திருந்தது விகடன். மீண்டும் அந்த வரிகளை வாசித்ததும் மனதுக்குள் பெருமிதம் பொங்கிய அதே சமயம், இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஈழத் தமிழர்களுக்கு இன்னும் ஒரு விடிவுக் காலம் பிறக்கவில்லையே என்ற வருத்தமும் மனதைப் பாரமாக்கியது. ஈழத் தமிழர் பிரச்னையை வணிக நோக்கோடு அல்லாமல், உணர்வுபூர்வமாக அணுகியதுவிகடன். அதே நிலைப்பாட்டைத்தான் விகடனின் சகோதர இதழான ஜூனியர் விகடனும் கைக்கொண்டு இருக்கிறது.

2002-ல் நான் பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். சிறையிலும் நான் விகடனை விடாமல் படித்தேன். அப்போதுதான் கவிஞர் வாலி விகடனில் எழுதிக்கொண்டு இருந்த 'ராமானுஜ காவியம்’ தொடரை வாசித்தேன். மிகச் சிறப்பாகச் சொல்லாடலுடன் எளிய கவிதை நடையில் வாலி படைத்த அந்தக் காவியம் என் மனதுக்கு நெருக்கமாக அமைந்தது. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் ஒரு திருமண வீட்டில் வாலியைச் சந்தித்தேன். அப்போது 'ராமானுஜ காவியம்’ தொடர்பாக அவரைப் பாராட்டினேன். அவர்என்னிடம் வியப்புடன் 'சிறையிலும் விகடன் கிடைக்கிறதா?’ என்று கேட்டார். அனைத்துப் பத்திரிகைகளுக்கும் சிறையில் அனுமதி கிடையாது. அனுமதிக்கப்படுகிற பத்திரிகைகளில் ஒன்றாக விகடன் இருக்கிறது என்று நான் தெரிவித்தேன்.

2009-ல் இறுதிக்கட்ட ஈழப் போர் நடைபெற்ற போது தமிழக மக்களுக்குப் போர் நிலவரங்களை உடனுக்குடன் உண்மையை மறைக்காமல் தெரிவித்த பெருமை விகடனையே சாரும். மற்றெந்த ஊடகங்களிலும் துணுக்குச் செய்தியாகக்கூட இடம்பெறாத வலி, வேதனை, இழப்புகள் விகடனில் அட்டைப் பட அங்கீகாரத்துடன் வெளியாகின. அப்போது விடாது தொடர்ந்து எனது பல கட்டுரைகளை விகடன் வாங்கி வெளியிட்டதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். தமிழகப் பத்திரிகை உலகில் ஆனந்த விகடனும் ஜூனியர் விகடனும் ஈழத் தமிழர் போராட்டத்துக்கு அளித்த ஆதரவு உண்மையானது; உணர்வுபூர்வமானது. விகடனின் ஈழம் தொடர்பான கட்டுரைகள் வெறும் பரபரப்புக்காக எழுதப்படுபவை அல்ல. ஈழத் தமிழர்களின் துயரம் துடைக்கப்பட வேண்டும் என்பதே அதன் அடிநாதமாக அமைந்திருக்கும்.

கடந்த பல வருடங்களாக என்னிடம் இருந்து அத்தனை தகவல்களையும் சாறாகப் பிழிந்தெடுத்த பின்னரும்... என்னை விட விருப்பம் இல்லைபோல விகடனுக்கு. மிகச் சமீபத்தில் என்னையும் விகடன் மேடையில் அமர்த்தி அழகு பார்த்தது விகடன். நானே ஆச்சர்யப்படும் வகையில் விதவிதமான பரிமாணங்களில் குவிந்த கேள்விகள், என் மொத்த ஆயுளின் நினைவு களிலும் மீண்டும் பயணிக்கச் செய்தது. அதிலும் விகடனில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தையும் உலகத் தமிழர்களின் மனதில் நிலைகொள்ளும் வலிமை பெற்றவை என்பதை விகடன் மேடை மூலம் மீண்டும் நான் அனுபவித்துத் திளைத்தேன்.

தற்போது வடிவமைப்பு, உள்ளடக்கம் என அனைத்து அம்சங்களிலும் நவீனம் பூசிக்கொண்ட விகடன், இன்றும் தன் கலாசார நிலைப்பாடுகளில் மட்டும் ஆயிரமாண்டு ஆலமரமாக வேரூன்றி நிற்கிறது. சமூகத்தின் அனைத்து வயதினரும் பிரிவினரும் அவசியம் அறிந்துணர வேண்டிய செய்திகளைச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் பரிமாறும் விகடன் சமையல்காரர்களின் கைப்பக்குவம் என்னைப் பிரமிக்கவைக்கிறது. ஆனாலும், ஏனோ 'சினிமா கூட்டு’ மட்டும் என்னை ஈர்ப்பது இல்லை. அதைவிடுத்து மற்ற பதார்த்தங்களைத் துளி விடாமல் சுவைத்துவிடுகிறேன். அந்தச் சுவைக்கு நான் பரம ரசிகன் என்றால் அது மிகையில்லை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism