Published:Updated:

வலையோசை

வலையோசை
வலையோசை

காதல் எனப்படுவது யாதெனில்...

வலையோசை

முன்பு எல்லாம் பத்தாம் வகுப்பு வரலாறு, புவியியல் பரீட்சை முடிந்த கையோடு செய்யும் முதல் காரியம்... தட்டச்சு எனும் டைப்ரைட்டிங் கிளாஸில் சேர்வதுதான். சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் காமர்ஸோ, லெட்சுமி தட்டச்சு நிலையமோ... ஏதோ ஒன்றில்தான் ஆரம்பிக்கும் வினை.

மனம் விரும்பிய ஃபிகரைக் கொஞ்சம் கொஞ்சமாக வட்டத்துக்குள் கொண்டு வருவதற்குள் படாதபாடுபட வேண்டி இருக்கும். ஒரு வழியாகப் பேச ஆரம்பித்து, பேசிக்கொண்டே இருக்க ஆரம்பித்து, பேசாமல் இருக்க முடியாது என்ற நிலைமை வரும். வெள்ளிக்கிழமை 'ஒலியும் ஒளியும்’ ஆரம்பித்துவிட்டது என லேண்ட் லைன் போனில் சிங்கிள் ரிங் வரும். இங்கு இருந்து பதிலுக்கு ஒரு சிங்கிள் ரிங். இது புரியாத பெரிசுகள் 'அலோவ்... அல்லல்லோவ்...' எனக் கத்திக்கொண்டு இருப்பார்கள்.

அடுத்தகட்டமாக, 'மௌனராகம் கார்த்திக்’தனங்களை நிறைவேற்றும் படலம். அவள் வீட்டு வாசல் கதவைத் தட்டி, அவள் அப்பாவிடமோ அம்மாவிடமோ 'இந்த அட்ரஸ் இதுதானா?' எனக் கேட்டுக்கொண்டே பின்னால் இருக்கும் அவளை, 'நாங்கள்லாம் யாரு’ என்கிறரீதியில் ஒரு பார்வை பார்ப்பது.

அடுத்த சில மாதங்களில்...

'எங்க வீட்டுல கல்யாணம்பத்திப் பேசுறாங்க, பயமா இருக்கு' வார்த்தைகள் ஆரம்பமாகிவிடும். உண்மையில் பயப்படுவது என்னமோ ஹீரோக்கள்தான். பெண்கள் அல்ல.

'மாப்ள, கல்யாணம் அது இதுன்றாங்களாம்டா. அவங்க வீட்டுக்கு மேட்டர் தெரிஞ்சுபோச்சுனு நினைக்கிறேன்.'

இந்த வரிகளுக்கு நண்பர்களிடம் இருந்து வரும் பதில்கள் தேன் வார்க்கும்.

'விடு மாப்ள... ரொம்பப் போனா ஆள தூக்கிட்டு வந்துட மாட்டோமா?'

பிறகு... அழுதோ, அடம்பிடித்தோ, மருந்து சாப்பிட்டோ அல்லது ரிஜிஸ்டரோ... ஏதோ ஒரு விதமாகக் கல்யாணம் செய்து, ஆரம்ப காலச் சுகங்களையும் துன்பங்களையும் ஒருசேர அனுபவித்து, பிரசவ வார்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, குழந்தை பிறந்தவுடன், அந்தக் குழந்தையைக் கொண்டுவரும் நர்ஸை சட்டை செய்யாமல், மனைவியாகிப்போன காதலியைத் தேடி, ஓடி, அவள் மயக்கமாக இருக்கும் அந்தத் தருணங்களில் நெற்றியில் முத்தமிட்டு... 'ஐ லவ் யூ’ என உதடுகள் முணுமுணுக்குமே...

காதல் எனப்படுவது யாதெனில், அதுதான்!

வலையோசை