Published:Updated:

பூமிக்கு வந்த ஏலியன்கள்!

ஓவியம் சொல்லும் மெசேஜ்

'சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு, எதிர் கால இந்தியாவின் வளர்ச்சி. இதுபோன்ற ஆக்கபூர்வமான கருத்துகளை வலியுறுத்தி சிங்காநல்லூரில் உள்ள ஒரு  பள்ளியில் சுவர் ஓவியப் போட்டி நடக்கிறது’ என்ற தகவலை வாய்ஸ் ஸ்நாப்பில்  பதிவு செய்து இருந்தார் கோவை சிங்காநல்லூரில் இருக்கும் எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு பள்ளியின் ஓவிய ஆசிரியரும் விகடன் வாசகருமான தூரிகை சின்னராஜ்.

பூமிக்கு வந்த ஏலியன்கள்!
##~##

''இந்த நிகழ்ச்சியை மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியுடன் இணைந்து நாங்க நடத்துறோம். ஆக்கபூர்வமான தலைப்புகளைக் கொடுத்து, ஒவ்வொரு தலைப்பிலும் பத்து மாணவர்களைக் கொண்ட குழு மெகா சைஸ் சுவர் ஓவியங்களை இணைந்து வரைஞ்சாங்க. இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஐடியா கொடுத்தது, எங்க பள்ளியின் தாளாளர் மணிமேகலை மோகன்தான்'' என்றபடி அவரை அறிமுகப்படுத்தினார் சின்னராஜ்.

''நிகழ்ச்சியில் எரிபொருள் சேமிப்பை வலி யுறுத்தும் விதமாக 'எதிர்கால வாகனம்’, சுற்றுச் சூழல் மாசுக்கு முற்றுப்புள்ளி வைக்க 'நெகிழியற்ற நிலம்’, மாற்று எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில் 'மரபுசாரா எரிசக்தி’, எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 'இந்தியா -2050’ ஆகிய தலைப்புகளில் ஓவியங்களை வரையச் சொன்னோம். ஆனால், இது போட்டி கிடையாது. மொத்தம் 80 மாணவ, மாணவியர் கள் எட்டுக் குழுக்களாகப் பிரிந்து அருமையான ஓவியங்களை வரைந்து தள்ளிவிட்டார்கள்.

'எதிர்கால வாகனம்’ என்ற தலைப்பில் சூரிய சக்தியால் பஸ்கள் இயங்குவது போல வரைந்து இருந்தார்கள். பஸ்ஸின் மேல் பகுதியில் சூரிய சக்தியைப் பெற்று மின் உற்பத்தி செய்யும் சாத னத்தைப் பொருத்த வேண்டும் என்று அந்த ஓவி யத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

'இந்தியா - 2050’ ஓவியத்தில் எதிர்காலத்தில் நிலாவில் நாம் வீடு கட்டி இருப்பது போன்ற முன்னேற்றத்தையும் அதேசமயம் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நாம் செய்யும் தவறு களால் விண்வெளி கிரகங்களில் இடம் போதா மல் ஏலியன்கள் பூமிக்கு வந்து வசிப்பதுபோலவும் ஓவியம் வரைந்து எச்சரிக்கை மணி அடித்து இருந்தார்கள்.

சுற்றுச்சூழல் மாசு அடைவதை இன்னொரு ஓவியம் மிக அழகாகச் சித்தரித்து இருந்தது. அந்த ஓவியத்தில் தாஜ்மஹாலுக்கு அருகே நிறையக் கட்டடங்கள் கட்டப்பட்டு இருந்தன. தாஜ் மஹாலுக்கு அருகே  யமுனை நதி மாசு கலந்து கறுப்பு நிறத்தில் ஓடுவது போலத் தத்ரூபமாக வரைந்து இருந்தனர். உண்மையில் தலைப்பு மட்டும்தான் நாங்கள் கொடுத்தோம். ஆனால், இன்றைய மாணவர்கள் நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அதனால்தான் நாங்களே எதிர்பாராதவிதமாக அற்புதமான ஓவியங்களை வரைந்து உள்ளனர்'' என்றார் பெருமிதத்துடன்!

- எஸ்.எம்.காவியபாரதி