Published:Updated:

வாசகர் வாய்ஸ் - கற்றது தமிழ் விற்பது சுண்டல்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் -புதுச்சேரி

வாசகர் வாய்ஸ் - கற்றது தமிழ் விற்பது சுண்டல்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் -புதுச்சேரி

Published:Updated:
வாசகர் வாய்ஸ் - கற்றது தமிழ்  விற்பது சுண்டல்!
வாசகர் வாய்ஸ் - கற்றது தமிழ்  விற்பது சுண்டல்!

''படிக்கும்போது சுண்டல் விற்றார். இப்போது படித்து முடித்து, மற்றவர்களுக்குப் படிப்பிக்கும்போதும் சுண்டல் விற்கிறார் புதுவையைச் சேர்ந்த சரவணக்குமார்'' என்று வாய்ஸ் ஸ்நாப்பில் வாசகர் ஜோதிமுருகன் தகவல் சொல்லி இருந்தார். சரவணக்குமாரைச் சந்தித்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுத்திலும் நெற்றியிலும் விபூதியுடன் சந்தனப்பொட்டு வைத்தபடி கைகளில் பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பக்கெட்டுகளுடன் கைப்பையும் சுமந்தபடி நடந்து வந்தார் சரவணக்குமார். புதுவை ராஜா தியேட்டர் அருகே உள்ள ஒரு கடைக்குச் சென்றவர், கடைக்குள்ளிருந்து சிரித்தபடியே வந்த கடைக்காரருக்கு சுண்டலை எடுத்துக் காகிதத்தில் மடித்துக் கொடுத்தார். அடுத்தடுத்தக் கடைகளிலும் அப்படியே. என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் முகம் மலர்ந்தவர், ''நானெல்லாம் என்ன சார் பண்ணிட்டேன்? என் வேலையைச் செய்றேன். இதெல்லாம் எதுக்கு சார்?'' என்று தயங்கியவர், பிறகு மெதுவாகப் பேசத் தொடங்கினார்.

''எங்க வீட்டுல  மூணு பசங்க, மூணு பொண்ணுங்க. அப்பாவோட வருமானம் பத்தலை. அரசாங்கப் பள்ளிக்கூடத்துலதான் நாங்க படிச்சோம். சரி நாமளும் ஏதாவது வேலை செஞ்சு குடும்பத்தைக் காப்பத்தலாம்னு அம்மாகிட்டப் போய், 'நான் சுண்டல் விக்கப் போறேன்’னு சொன்னேன். 'நீ நல்லா படிச்சா மட்டும் போதும்’னு  அம்மா சொன்னாங்க. ஆனாலும், விடாப்பிடியா நான் கேட்டுக்கிட்டதால 'சரி’ன்னு சம்மதிச்சதோட, அம்மாவே சுண்டலையும்  செஞ்சுக் கொடுத்தாங்க. கடைத்தெரு, குடியிருப்புப் பகுதிகள்ல சுண்டல் விக்கத் தொடங்கினேன். விற்பனையும் சூடு பிடிச்சது.

பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வந்து சாயந்தரம் சுண்டல் விக்கப் போயிடுவேன். ஆரம்பத்தில சுண்டல் விற்கும்போது தெரிந்தவர்கள், நண்பர்கள் கேலி செய்தாலும், நான் அதற்கெல்லாம் சோர்ந்து போகலை. படிப்பிலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தினேன். பத்தாம் வகுப்புத் தேர்வில் 458 மதிப்பெண்கள், ப்ளஸ் டூ வில் 933 மதிப்பெண்கள் எடுத்தேன். பி.ஏ, எம்.ஏ. முடிச்சுட்டு, காரைக்காலில் பி.எட்டும், எம்.ஃபில் மற்றும் பி.ஹெச்.டி. படிப்பைப் புதுவை பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்தேன். பி.ஹெச்.டி-யை மட்டும் பாதியில் நிறுத்தும்படி ஆயிடுச்சு.

வாசகர் வாய்ஸ் - கற்றது தமிழ்  விற்பது சுண்டல்!
##~##
தொடக்கத்தில் சுண்டல், சம்சா மட்டும் வித்துக்கிட்டிருந்தேன். இப்போ கூடுதலா கட்லெட்டும் போளியும் விற்கிறேன். தற்காலிகப் பணியா கடந்த 2010- லிருந்து அபிஷேகப்பாக்கம் அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியரா வேலை செய்றேன்.

'நீதான் நினைச்சமாதிரி ஆசிரியர் ஆகிட்டியே, டியூசன் சொல்லிக்கொடுத்து சம்பாதிக்கலாமே, ஏன் இன்னும் சுண்டல் விக்கிறே?’னு நிறையப்பேர் கேட்கிறாங்க. ஆனா, நான் ஆசிரியரா வரக் காரணமா இருந்தது இந்தத் தொழில்தான். இதை என்னால மறக்கமுடியாது''  என்று பேசிக்கொண்டு இருந்தவர், ''சார் லேட்டாகிடுச்சு. ரெகுலர் கஸ்டமர்ஸ் தேடுவாங்க'' என்றபடி ஒரு புன்னகையுடன் கிளம்பினார் சரவணக்குமார்!

- எம்.செய்யது முகம்மது ஆசாத்
படங்கள்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism