என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

நீதாண்டா உண்மையான கலைஞன் !

இரா.முத்துநாகு

 என்னதான் க்யூப் டிஜிட்டல், 3-டி அனிமேஷன், 3-ஜி போன் வந்தாலும் இன்னமும் கிராமங்களில் உயிர்ப்போடு இருக் கிறது ராஜா ராணி ஆட்டம்.  சமீபத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள மானூத்து கிராமத் துக்கு வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட் டினார்கள் மல்லையாபுரம் தங்கம் குழுவினர்.

இரவில் ஊரே மின் ஒளியில் ஜொலிக்க ஊர்ப் பெரியதனக்காரர் மைக்கைப் பிடித்து 'கொட்டுக்காரர்கள் எங்கு இருந்தாலும் உடனே பந்தலுக்கு வரவும்’ என அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் மேடைக்கு அருகில்வந்த  குடிமகன் ஒருவர் ''ஆட்டக்காரங்களை எவன் வரச் சொல்லுவான்... அவங்களும் உடனே வந்து ஆடணும்'' என்று மைக்கில் கட்டாய வேண்டுகோள் வைத்தார். ''யேப்பா... ஆட்டக்காரங்க வேஷம் போட்டுக்கிட்டு இருக்காங்கே... வந்திருவாங்க... செத்த பொறு'' எனச் சொல்லி அவரைத் தாஜா செய்தார்கள்.

நீதாண்டா உண்மையான கலைஞன் !
தங்கம்

ஆனால்,அவரோ ''ஆட்டக்காரங்க வர்ற வரைக்கும் நான் ஆடு றேன்'' என்று இடுப்பில்  நிற்காத வேட்டியை இறுக்கிக் கட்ட, அப்படியே அவரை அலேக் செய்தது ஒரு கோஷ்டி. பெண் வேடமிடும் தங்கம் தன்னுடைய வனப்பான கூந்தலை சீவியபடி அலங்காரத்துக்குத் தயாரானார். இதை ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டு இருந்த பெண்கள் சிலர் கன்னத்தில் கையைவைத்து ''வேஷக்காரங்க சவுரி முடி வெச்சிருப்பாங்கனு நினைச்சா... ஜடாமுனி மாதிரி முடி வெச்சிருக் காங்களே'' என்று ஏக்கமாகச் சொல்ல,  புன்ன கையோடு கூந்தலை அள்ளி முடிந்தார்தங்கம்.

நீதாண்டா உண்மையான கலைஞன் !

'' 'ராஜா ராணி’ ஆட்டத்துக்கு இன்னும் மவுசு இருக்கா?'' எனக் கேட்டவுடன் ''உசிலம் பட்டி சீமையில மட்டும்தான் திருவிழாவுக்கு ஆட எங்களைக் கூப்பிடுறாங்க.  மத்த இடங்கள்ல இழவு வீட்டுக்கு ஆடச் சொல்லி அனுப்புவாங்க. எங்க தாத்தன், முப்பாட்டன் காலத்திலேர்ந்து எங்க குடும்பத்துல ஒரு ஆள் பெண் வேஷம் கட்டிட்டிவர்றோம். 'இந்தக் கலை என்னோட அழிஞ்சிடக் கூடாது. நீயும்  பெண் வேஷம் கட்டணும்’னு என் அப்பா எங்கிட்ட சத்தியம் வாங்கி, முடி வளர்க்கச் சொன்னார். பள்ளிக்கூடத்துல படிக் கிறப்ப முடி முதுகுவரைக்கும் தொங் கும். என் கூடப் படிக்கிறவங்கல்லாம் என்னை  'தங்கப் பிள்ளை’னுதான் கூப்பிடுவாங்க.

அந்த வயசுல அது பெருசா உறுத்தலை. ஆனா, நான் இளந்தாரி ஆனப்ப என் சோட்டுப் பையன்கள் என்னை திருநங்கையைப் போல் பார்த்ததால, முடியை வெட் டிட்டேன். 'ஆட்டமும் வேணாம்... ஒண்ணும் வேணாம்னு என் பாட் டுக்குத் தோட்டம் தொரவுனு வேலைக்குப் போறேன்’னு அம்மாகிட்டச் சொல்லி அழுதேன். அதுக்கு எங்க அப்பன் 'உன் அழுகைதான்டா உனக்குள்ள இருக்கிற கலை உணர்வு... நீதான்டா உண்மையான கலைஞன்’னு என் மனசை மாத்திட்டார். முதன்முதலா சோழவந்தான் முத்துமாரி அம்மன் சந்நிதியில என் ஆட்டம் அரங்கேறுச்சு. என் பெண் வேஷத்தைப் பாராட்டி இரண்டாயிரம் ரூபாயை ஜாக்கெட் டுல குத்தினாங்க. அன்னைக்குதான் சாகுற வரைக்கும் இந்த வேஷம் கட்டுறதுனு முடிவெடுத்தேன்'' என்றார் தங்கம் ஆண்மை நிறைந்த  குரலில்.

ஊர் மந்தையில் ராஜபார்ட்டும் கோமாளியும் ஆடிக்கொண்டு இருக்க பெண் வேடமிட்டுத் தாவிக் குதித்து ஆடினார் தங்கம். சிறிது நேரம் கழித்து 'குறவன் குறத்தி ஆட்டமும் அதைத் தொடர்ந்து ராக்காயி வேடமும் வருகிறது’ என அறிவிப்பு வர, குறத்தி ஆட்டத் துக்காக உடை மாற்ற வந்த தங்கத் தைப் பின் தொடர்ந்து சில இளை ஞர்கள் வந்தனர்.

அவர்களிடம் ''நானும் உங்க ளைப் போல ஆம்பளைதான்யா... ஏன் என் பின்னாலே வர்றீங்க'' எனச் சொல்ல அவர்களோ ''இங்க பார்டா அக்காவுக்கு வெட்கத்தை'' என்றபடி நகர்ந்தார்கள். சின்னச் சிரிப்போடு  குறத்தி வேடத்துக்கு மாற ஆரம்பித்தார் தங்கம்!

நீதாண்டா உண்மையான கலைஞன் !