Published:Updated:

நான்தான் கடைசி ராஜா !

இ.கார்த்திகேயன் படங்கள்: எல்.ராஜேந்திரன்

நான்தான் கடைசி ராஜா !

இ.கார்த்திகேயன் படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
##~##

'ஆடி மாசம்னாலே எல்லா அம்மன் கோயில்லயும் கொடை நடக்கும். ஆனா, திருநெல்வேலிப் பக்கத்துல காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயில்ல ஆடி அமாவாசை அன்னைக்கு 'சிங்கம்பட்டி’ ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி, ராஜா உடையில் காட்சி அளிப்பார். வந்து பாருங்க... ரொம்ப வித்தியாசமா இருக்கும்'' என் விகடன் வாசகர் ஆறுமுகம் குரல் பதிவு செய்ததின் பேரில் அங்கு நாம் சென்றோம்.

பாபநாசத்தில் இருந்து வளைந்து நெளிந்த மலைப் பாதையில் சுமார் 20 கி.மீ. தொலை

வில் உள்ளது காணிக்குடியிருப்பு. துள்ளி ஓடிவரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது சொரிமுத்து அய்யனார் கோயில். பட்டவராயன் கோயில் அருகில் அமைக்கப்பட்டு உள்ள மேடையில் 31-வது பட்டம் பெற்ற முருகதாஸ் தீர்த்தபதி, ராஜா கெட்டப்பில் வெண்கொற்றக் குடையின் கீழ், வாள் ஏந்தி  அமர்ந்து இருந்தார். கோயில் விழாவின் முக்கிய நிகழ்ச்சி... பூக்குழி இறங்குதல். சங்கிலி பூதத்தார், பிரம்மராக்ஷி அம்மன் மற்றும் பட்டவராயன் கோயில் என மொத்தம் மூன்று இடங்களில் பத்து அடி நீளத்துக்கு பூக்குழி அமைத்து இருந்தார்கள். பூக்குழி தயாராகும் வரை சொரிமுத்து அய்யனார் சாமியாடிகள் வெள்ளிப் பிடி போட்ட பிரம்புக் கம்புகளை  வைத்துக்கொண்டு, எதிர்எதிராக நின்று விளையாட்டாகக் கம்புச்சண்டை போடுகிறார்கள்.

நான்தான் கடைசி ராஜா !

சங்கிலி பூதத்தார் சாமியாடிகள் சிலர்  நீளமான  சங்கிலியை எடுத்து 'ஹேய்... ஹேய்...’ என்று சொல்லிக்கொண்டே தங்கள் மார்பில் ஓங்கி அடித்துக்கொள்கிறார்கள். 'ஜலங்.. ஜலங்..’ என்று நம் காதுகளைப் பிளக்கிறது சங்கிலிச் சத்தம். சாமியாடிகளின் வித்தைகள் முடிவதற்குள், ''ஹலோ... ஹலோ... பூக்குழி தயாராகிவிட்டது.

சாமியாடிகள் ரெடியாகவும்'' என்று மைக்கில் அறிவிப்புவந்ததும்,  சீனியர் டு ஜூனியர் வரை மொத்தம் 150 சாமியாடிகள் தயாராகிறார்கள். மேளம் முழங்க ராஜா முன்பு மண்டியிட்டுக் கோயில் பிரசாதமான விபூதியைக் கொடுத்து ''நாங்கள் பட்டவராயரின் பிரதிநிதிகள்... பூக்குழிக்கு அனுமதி தாருங்கள் அரசே'' என்கிறார்கள்.

மரியாதையை ஏற்றுக்கொண்ட ராஜா, பதிலுக்குத் தாம்பாளத்தில் தேங்காய், பழம், வெற்றிலைப் பாக்குடன் கருப்பட்டி, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவைகளை வைத்துக்கொடுத்து ''தொடங்கட்டும் பூக்குழி'' என்றுச் சொல்லி அனுமதி தருகிறார். குலவைச் சத்தம், கொட்டுச் சத்தத்தோடு நடந்து முடிகிறது பூக்குழி இறங்குதல்.

நான்தான் கடைசி ராஜா !

திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கிய பின், ராஜா அறைக்குள் வந்த ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியைச் சந்தித்தோம்.

''இந்தத் திருவிழா கடந்த 250 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. ஆனால், அந்தச் சட்டம் வருவதற்கு முன்பே  பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழ்நாட்டில் நானும் வட இந்தியாவில் ஜோத்பூர் மகா ராஜாவும் மட்டுமே மிச்சம். சுமார் 1,200 வரு ஷம் பாரம்பரியம்கொண்ட சிங்கம்பட்டி ஜமீ னில் நான் 31-வது தலைமுறை ராஜா. எனக்கு மூன்று வயதாக இருக்கும்போதே என்னுடைய தகப்பனார் திவான்பகதூர் சிவசுப்பிரமணிய தீர்த்தபதி ராஜா இறந்துவிட்டதால் என்னை அரியணையில் ஏற்றிவிட்டார்கள். இதுவரை 77 வருட ஆடி அமாவாசையில் ராஜ தர்பாரில் அரியணையில் அமர்ந்து இருக்கிறேன். நான் தான் சிங்கம்பட்டி ஜமீனின் கடைசி ராஜா'' என்றார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா.

நான்தான் கடைசி ராஜா !

திருவிழாவைக் காண சர்ப்ரைஸ் விசிட் தந்த நகைச்சுவை நடிகர் செந்தில், நம்மிடம் ''நான் இதுவரைக்கும் இப்படி ஒரு திருவிழாவைப் பார்த்தது இல்லை. ஆனால், இந்தக் கோயிலைப் பத்தியும், ஜமீனைப் பத்தியும் நிறையவேகேள்விப் பட்டுள்ளேன். என்னோட உறவினர் சொன்ன தால இந்தத் திருவிழாவுக்கு வந்தேன். கடந்த 23 வருஷமா சபரிமலைக்கு மாலை போட்டுப் போயிட்டு இருக்கேன். அந்த அய்யப்பனோட ஏழு நிலைகளில் முதல்நிலையான அவதாரம் நம்ம தமிழ்நாட்டுல இருக்கு. அதுவும் நெல்லை மாவட்டத்துல உள்ள இந்தச் சொரிமுத்தையனார் கோயில்தான் என்பது ரொம்பப் பெருமைக்குரியது'' என்றார்!