Published:Updated:

என் ஊர் - இல்லடா இல்லடா... டிக்கெட் இல்லடா !

கே.கே.மகேஷ்

என் ஊர் - இல்லடா இல்லடா... டிக்கெட் இல்லடா !

கே.கே.மகேஷ்

Published:Updated:
என் ஊர் - இல்லடா இல்லடா... டிக்கெட் இல்லடா !
##~##

நகைச்சுவை நடிகர் சூரி, தான் பிறந்து வளர்ந்த கிராமமான ராஜாக்கூர் பற்றிய தன் எண்ணங்களை, நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

என் ஊர் - இல்லடா இல்லடா... டிக்கெட் இல்லடா !

''மதுரையில இருந்து 20 கிலோ மீட்டர் தள்ளி இருக்குது ராஜாக்கூர். வாய்க்கா, வரப்பு, கண்மாய், கழனினு எப்பவும் அழகா இருக்கிற கிராமம். ஊருக்கு நடுவுல இருக்கிற பிள்ளையார்கோயில் ஊரணியில வருஷம் பூரா தாமரை பூத்துக்கிடக்கும். ஊர்ல ஆடு, மாடுகள் நிறைய வளர்ப்பாங்க. இங்கேர்ந்து அனுப்புற பால்லதான் மதுரையில நிறைய டீக்கடைகளே ஓடிக்கிட்டு இருக்கு.

ஊர் சின்ன ஊரா இருந்தாலும், படிச்சவங்க ஜாஸ்தி. குறைஞ்சது பத்தாப்பு வரைக்காச்சும் படிச்சிருவாய்ங்க. காங்கிரஸ் ஆட்சிக் காலத்துல, இந்த மாவட்டத்திலேயே ஒரே ஒரு அரசு வக்கீல்தான் இருந்தாரு. அவர் எங்க ஊர்க்காரர் முத்துமலைச்சாமிதான். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகள்ல டீனா இருந்த என்.எம்.முத்தையாவும் எங்க ஊர்க்காரர்தான்.

எங்க அப்பா ரொம்ப குசும்பு புடிச்ச ஆளு. 'வீசைக்காரர்’னாப் போதும், மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டுல தெரியாத ஆளுங்களே கிடையாது. ஊர்ல ஜல்லிக்கட்டு நடக்கும். சாராய வாசனையோட களம் இறங்கி அவர் பண்ற அழும்பு இருக்கே... ஒருநா இப்படித்தான். 'வேணாம்ப்பா நிகழ்ச்சி நல்லபடியா முடியணும்’னு யாரையும் நெருங்கவிடாம பூராப் பேத்தையும் பயங்காட்டிட்டு, கொஞ்சம் பேரோட மாட்டைத் துரத்தினாரு. மிரண்டு போன மாடு ஒரு சந்துக்குள்ள போயிருச்சு. இவிய்ங் களும் உள்ளே போய் மொத்தமா மாட்டிக்கிட்டாய்ங்க. மாடு வெளியே வர முயற்சி பண்ண, இவங்க குத்திடுமோனு பயந்து கத்த, உள்ளே என்ன நடக்குதுனு தெரியாத அளவுக்குப் புழுதிக் கிளம்பிடுச்சு. அந்தச் சம்பவத்தை நினைச்சு நினைச்சு இப்பவும் ஊர்ல சிரிப்பாய்ங்க.

என் ஊர் - இல்லடா இல்லடா... டிக்கெட் இல்லடா !

அழகுநாச்சியம்மன் கோயில் திருவிழாவுல வருஷந்தோறும் வள்ளி திருமண நாடகம், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் போடுவாய்ங்க. சின்ன வயசுலேயே நாடகம், நடன நிகழ்ச்சி எங்க நடந்தாலும் முதல் ஆளாப் போய் உட்காந்திருவேன். என்னைக் காணலைன்னா எங்க அப்பா எங்கே ரேடியோ பாடுதுன்னு பார்த்துத் தேடிகிட்டு வருவாரு.

என் ஊர் - இல்லடா இல்லடா... டிக்கெட் இல்லடா !

எங்க வீட்டுல என்னோட சேர்த்து ஆறு பசங்க. எல்லாம் அடுத்தடுத்த வருஷ ரிலீஸு. எங்காச்சும் அப்பா போனாருன்னா, வரிசையாக் கை கோத்து, கைதிகளைக் கோர்ட்டுக்குக்கொண்டு போற மாதிரி கூட்டிட்டுப் போவாரு. ஒருவாட்டி அழகர் ஆத்துல இறங்கினப்ப, பூராப்பேத்துக்கும் மொட்டையைப் போட்டுவுட்டுட்டாரு. சாமியைப் பார்க்கிறதுக்காக ஒவ்வொருத்தரையா தோள்ல தூக்கிக் காட்டிக்கிட்டு இருந்தாரு. எண்ணிக்கையில மிஸ்ஸாகி யார் பிள்ளையையோ தோள்ல தூக்கி 'மவனே... இப்ப பாருடா மவனே'னு காட்ட, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை மூண்டிருச்சு.

எங்க ஊர்ல சிவன் டீக்கடைனு இருக்குது. விடலைப் பசங்க பூராப்பேரும் அங்கதான் டாப்படிப்போம். 'சிவன் டீக்கடையில கூட்டம் அள்ளுதப்பா’னு ஊர்ல பேசிக்குவாய்ங்க. ஆனா, பாவம் அந்தாளுக்குக் காசு மிஞ்சாது. எங்க வீட்டுல இருந்து பால் ஊத்துறதால, டீ குடிச்சுட்டு கணக்குல கழிச்சிக்குவோம். நாங்க ஊரை விட்டு வந்த பின்னாடிதான் அவரோட கடை நல்லா ஓட ஆரம்பிச்சது.

என்னோட நண்பன் வெற்றிவீரன்  மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டுல ஒரு பெட்டிக் கடை வெச்சிருந்தான். நானு, திவாகர், சிவக் குட்டி எல்லாரும் வெற்றிவீரன் கடையிலதான் டாப்படிப்போம். காலையிலயும் சாயந்திரமும் அங்க இருந்துக்கிட்டு  ஸ்கூல்,  காலேஜுக்குப் போற பிள்ளைகளைப் பூரா சைட் அடிப்போம். 'மானையா’னு  ஒரு கண்டக்டர் இருந்தாரு. அவர்கிட்ட நாங்க எதிர்பார்க்கிற ஆள் ஏறியாச்சானு சைகையிலேயே கேட்போம்.  'இல்லடா இல்லடா டிக்கெட் இல்லடா'னு சொல்வாரு.

என் ஊர் - இல்லடா இல்லடா... டிக்கெட் இல்லடா !

சினிமா வாய்ப்புத் தேடி சென்னையில அலைஞ்சப்ப,  சாப்பாட்டுக்கே வழியில்லை. ஊருக்குத் திரும்பலாம்னா, 'ஆயிரம் ரூபா கூட அம்மா கையில கொடுக்காம எப்படிடா ஊருக்குப் போறது’னு நெனச்சு ஊருக்கேப் போகலை. இப்படியே ஆறு வருஷம் சென்னையிலேயே  இருந்தேன். அந்த நேரத்துல என்னையும் எங்க குடும்பத்தையும் காப்பாத்துனது நாங்க வெச்சிருந்த  அம்மன் டீக்கடைதான்.

இப்ப நான் சந்தோஷமா இருக்கேன். பசுமை யான எங்க ஊரும் பரபரப்பான அண்ணா பஸ் ஸ்டாண்டும் இப்பவும் என் நெஞ்சுக்குள்ளேயே இருக்கு!''

படங்கள்: பா.காளிமுத்து,
வீ.சக்தி அருணகிரி