Published:Updated:

வாசகர் வாய்ஸ் - மட்டிக்கல் ஏழைகளின் இறைச்சி!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - கடலூர்

வாசகர் வாய்ஸ் - மட்டிக்கல் ஏழைகளின் இறைச்சி!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - கடலூர்

Published:Updated:
வாசகர் வாய்ஸ் - மட்டிக்கல் ஏழைகளின் இறைச்சி!
##~##
'''ம
ட்டிக்கல்’ பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நம்மில் பலருக்கு அந்த வார்த்தையே புதிதாகத் தெரியும். ஆனால், கடல் மற்றும் ஆறுகள் சங்கமிக்கும் பகுதிகளில் வாழும் மனிதர்களுக்குதான் 'மட்டிக்கல்லின்’ மகிமை தெரியும். குறிப்பாகக் கடலூர் தியாகவல்லிப் பகுதியில் அதிக அளவில் மட்டிக்கல் பயன்படுத்தப்படுகிறது'' இந்தத் தகவலை குரல் பதிவு செய்திருந்தார் என் விகடன் வாசகர் மோகன். மட்டிக்கல் பற்றி அறியக் கடலூரில் உள்ள தியாகவல்லி கிராமத்துக்குச் சென்றபோது  ''உணவாக, மருத்துவ குணம் கொண்டதாக, கைவினைப் பொருட்களாக என்று பல பரிமாணங்களைக் கொண்ட இந்த 'மட்டிக்கல்’ ஏழைகளுக்காகவே இயற்கை படைத்த இறைச்சி'' என்றபடி கை குலுக்கினார் கடலூர் தியாகவல்லியைச் சேர்ந்த மணியரசன்.

''எங்கெல்லாம் நன்னீரோடு கடல் நீர் சேருகிறதோ அங்கெல்லாம் மட்டிக்கல் அதிக அளவுல கிடைக்கும். பொதுவாகக் கிராம மக்கள் தினம் காலையில ஆத்துல இறங்கி மட்டிக்கல்லைப் பொறுக்க ஆரம்பிச்சுடுவாங்க. கடலூர்ல பல ரசாயன நிறுவனங்கள் தங்கள் கழிவுகளை ஆத்துல கலந்துட்டு இருந்தாங்க. அதன் விளைவா நீர் மாசுபட்டு மட்டிக்கல் கிடைக்காமல் போனது. பல  போரட்டங்கள் நடத்தி ஆற்றில் கழிவுகள் கலப்பதை நிறுத்தின உடனே, மட்டிக்கல் அதிக அளவுல கிடைக்குது.

வாசகர் வாய்ஸ் - மட்டிக்கல் ஏழைகளின் இறைச்சி!

மட்டிக்கல் நாம சாப்பிடுவதற்கு ஏற்றதுதான். கிராமத்துல  பெரிய வசதி எல்லாம் யாருக்கும் கிடையாது. இலவசமாகக் கிடைப்பதால் கிராமத்தில் உள்ள அனைவருமே மட்டிக்கல்லை விரும்பிச் சாப்பிடுவாங்க. ரத்த சோகை, மூல நோய், மஞ்சக் காமாலை போன்றவற்றை விரட்டி அடிக்கும் சக்தி மட்டிகல்லுக்கு உள்ளதாச் சொல்றாங்க. முக்கியமா ரத்தத்தைச்  சுத்தப்படுத்தி ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். அந்த அளவுக்குப் பல மருத்துவ குணங்களைக்கொண்டது. இது சாப்பிட கனவாய் மீன் போல சுவை கொண்டது.

கிராமங்களில் பல வீடுகளுக்கு முன்னாடி மலை போலக் கிளிஞ்சல்கள் குவிச்சு வெச்சிருப்பாங்க. மட்டிக்கல்லில் உள்ள இறைச்சிப் பகுதியை எடுத் துட்டு அதோட ஓடுகளை தூக்கிப் போடாம வீட்டுக்கு முன்னாடி போட்டுடுவாங்க. காரணம், மாதம் இரண்டு முறை சுண்ணாம்பு செய்றவங்க வந்து ஒரு கூடை 20 ரூபாய்க்குனு எடுத்துட்டுப் போவாங்க. அந்த மாதிரி சமயங்களில் ஒரே களே பரம் ஆயிடும். 'நான் முந்தி நீ முந்தி’னு கிட்டத்தட்ட ஒரு குட்டிச் சந்தை மாதிரி அந்த இடம் மாறி இருக்கும். அப்படி வாங்கப்பட்ட கிளிஞ்சல்களில் இருந்து ஒயிட் சிமென்ட், சுண்ணாம்புனு பல பொருட்களையும் செய்றாங்க. அது மட்டும் இல்லாம கைவினைப் பொருட்களும் இதில் இருந்து செய்யப்படுகின்றன. அரசாங்கத்திடம் அனுமதி பெற்று வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன'' என்கிறார் மணியரசன்.

வாசகர் வாய்ஸ் - மட்டிக்கல் ஏழைகளின் இறைச்சி!

மட்டிக்கல் எப்படி சமைக்கப்படுகிறது என்பதைக் காணச் சென்றேன். கூடை நிறைய மட்டிக்கல் அள்ளி வரப்பட்டு நல்ல தண்ணீரில் முதலில் போடப்படுகிறது. அதில் ஒட்டிக்கொண்டு இருக்கும் மண் போகும்வரை பலமுறை அலசப்பட்டுப் பின் கொதிக்கும் நீரில் போடப்படுகிறது. 20 நிமிடங்கள் கழித்து கொதி நீரில் போடப்பட்ட மட்டிக்கலின் வாய் பிளவுபட்டு இருக்கும். அதற்குள் வெந்திருக்கும் இறைச்சியை அப்படியே சாப்பிடுகின்றனர் கிராமத்தில் உள்ளவர்கள்.

இன்னும் சுவையாகச் சமைக்க என்ன செய்யலாம்?

முதலில் மட்டிக்கல்லை அலசிவிட்டு வேகவைக்க வேண்டும். அதை ஓட்டோடு பிரித்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். பின் வாணலியில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி, அரிந்து வைக்கப்பட்ட வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி மட்டிக்கல் இறைச்சியை அதனோடு சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கிளறி சிறிது தண்ணீர் தெளித்து 10 நிமிடங்களுக்கு அப்படியே விட வேண்டும். பின் கொத்தமல்லித் தழையைத் தூவி சுடச் சுட பரிமாற வேண்டியதுதான்!

- நா.இள.அறவாழி
படங்கள்: எஸ்.தேவராஜன்