Published:Updated:

"ஏழை மாணவர்களுக்காக மேஜிக் செய்கிறேன்!”

"ஏழை மாணவர்களுக்காக மேஜிக் செய்கிறேன்!”

"ஏழை மாணவர்களுக்காக மேஜிக் செய்கிறேன்!”

'தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர், கல்லூரிப் பேராசிரியர், குழந்தைகளுக்காக மேஜிக் ஷோ நடத்துபவர்’ என சேதுராமனுக்கான அடையாளங்கள் அதிகம். இவரைப்பற்றி குரல் பதிவு செய்து இருந்தார் என் விகடன் வாசகர் சத்யமூர்த்தி. சேதுராமனைச் சந்தித்தபோது, ''ஒரு மனிதனுக்குக் கல்விதான் சமுதாயத்தில் சிறப்பான அடையாளத்தையும் நிலையான அங்கீகாரத்தையும் தரும். ஆனால், கல்வி வியாபாரமாகிவிட்டது. அது ஏழைப் பிள்ளைகளுக்கு எட்டாக்கனியாக இருப்பது நம் நாட்டின் துரதிர்ஷ்டம். இந்த நிலையில் சில ஏழை மாணவர்கள் உயர் கல்வியை இலவசமாகப் படிப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கிறேன். இது போதும் எனக்கு. இந்தப் பிறவிப் பலனை அடைந்துவிட்டேன்'' உற்சாகமாகத் தொடங்குகிறார் ஓசூரைச் சேர்ந்த சேதுராமன்.

"ஏழை மாணவர்களுக்காக மேஜிக் செய்கிறேன்!”
##~##

தான் சிறு வயதில் கல்வி கற்பதற்காகப் பட்டக் கஷ்டங்களை இன்றைய மாணவர்கள் படக்கூடாது என்பதற்காகவே சுமார் 80 ஏழை மாணவர்களைத் தேர்வு செய்து இலவசமாகப் பொறியியல், டிப்ளமோ படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.

''மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்துவந்தவன் நான். என்னுடைய சொந்த ஊரான குமாரமங்கலத்தில் முதன்முதலில் ப்ளஸ் டூ முடித்த மாணவன் நான்தான். அதனால், மொத்த ஊர்க்காரர்களுக்கும் கடிதம் எழுதவும் செய்தித்தாள் படித்துக் காட்டவும் நான் பயன்பட்டேன். இதனாலேயே கல்வியின் அவசியம் எனக்குச் சிறுவயதிலேயே தெரிந்துவிட்டது. ஆனால், மேற்கொண்டு படிக்க வசதி இல்லை. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் டிகிரி முடித்தேன். ஓசூர் பி.எம்.சி. கல்லூரியில் வேலையும் கிடைத்தது. சம்பாதிப்பதும் சாப்பிடுவதுமாக வாழ்க்கை சென்றுகொண்டு இருந்தபோதுதான் ஏழை மாணவர்களுக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது.

அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் டூ வரை படித்த ஏழை மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு வசதி இல்லாததால் குறைந்த சம்பளத்தில் கிடைத்த வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள். இப்போது நல்ல சம்பளம் பெறும் வேலை அமைய ஒரு டிகிரிப் படிப்பாவது கண்டிப்பாய் தேவைப்படுகிறது. எனவே, நம்மால் முடிந்தவரை அவர்களுக்கு உதவலாம் என்று களப்பணியில் இறங்கிப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களைத் தேடிக்கண்டுபிடித்தேன். இந்த மாணவர்களின் நிலைமையைப் பற்றி நான் வேலை பார்த்த கல்லூரி நிர்வாகத்திடம் எடுத்துச்சொல்லி அவர்கள் இலவசமாகப் படிக்க ஏற்பாடு செய்தேன். இதோ இப்போது 80 மாணவர்களும் சந்தோஷமாக படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.  இதற்கு என் கல்லூரிக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டு உள்ளேன்.'' நெகிழும் சேதுராமன் பள்ளி, கல்லூரி மற்றும் பெரும் நிறுவனங்களில் மேஜிக் ஷோக்கள் நடத்தி, அதில் கிடைக்கும் வருவாய் மூலம்  மாணவர்களுக்கான செலவுகளைச் செய்து வருகிறார்.

"ஏழை மாணவர்களுக்காக மேஜிக் செய்கிறேன்!”

''எனக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம். 16 வயதில் நான் மண்ணைக்கொண்டு வடிவமைத்த குளிர்சாதனப் பெட்டிக்கு 'சிறந்த இளம் விஞ்ஞானி’ விருதை அப்துல்கலாம் கொடுத்தார். இந்த அனுபவத்தில்தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பினர் ஆனேன். அந்த இயக்கத்தின் மூலமாக மேஜிக் கலையைக் கற்று இதுவரை 1,500 ஷோக்களுக்கும் மேல் நடத்திவிட்டேன். இந்த ஷோக்களின் வருமானமும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பயன்பட்டு வருகிறது''

- ஒரு மெல்லிய புன்னகையுடன் சொல்லி முடித்தார் சேதுராமன்!

"ஏழை மாணவர்களுக்காக மேஜிக் செய்கிறேன்!”

- கு.சக்திவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு