Published:Updated:

''நான் காக்கி மேன்!''

அடடே ஸ்டீபன்

''நான் காக்கி மேன்!''

அடடே ஸ்டீபன்

Published:Updated:
##~##

''அண்ணா நகர் திருமங்கலத்துலேர்ந்து பேசுறேன் சார். இங்க ஒரு ஆளு வித்தியாசமா சுத்திட்டு இருக்காரு. நீங்க உடனே வந்தாப் பார்க்கலாம்'' - இப்படி குரல் பதிவு செய்து இருந்தார் என் விகடன் வாசகர் ரமேஷ். அவரைத் தொடர்புகொண்டு திருமங் கலத்துக்குக் கிளம்பினேன். 

தகவல் சொல்லிய ரமேஷ், என்னோடு கூடவே வந்து அந்த மனிதரை அடையாளம் காட்டினார். காக்கிச் சட்டை, காக்கி பேன்ட் சகிதம் இருந்தவரின் கையில் புத்தம் புதிய அ.தி.மு.க. கொடி. கொஞ்சம் சத்தமாக 'சந்தோஷம் பொங்குதே... சந்தோஷம் பொங்குதே...’ என்று பாடிக்கொண்டே எவரைப் பற்றியும் கவலைப்படாமல் சிக்னலை கிராஸ் செய்தார். 'இது என்ன புது காம்பினேஷனாக இருக்கிறதே?’ என்று அவரை நெருங்கிப் பேச்சுக் கொடுத்தேன். ''என் பேரு ஸ்டீபன். திருமுல்லைவாயில்ல இருக்கேன். வீடு வீடா போய் ஜெபம் பண்ணுவேன். அவங்க கொடுக்குற காணிக்கையில ஏதாவது சாப்பிடுவேன். பல சமயத்துல டீ, வடைக்குத்தான் காசு தேறும். 43 வயசு ஆகிருச்சு. என் கூடப் பிறந்தவங்க  எனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சாங்க. யாருக்கும் என்னைப் புடிக்கவே புடிக் காது. அந்தப் பொண்ணுக்கு மட்டும் எப்படிங்க என்னைப் புடிக்கும்? வேற ஒருத்தரோட ஓடிப் போயிருச்சு. 'எங்கிருந் தாலும் வாழ்க’னு பாடிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிட்டேன்.

''நான் காக்கி மேன்!''

சரி, இன்னமே மனுஷங்களுக்குத் தொண்டு செய்வோம்னு முடிவு பண்ணி, கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கெல்லாம் போய் அங்கே  இருக்குற நோயாளிங்க குணமாறதுக்குப் பிரார்த் தனைப் பண்ண ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல பாதிரியார் மாதிரி வெள்ளை டிரெஸ்லதான் போனேன். அலைஞ்சுத் திரிஞ்சுட்டு   அழுக்கு மனுஷனாதான் வீட்டுக்குத் திரும்பினேன். துணிகளைத்  துவைச்சு மாளலை. அப்ப வந்த ஐடியாதான் இந்த காக்கி டிரெஸ். அடி அடின்னு அடிக்கலாம். வாரத் துக்கு ரெண்டு தடவை துவைச்சாப் போதும். கம்பீரமாவும் தெரியும்னு ஆறு வருஷமா காக்கி டிரெஸ்லதான் ஊர் சுத்து றேன். இப்போ நான் காக்கி மேன்'' வியர்வைச் சொட்டச் சொட்டப் பேசுகிறார்.

''அது சரி...  கையில் என்ன அ.தி.மு.க. கொடி?'' என்றால், ''எனக்கு அம்மாவை ரொம்பப் புடிக்கும். அதான் இந்தக் கொடி. தப்புத் தண்டாவுலதான் எறங்கக் கூடாது. யாருக்கும் எந்தத் தொந்தரவும் குடுக்காம நமக்குப் புடிச்ச டிரெஸ்ஸைப் போட்டுட்டு, புடிச்ச கொடியோட ரோட்டு மேல நடக்கலாம்ல. என்னாட்டம் யாராலங்க கொடியைத் தூக்கிட்டு நடையா நடந்து கட்சியை வளர்க்க முடியும்? தி.மு.க ஆட்சிக் காலத்தில கூட  போலீஸ்காரங்க என்னை நிறுத்தி ஒரு கேள்விகேட் டது இல்லீங்க. ஒரு தடவை நைட்டு நேரத்துல நடந்துபோய்ட்டு இருந்தேன். அப்போ ஒரு பொண்ணுகிட்ட ஒரு கூட்டம் வம்பு இழுத்துட்டு இருந்துச்சு. என்னை தூரத்துல பார்த்ததும் போலீஸ்னு நினைச்சு ஓடிப் போய்ட்டானுங்க. அந்தப் பொண்ணு கையெடுத்துக் கும்பிட்டுச்சு. அப்போ ஏதாச்சும் நான் சொல்லணுமே... 'நான் போலீஸ் இல்லை; காவலன்’னு சொன்னேன்.

நான் பத்தாம்ப்பு ஃபெயிலுங்க. ஆனா, கவி தைங்க சூப்பரா எழுதுவேன் தெரியுமா?அம்மா வுக்கும் ஒரு கவித எழுதி அனுப்பிவெச்சேன். ஒரு தடவை பதில் வந்தது. (சி.எம். செல்லில் இருந்து பதில் வந்ததைச்  சொல்கிறார்) அது போதும். இப்போதைக்கு என் மனசுக்குள்ள ரெண்டே ரெண்டு ஆசைங்கதான் இருக்கு. 50 வயசு ஆறதுக்குள்ள ஒரு கல்யாணம் பண்ணிக்கணும். டெல்லி வரைக் கும் அ.தி.மு.க. கொடியைத் தூக்கிட்டு நடந்தே போகணும்'' என்ற ஸ்டீபன் விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினார். அவரை விநோதமாகப் பார்த்தபடியே கடந்து சென்றனர் திருமங்கலம் மக்கள்!

- ஆர்.சரண், படம்: ஆ.முத்துக்குமார்