என் விகடன் - சென்னை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
Published:Updated:

என் ஊர் - உலகில் சிறந்த பாதை !

Seenu Ramasamy
News
Seenu Ramasamy

இ.கார்த்திகேயன் படங்கள்: பா.காளிமுத்து

இயக்குநர் சீனுராமசாமி
திருநகர்

##~##

'தென்மேற்குப் பருவக் காற்று’ படத்துக்காகத் தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனுராமசாமி தன் சொந்த ஊரான மதுரை மாவட்டம் திருநகர் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

''மதுரையில் இருந்து தெற்கே 15 கி.மீ. தூரத்துல இருக்குது திருநகர். கண்ணுக்கு எட்டுற தூரம் வரைக்கும் ஊரைச்சுத்தி எள்ளுச் செடிகளா இருக்கும். எங்க ஊருல ரயில்வே டி.டி.ஆர். ஒருத்தர் இருந்தார். அவரோட வீடு மட்டும்தான் எங்க ஊர்லேயே பெரிய வீடு. அவர் வீட்டு வழியாகத்தான் நானும் தம்பிகளும்  பள்ளிக்கூடத்துக்குப் போவோம். பக்கத்துல பர்மா காலனியில் உள்ள சார்லஸ் கான்வென்ட்லதான் படிச்சேன். பர்மாவுல இருந்து வந்த மக்கள் இங்கவந்து குடியேறுனதுனால 'பர்மா காலனி’னு பேரு வந்துடுச்சு. இந்த காலனியில உள்ள எல்லா வீடுகளும் கூம்பு வடிவத்தில் இருக்கும். திருநகர்ல ஒரு ஸ்டுடியோ இருந்துச்சு. 1940-களில் வெளிவந்த கறுப்பு, வெள்ளை படங்கள் எல்லாம்  இங்கதான் எடுத்தாங்க. அந்த ஸ்டுடியோ இப்போ குடோனா மாறிடிச்சு. எனக்குப் பதஞ்சலின்னு ஒரு ஃப்ரெண்ட் இருந்தான். ஸ்கூல் லீவு விட்டாலே ஆளுக்கு ஒரு சைக்கிளை எடுத்துக்கிட்டு ஊர் முழுக்க ரவுண்டு அடிப்போம்.

என் ஊர் - உலகில் சிறந்த பாதை !

திருநகர் நாலாவது ஸ்டாப்புலதான் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இலக்குவனாரின் வீடு. அவர் இறந்ததும் அந்த வீட்டையே அவரோட சமாதியா ஆக்கிட்டாங்க. அங்க அடிக்கடி போவோம். நாங்க சின்னப் பிள்ளைகளா இருக்கும்போது ஊருக்குக் கிழக்கே இருக்கிற மொட்ட மலைக்கு எங்களைப் போக விட மாட்டாங்க. அங்கே சிங்கம், புலி இருக்குன்னு பயமுறுத்துவாங்க. நானும் ரொம்ப நாள் அதை நம்பிக்கிட்டு இருந்தேன். அப்புறம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான் மொட்ட மலையில் ஏறி மலை முழுக்கச் சுத்தினோம். வேப்ப மரங்கள் அடர்த்தியா இருக்கிற அறிஞர் அண்ணா பூங்காதான் எங்க ஃபேவரைட் கிரவுண்ட்.  ஸ்கூல் விட்டு வந்ததும்  கிரிக்கெட் விளையாடுவோம். அப்போ கிரிக்கெட் ப்ளேயர் ஆகிறது தான் என் வாழ்நாள் கனவா இருந்துச்சு.  

அச்சமுத்தம்மன் கோயில் பக்கத்துல உள்ள குழாயடி மின் கம்பத்துக்குக் கீழே வட்டமா உட்கார்ந்து பாடம் படிப்போம். இலந்தப் பழம், களாக்காய், சோளக்கருது, நவாப்பழம், கடுக்காய் இதெல்லாம்தான் எங்களோட தின்பண்டங்கள். எங்க தாத்தா ரொம்பப் பழமையான ஆளு. தமிழ்நாட்டு உணவுகளைத்தான் விரும்பிச் சாப்பிடுவார். அதனால,  எங்களையும் புரோட்டா சாப்பிட விடமாட்டார்.  புரோட்டா சாப்பிடக் கிளம்பினா உட்காரவெச்சு அட்வைஸ் பண்ணி கம்மங்கழி, சோளக்கஞ்சி சாப்பிட வெச்சிருவார். எங்க ஊர்ல 'விளாச்சேரி பானைபுரி’க்கு மயங்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. ஓடையில் வரும் அயிரை மீன்களைப் பானை வச்சிப் பிடிப்பாங்க. விடியக் காலையில ஆறு மணிக்கெல்லாம் அம்மாக்கூட விளாச்சேரிக்குப் போவேன். மீனை வாங்கிட்டு வர்றப்ப  வீடு வந்து சேர்ற வரைக்கும் அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவை தூக்குச்சட்டி மூடியைத் திறந்து பார்த்துச் சிரிப்பேன். சின்னச் சின்ன மீன்கள் துள்ளிக் குதிச்சு விளையாடும். பார்க்கவே ஜாலியா இருக்கும். வீட்டுக்கு வந்ததும் அந்த மீன்களை வேற ஒரு பாத்திரத்தில போட்டுத் தண்ணீருக்குப் பதிலா பசும்பாலை ஊத்திக் கொஞ்ச நேரம் நீந்த விடுவாங்க. மீன்கள் பாலைக் குடிச்சிட்டு மண்துகள்களைத் துப்பி விடும். அப்புறம், அம்மா மீனைக் கழுவி 'பானைபுரி' செய்வாங்க. வாசனை மூக்கைத் துளைக்கும். அதை இட்லிக்குத் தொட்டுச் சாப்பிடுவோம். அந்த ருசியே தனி.

என் ஊர் - உலகில் சிறந்த பாதை !

எங்க ஊருல 'வாழைத்தேவர்’னு ஒருத்தர் இருந்தார். அவர் வீடுமுழுக்க கறிவேப்பிலை மரமா இருக்கும். அஞ்சு பைசா, பத்து பைசா வுக்குக் கீரைக்கட்டு மாதிரி கொத்துக் கொத்தா கொடுப்பார். அம்மா அதைத் தொவையல் அரைச்சுத் தருவாங்க. அப்போ சாப்பிட்ட கறிவேப்பிலையாலதான் இன்னமும் என் தலைமுடி நரைக்காம இருக்கு.

என் இளமைக்கால வறுமையையும் மகிழ்ச்சியையும் தந்தது இந்த ஊர்தான். நான் சோர்ந்து இருந்த காலங்களில் தட்டிக்கொடுத்து தைரியம் சொன்னதும் இதே ஊர்தான்.  மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாலுமகேந்திராவைச் சந்தித்ததும் இந்த ஊர்லதான். 'உலகில் சிறந்த பாதை எது?’னு கேட்டா, 'சொந்த ஊருக்குச் செல்லும் பாதை’னு சொல்லுவேன். கடவுளே நேர்ல வந்து கேட்டாலும் என் பதில் இதுதான்!''

'கூடல்நகர்’, 'தென்மேற்குப் பருவக்காற்று’ என இதுவரை இரண்டு படங்களை இயக்கி இருக்கும் இவர் தற்பொழுது 'நீர்ப்பறவை’ என்னும் படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார்!

தையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் தன் சொந்த ஊரில் அமைதியான இடத்தில் உட்கார்ந்து யோசிப்பது சீனு ராமசாமியின் வழக்கம்!  

ந்த ஊருக்கு ஷ§ட்டிங் சென்றாலும் அப்பகுதியில் உள்ள கிளை நூலகத்தைத் தேடிச் சென்று சில மணி நேரம் செலவிடுவார்!