Published:Updated:

மணலோடு மறந்து போன வரலாறு!

Seerani Arangam
Seerani Arangam

மணலோடு மறந்து போன வரலாறு!

##~##

ல அரசியல் கூட்டங்கள் அரங்கேறிய  இடம் மெரினா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கம். 2003-ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ந்தேதி, நள்ளிரவு 11 மணிக்குச் சத்தமே இல்லாமல் இடிக்கப்பட்டு, கட்டடம் இருந்த தற்கான அடையாளம் எதுவும் இல்லாமல் வெறிச்சோடிப்போனது. கம்பீரமாக  இருந்த சீரணி அரங்கம் இடிக்கப்பட்டு இந்த வாரத் தோடு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் இரவோடு இரவாகக் காணாமல் போன கண்ணகி சிலை, அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டுவிட, அதே கடற்கரையில் இருந்து காணாமல் போன 'சீரணி அரங்கம்’ கட்டடம் மறுபடி எழுப்பப் படாமலேயே போய்விட்டது. இடிக்கப் பட்டதற்கு அப்போது வாஸ்து காரணம் சொல்லப்பட்டது.

காரணம் ஆயிரம் இருந்தாலும் சீரணி அரங்கத்தின் வரலாறு சுவாரஸ்யமானது. சீரணி அரங்கம் அண்ணா ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அண்ணா உருவாக்கிய 'சீரணிப் படை’ என்கிற அமைப்புதான் சீரணி அரங்கம் என்கிற கட்டடத்தைக் கட்டியது. பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் அரங்கத்துடன் கூடிய மேடையை அமைத்தார்கள் சீரணிப் படையினர். இங்கேதான் அரசியல் பொதுக் கூட்டங்கள், விழாக்கள், மத நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து நடந்துவந்தன. 30 ஆண்டு கால அரசியல் அதிரடிகளுக்கு அந்த மேடைதான் மௌன சாட்சியாக இருந்துவந்தது.

மணலோடு மறந்து போன வரலாறு!

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில்  இதே கடற்கரையில்  காந்தி, பாரதி, சுப்ரமணிய சிவா போன்ற தேசியத் தலைவர்கள் முழங்கிய இடத்துக்கு திலகர் கட்டம் என்று பெயர் வைத்து அழைத்தார்கள். இதன் அருகேதான் சீரணி அரங்கத்தை அந்நாளில் அமைத்து இருந்தனர். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் தலைவர்களும் இந்த சீரணி அரங்கில் பேசி இருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் கூடி பேச்சைக் கேட்பதற்கு வசதியாக இருந்தது அந்த அரங்கம் என்பதால் அரசியல்வாதிகளுக்கு சீரணி அரங்கத்தின் மேல் எப்போதும் கூடுதல் விருப்பம் இருந்தது. இதனால், சீரணி அரங்கம் இடிக்கப்பட்டபோது எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தவறவில்லை. ''பொதுக் கூட்டங்கள் நடத்துவதால் கடற்கரை அசுத்தமாகிறது என்று காரணம் சொல்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கடற்கரைக்கு வருகிறார்கள். அப்போது அசுத்தம் ஏற்படத்தானே செய்கிறது?'' என்று அன்று ஒலித்த குரல்கள் இப்போதும் ஒலிக்கத்தான் செய்கின்றன.  

மணலோடு மறந்து போன வரலாறு!
மணலோடு மறந்து போன வரலாறு!

ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ,  ''கோயிலைத் தவிர வேறு எங்கே கூட்டம் கூடினாலும் அங்கே சுத்தம் இருக்காது. அது சீரணி அரங்கத்துக்கும் பொருந்தும். சீரணி அரங்கம் இருந்தபோது எத்தனையோ சமூக விரோதச் செயல்கள் அங்கே நடந்ததை யாரும் மறுக்க முடியாது. அதை இடித்ததில் எந்த தவறும் இல்லை. நினைவுகள் என்பது நெஞ்சோடு இருந்தால்போதும்'' என்கிறார்கள்.

தமிழக பா.ஜ.க. மகளிர் அணித் தலைவி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ''சீரணி அரங்கம் இருந்த இடம் ஆரம்பத்தில் திலகர் கட்டம் என்ற பெயரில்தான் இருந்தது. மீண்டும் அந்த இடம் கட்டப்பட வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. மீண்டும் சீரணி அரங்கம் வருவதாக இருந்தால், திலகர் கட்டம் என்ற பெயர்தான்  வைக்கவேண்டும்'' என்றார்.

பல அரசியல் மாற்றங்களுக்குக் காரணமாக இருந்த சீரணி அரங்கம் மீண்டும் வருமா?

- எம்.பரக்கத் அலி

படம்: சொ.பாலசுப்ரமணியன்

அடுத்த கட்டுரைக்கு