Published:Updated:

தெரு விளக்கு

வருவான் ஒலிம்பிக் தமிழன்!பாரதி தம்பிபடங்கள் : என்.விவேக்

தெரு விளக்கு

வருவான் ஒலிம்பிக் தமிழன்!பாரதி தம்பிபடங்கள் : என்.விவேக்

Published:Updated:
##~##

ங்கிருந்தோ சுமந்து வந்த விதையை வானத்தில் பறந்தபடி பூமியில் விதைக்கிறது ஒரு பறவை. அந்த விதை உருவாக்குவதோ ஒரு வனம். ஆனால், அந்த வனத்தில் தங்கி இளைப்பாறக்கூட நேரம் இல்லாமல், வானத்தில் அடுத்த விதை சுமந்து பறந்து செல்கிறது அந்தப் பறவை. இப்படி நம்மில் சிலரும் எந்த எதிர்பார்ப்புகளுமற்று, இந்த பூமியில் மாற்றங்களை விதைத்தபடி மௌனமாகக் கடந்து செல்கிறார்கள். அன்றாடம் நாம் கடக்கும் எண்ணற்ற மனிதர்களில் இருந்து நம்மை ஒரு கணம் திரும்பிப் பார்க்கவைத்த அப்படியான சிலரை அடையாளப்படுத்தவும், அங்கீகரிக் கவும் இந்தக் களம் உதவும்!

சென்னை. பரபரப்பான பிராட்வே பேருந்து நிலையத்தின் மடிப்புகளுக்குள் அமைந்திருக்கும் திடீர் சந்து ஒன்றில் திடுக்என எதிர்ப்படுகிறது அந்த தகரக் கதவு. உள்ளே தடதடவென வியர்வை வழிய ஓடிக்கொண்டு இருப்பவர்களில் 14 பேர் சர்வதேசத் தடகள சாம்பியன்கள். 100-க்கும் அதிகமானோர் தேசிய சாம்பியன்கள். ஓட்டம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், பளு தூக்குதல், நீளம் தாண்டுதல் என அந்த மைதானம் ஒரு மினி ஒலிம்பிக் உற்சாகத்தில் துடித்துக்கொண்டு இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெரு விளக்கு

''இங்கு இருந்து ஓர் ஒலிம்பியன் உருவாக வேண்டும். அதுதான் என் கனவு!'' - நம்பிக்கை மின்னச் சொல்கிறார் நாகராஜ். 'பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி’யை உருவாக்கி, அசாத்தியங்களைச் சாத்தியமாக்கியவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற புதுக்கோட்டை சாந்தி, வெண்கலம் வென்ற பிரேம்குமார், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற காயத்ரி எனத் தடகளத் தமிழ்நாட்டை உருவாக்கியவர். 24 வருடங்களாக ஒரு ரூபாய்கூடக் கட்டணமாகப் பெற்றுக்கொள்ளாமல் ஆயிரக் கணக்கான ஏழை மாணவர்களுக்குத் தடகளப் பயிற்சி அளிக்கும் பெருமைமிகு தமிழன்!

''தடகளம் எப்போதும் ஏழைகளின் விளையாட்டு. இதற்கு உடம்பை வருத்திக்கொண்டு உழைக்க வேண்டும். கடுமையான பயிற்சிகளை உடம்பு தாங்க வேண்டும். இவை எல்லாம் ஏழை மாணவர்களுக்கு இயல்பாகவே வரும். இங்கே இருக்கும் முக்கால்வாசி மாணவர்கள் மிகமிக

தெரு விளக்கு

வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விளையாட்டைத் தவிர இவர்களுக்கு எதுவுமே தெரியாது. 'நம்ம புள்ள மெட்ராஸ்ல படிக்குது’ என்பதைத் தாண்டி இவர்களின் பெற்றோர்களுக்கும் வேறு எதுவும் தெரியாது. ஆனால், இவர்கள் தான் இந்தியாவின் ஒலிம்பிக் கனவை நிறைவேற்றப்போகிறவர்கள். இவர்களில் நிச்சயம் ஒரு ஒலிம்பியன் இருக்கிறான்!'' - நாகராஜின் சொற்களில் பதக்கக் கனவு பளிச்சிடுகிறது.

மத்திய சுங்க மற்றும் கலால் வரித் துறையில் பணிபுரியும் நாகராஜ், தினமும் காலை, மாலை நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். தகுதியான மாணவர்களைத் தேடி தமிழ்நாடு முழுக்க அலைகிறார்.

''எனக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் அருந்தவபுரம் கிராமம். அம்மா ஒரு சத்துணவு ஆயா. ஊர் பிள்ளைகளுக்குச் சமைத்துப்போட்ட அம்மாவால், தன் சொந்தப்பிள்ளை களின் பசியைப் போக்க முடிய வில்லை. வீட்டில் கடுமையான வறுமை. எனக்கோ விளைய£ட் டின் மீது அவ்வளவு ஆசை. ஆனால், போட்டியில் கலந்துகொள்ள ஊரில் இருந்து தஞ்சாவூருக்குச் சென்று வரக்கூட காசு இருக்காது. அத்லெட் ஷூ அப்போது 50 ரூபாய். விலையைக் கேட்டாலே மலைப்பாக இருக்கும். டயட், கோச்சிங், ஸ்போர்ட்ஸ் டிரெஸ், ஷூ என எந்த அடிப்படை வசதியும் அப்போது தெரியவில்லை, கிடைக்கவில்லை. இருப்பதை வைத்து உயரம் தாண்டுதலில் ஜூனியர் பிரிவில் தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். என் வறுமையையும் ஆர்வத்தையும் பார்த்த உடற்கல்வி ஆசிரியர் சண்முகசுந்தரம் என்னை முழுமையாகத் தத்தெடுத்துக்கொண்டார். அவர்தான், சென்னைக்கு பி.பி.எட். படிக்க என்னை அனுப்பிவைத்தார். 'நீ படிச்சு பாஸ் பண்ணிட்டு வா, என் வேலையை ரிஸைன் பண்ணித் தர்றேன். அதில் நீ சேர்ந்துக்கலாம்’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் தினமும் நினைவில் வந்துபோகின்றன.

படித்து முடித்ததும் கலால் துறையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைத்து சேர்ந்தேன். ஆனாலும், என் அத்லெட் ஆர்வம் தணியவில்லை. அண்ணா நகரில் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். தினமும் வீட்டில் இருந்து கிளம்பி மைதானத்துக்குச் சென்று பயிற்சி கொடுத்துவிட்டு அப்படியே அலுவலகம் சென்று, மாலை மீண்டும்

தெரு விளக்கு

மைதானத்துக்குச் சென்றுவிடுவேன். ராத்திரி 9 மணிக்கு வீட்டுக்குச் சென்று படுக்கையில் விழுந்தால், மறுநாள் மீண்டும் மைதானத்தில்தான் பொழுது விடியும். 24 வருடங்களாக இதுதான் என் தினசரி வாழ்க்கை. உறவுக்காரர்களின் திருமணம், விசேஷ நிகழ்ச்சிகள் எதற்கும் சென்றது இல்லை. ஒரு சினிமாகூடப் பார்த்தது இல்லை. இந்தப் பையன்கள்தான் என் உலகம். ஒருநாள் நான் வராமல் போனால்கூடச் சோர்ந்துவிடுவார்கள்.

89-ம் ஆண்டு என்னிடம் பயிற்சி பெற்ற சினேகா பிரின்சி 'ஹெப்டத்லான்’ போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்றாள். கே.என்.பிரியா 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் சர்வதேசப் பதக்கம் வென்றாள். அதுதான் தொடக்கம். பிறகு, வரிசையாக என் மாணவர்கள் தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுத்தார் கள், பதக்கம் வென்றார்கள். இப்போது இவர்களில் 24 பேர் சர்வதேசப் போட்டியாளர்கள். அதில் 14 பேர் சர்வதேசப் பதக்கம் வென்றவர்கள். 100-க்கும் அதிகமானோர் தேசிய அளவில் பதக்கம் வென்றிருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரையும் நான் தமிழ்நாடு முழுக்கத் தேடித் தேடிச் சேர்த்தேன். தமிழ்நாட்டில் எங்கேனும் விளையாட்டு விழாக்கள் நடந்தால், அங்கு சென்றுவிடுவேன். மாநிலம் முழுக்க உடற்கல்வி ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் இருக்கும் திறமையான மாணவர்களைப் பற்றி என்னிடம் சொல்வார்கள். தகுதியான மாணவர்களைப் பயிற்சிக்கு என சென்னைக்கு அழைத்துவருவது சாதாரணமான வேலை இல்லை. ஏழைக் கிராமத்துப் பெற்றோர்களிடம் 'உங்க பையன் நல்லா ஓடுறான். என்கிட்ட கொடுங்க... சென்னையில் படிக்கவெச்சு விளையாட்டு சொல்லித் தர்றேன். நல்லா வருவான்’ என்று சொன்னால், ஆரம்பத்தில் மறுப்பார்கள், திட்டுவார்கள். ஏதேதோ சமாதானம் சொல்லி, 'உங்களுக்கு என்ன? பையன் நல்லாப் படிக்கணும், காலேஜ் போகணும், வேலைக்குப் போகணும். அவ்வளவுதானே? நான் பார்த்துக்குறேன்... விடுங்க’ என்று பொறுப்பேற்று அழைத்து வருவேன். ஓரிரு வருடங்கள் கழித்து, பையன் போட்டிகளில் மெடல் அடித்ததும், அந்த ஏழைப் பெற்றோரின் முகத்தில் மகிழ்ச்சி அரும்பும். புதுக்கோட்டை சாந்தி அப்படி வந்தவர்தான்.

இந்த மாணவர்கள் யாரிடமும் கட்டணம் என்று எதுவும் வாங்குவது இல்லை. மாசம் 50 ரூபாயைக் கட்டணமாக நிர்ணயித்தாலும், கிராமங்களில் வயல்களில் களை பறிக்கும் ஏழை மக்களுக்கு அது ஒரு நாள் கூலி. அதனால் யாரிடமும் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்பதைக் கொள்கையாக வைத்துக்கொண்டேன். 2000 வரை மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கான இட வசதிக்கு மிகவும் சிரமப்பட்டோம். பிறகு, பச்சையப்பா பள்ளி அறக்கட்டளை இந்த மைதானத்தை வழங்கியது. இதற்கு 8,000 ரூபாய் வாடகை. சோழிங்கநல்லூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் பாபு மனோகரன் இந்த வாடகையை வழங்குவதோடு, 37 லட்ச ரூபாய் செலவழித்து, புதர்க் காடாகக்கிடந்த இந்த இடத்தை மைதானமாக மாற்றிக் கொடுத்து விடுதி, பேருந்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். எங்கள் 'பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ உருவானது இப்படித்தான். இதுவே இந்தியாவின் முதல் தனியார் தடகள ஸ்போர்ட்ஸ் அகாடமி. அரசை மட்டுமே நம்பினால் எந்தக் காலத்திலும் விளையாட்டுத் துறை முன்னேறாது. இப்படியான தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமிகள் பெருமளவில் உருவாக வேண்டும்.

இன்றைய உலகில் ஒரு விளையாட்டு வீரனாக வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சிரமமானது. ஒரு அத்லெட் உருவாகக் குறைந்தது 10 வருடங்கள் தேவை. அவன் வாழ்வின் இளமையான காலங்களை அடகுவைத்துத்தான் பதக்கம் வென்றாக வேண்டும். ஆனால், தேசிய அளவில் தங்கப் பதக்கம்

தெரு விளக்கு

வென்றவர்களுக்கு ஒரு ஜிம்மில் பயிற்சியாளராக இருப்பதைத் தவிர, இங்கே வேறு வாய்ப்புகள் இல்லை. வெறும் ஆர்வத்தில் எவ்வளவு நாளைக்குத்தான் ஓட முடியும்? பதக்கம் வென்று இந்த தேசத்துக்குப் பெருமை சேர்ப்பவர்களுக்கு இந்த அரசாங்கம் குறைந்தபட்சம் பியூன் வேலையாவது தர வேண்டாமா? ஆனால், மத்திய - மாநில அரசுகள் கிட்டத்தட்ட ஸ்போர்ட்ஸ் கோட்டா என்பதையே ஒழித்துவிட்டன. ஒலிம்பிக்கில் ஜெயித்தால் 2 கோடி என்கிறார்கள். எனில், ஆசிய அளவில் ஜெயித்தால் 25 லட்சம் கொடுத்தால் என்ன?

வசதியான பின்னணியும் அரசாங்கத்தின் கருணையும் சக மனிதர்களின் ஆதரவும் இல்லாமல் உள்ளார்ந்த உத்வேகத்தை மட்டுமே எரிபொருளாகக்கொண்டு சாதிக்கும் வேட்கையுடன் இவர்கள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு நான் பயிற்சி கொடுக்கிறேன். நீங்கள் உற்சாகம் கொடுத்து ஊக்குவித்தால், 2016 பிரேசில் ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் நம் தமிழனின் பெயர் பார்க்கலாம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism