Published:Updated:

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

Published:Updated:

முதல் முறையாக என்னைப் படிப்பவனுக்கு....

பு

பேயோன் பக்கம்!

ளி கரையும் வயிற்றுக்காரா,
ஏதேதோ புத்தகம் புரட்டி
எதிலும் திருப்தி காணாமல்
கடைசியில் என்னைத் தேர்ந்து
படிக்கிறாயா?
பிடித்துக்கொள்ள
சிமென்ட் சுவர்,
சரிந்து உட்காரக்
கால் ஆடா நாற்காலி,
அரும்பு வியர்வை
துடைக்கக் கைக்குட்டை,
உதறும் கரங்களால்
மார்பில் கொட்டிக்கொண்டு
குடிக்க சுத்தமான குடிநீர்,
தொய்ந்த கையிலிருந்து
புத்தகத்தை நழுவவிட
மாப்பிங் செய்துலர்ந்த தரை,
கைத்தாங்கலுக்கு
நேச உள்ளங்கள் நான்கு,
சோடா வாங்கிவரப் பையன்,
சார்ஜுள்ள செல்பேசியின்
ஸ்பீட் டயலில் 108
இதுகளனைத்தும்
இருக்கிறதா உன்னிடம்?
வா, சகா, வா, சகி!

சுயமொழிகள்:

பேயோன் பக்கம்!

•  தாயை மதிக்காதவனைத் தந்தை மதிக்க மாட்டான்!

• நம்மிடம் தவறான குற்றங்கள் இருக்கின்றன. சரியான தண்டனைகள்தான் இல்லை!

• அன்பைவிடக் கூரிய ஆயுதம் இல்லை!

பெயரில் என்ன இருக்கிறது?

பேயோன் பக்கம்!

தாபாத்திரங்களுக்குப் பெயர் சூட்டுவது ஒரு இம்சை என்றால் வாசகர் கடிதம் எழுதும் வாசகர்களுக்குப் பெயரிடுவது இன்னொரு இம்சை. கதைகளில் எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம். கடிதங்களில் யதார்த்தத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஒருமுறை 'வெற்றிவேல் ஐயங்கார்’ என்ற வாசகரிடமிருந்து கடிதம் வந்ததுபோல் எழுதியிருந்தேன். உடனே சிலர் போன் செய்து, அந்த மாதிரி ஒரு பெயரே இருக்க முடியாது என்று வாதிட்டு கன்ஸ்யூமர் கோர்ட்டில் புகார் செய்வதாக மிரட்டினார்கள். மேற்கூறிய வாசகர் மதம் மாறியவராக இருக்கலாம் என்கிற என் பேச்சை அவர்கள் ஏற்பதாக இல்லை. பெயர் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, எனக்கு வரும் நிஜக் கடிதங்களையா வெளியிட முடியும்? ரத்த மடையர்கள்!

கொழும்பிலிருந்து வாசகர் கடிதம்

பேயோன் பக்கம்!

பிரியமிகு பேயோன் ஐயா,

வணக்கம். இப்பவும் நாங்கள் உங்கட படைப்புகளைத் தொடர்ந்து படித்து வருகினம். தமிழிலை எழுதுவோரில் நீங்கள்தான் படுசிறப்பாக எழுதுறீங்கள் எண்டு நினைக்கிறன். உங்கட படைப்பு விகடனிலை வருவதாய் சகா ஒருவன் கூறேக்க நான் 'ஓமிகோட், றியலி?' எண்டு அலறியேவிட்டனான்! உங்கட எழுத்து எனக்கு அவ்வளவு இஷ்டம். முதல் இதழைக் கண்டனம். உங்கட ஒவ்வொரு வார்த்தையும் சொக்கிலேற்று ஐயா. அதிலை சுயமொழிகள் எனக்கு வடிவாய்ப் பெலன்படுகிறது. நான் இண்டு வரை சஞ்சிகைகளை ஊரகத்தினர் வாசகசாலையிலை வாசித்துக்கொண்டிருந்தவன். இனி காசு கொடுத்து வாங்கி பைண்டு செய்யவிருக்கிறன். வாராந்தமாய் இப்படியே எழுத வேணும். தணிக்கைக்கு மசியடிக்கிற பொலிஸ் அண்ணை, நீங்களும் இவரை வாசிக்க வெளிக்கிட்டுப் பாருங்கோவன்!

                                  இங்ஙனம்
ஜி.புருஷோத்தம ராவ், கொழும்பு

வாரத்துக்கு நூறு

பேயோன் பக்கம்!

நம்ப முடிகிறதா, ஒரு வாரத்திற்கு 100 புத்தகம் எழுதுகிறேன். அதுவும் மாங்குமாங்கென்று. புத்தகங்களின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. பாத்ரூம் தவிர்த்த நேரங்களில் தட்டச்சு செய்துகொண்டே இருக்கிறேன். அப்படியும் பதிப்பாளர்களுக்குத் தாமதமாகவே புத்தகங் களைத் தருகிறேன். அந்த இடைவெளிகளில் இறைவனிடம் கையேந்து கிறேன்: 'ஆண்டவா, எனக்கு 31 பற்களைக் கொடுத்திருக்கிறாய். ஆனால் எனக்குப் பற்களே வேண்டாம். அவற்றுக்குப் பதிலாய் 31 விரல்களைக் கொடுத்துவிடு. பல் போனால் போகட்டும், கஞ்சி குடித்துப் பிழைத்துக் கொள்கிறேன். கேட்டதை மட்டும் கொடுத்துவிடு!’ ஃப்ளஷ்

வாழ்க லைக்குகள்!

மாடர்ன் டிரெஸ்ஸும்
குளிர் கண்ணாடியுமாய்
பாறையை மறைத்து நின்று
நீங்கள் கொடுக்கும் போஸ்
எனக்குப் பிடிக்கிறது.

பேயோன் பக்கம்!

உங்கள் நண்பர்
சாலை விபத்தில் இறந்த
செய்தியைச் சொல்லும்
நாளேட்டு நறுக்கு
மிகவும் பிடிக்கிறது.

மங்கிய ஒளியில்
முகங்கள் வெள்ளையடித்து
பரதநாட்டிய கோலத்தில்
உங்கள் புத்திரிகள்
கட்டைவிரலையும்
ஆள்காட்டி விரலையும்
கோர்த்து 'டக்கர்’
என அபிநயிக்கும் படம்
வெகுவாகப் பிடிக்கிறது.

அதே போல,
உங்கள் பிறந்த நாளுக்கு
நம் நண்பர் ஒருவர்
வாழ்த்தியிருப்பது
பிடிக்காமல் போகுமா?

தோழி, நீங்கள் புடவை கட்டி
ஓர் ஓவியம் அருகே
நின்றுள்ள புதுப் படம்
பிடிக்கிறது.
'இதில் எது ஓவியம்?’
என்ற நண்பரின்
கேள்வியும்தான்.

உங்கள் ஸ்வெட்டர் பற்றிப்
பலர் கருத்து பல விதமாக
இருந்தாலும் எனக்கு
அது பிடிப்பதில்
ஆச்சரியமில்லை.

தன்னம்பிக்கைத் திலகமான
யாரோ வெள்ளைக்காரர்
பொன்மொழியுடன்
செத்திருப்பது பகிர்வோடு
பிடிக்கிறது.

நாட்டு நடப்பு குறித்து
உள்ளூர் மேதாவி
நக்கலாய்ச் சொல்லும்
கருத்து பிடிக்கிறது.

சாயல் ஏதுமின்றி
பிசிறுடன் வரையப்பட்ட
போட்டோஷாப் உருவப் படம்
பிடிக்கிறது.

எதைப் பற்றியோ
யாரோ சொன்ன
இடக்கான வார்த்தைக்கு
உங்களது 'அவ்வ்...!!'
உடனே பிடிக்கிறது.

காதல் பிடிக்கிறது
கவிதை பிடிக்கிறது
சாவு பிடிக்கிறது
நம்பிக்கை பிடிக்கிறது
ஓவியம் பிடிக்கிறது
புகைப்படம் பிடிக்கிறது
பொன்மொழி பிடிக்கிறது
கிண்டல் பிடிக்கிறது
உருக்கம் பிடிக்கிறது
நடிகைகள் பிடிக்கிறது
நடிகர்கள் பிடிக்கிறது
நட்பு பிடிக்கிறது
வன்மம் பிடிக்கிறது
கயமை பிடிக்கிறது
மடமை பிடிக்கிறது
அரசியல் பிடிக்கிறது
அழகியல் பிடிக்கிறது
எல்லாம் நல்ல
இணையத்தில்
எல்லாமே பிடிக்கிறது.

- புரட்டுவோம்...