Published:Updated:

முகம்

நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)நா.கதிர்வேலன்

முகம்

நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

"புத்தகப் பிரியர். நவீன இலக்கிய நூல்கள், சிறு பத்திரிகைகள் வரை விரிந்த வாசிப்பு. 4,000 புத்தகங்கள் கொண்ட நூலகமே வீட்டில் உண்டு. சமீபத்தில் படித்த புத்தகம், பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்’.

• ஒருவரது எழுத்து பிடித்தால், உடனே அவருடன் தொலைபேசிப் பாராட்டுவார். எந்த ஊருக்குப் போனாலும் அங்கு உள்ள இலக்கிய நண்பர்களுடன் ஒரு சந்திப்பு உண்டு.

• மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் மனம் திறந்து கேட்பார். அவருடைய கருத்தையும் நிதானமாக, மனம் நோகாமல்... ஆனால், ஆணித்தரமாகச் சொல்லிவிடுவார். இவர் கோபப்பட்டு இதுவரை யாரும் பார்த்தது இல்லை.

• வண்ணச் சட்டைகளையும் விரும்புவார். மோசமான சில அரசியல்வாதிகள் வெள்ளை உடை போட்டு, நாமும் போட வேண்டி இருக்கிறதே என்பது அடிக்கடி அவர் உதிர்க்கும் ஆதங்க வார்த்தைகள்.

முகம்

நல்ல திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். 'அன்பே சிவம்’, 'அங்காடித் தெரு’, 'உச்சிதனை முகர்ந்தால்’ - சமீபத்திய ஆண்டுகளில் இவர் பார்த்த படங்கள். பாரதிராஜா, கமல்ஹாசன், மனோரமா ஆகியோர் பிடித்தமான கலைஞர்கள்.

• நல்லகண்ணுவுக்கு இரண்டு பெண்கள். மூத்த மகள் காசிபாரதி, கணவருடன் கோவில்பட்டியில் வசிக்கிறார். இரண்டாவது மகள் டாக்டர் ஆண்டாள், வேலூரில் வசிக்கிறார். பேரன், பேத்திகளுடனான சந்திப்பில் 'குழந்தை’ நல்லகண்ணுவைக் காணலாம்.

• தோழர்கள் இவரின் பிறந்த நாளை (டிசம்பர் 26) எளிமையாகக் கொண்டாடுவார்கள். ஆனால், அவர் எதையுமே பொருட்படுத்துவது இல்லை.

• நாத்திகவாதி. ஆனால், திருமணங்கள் கோயில்களில் நடந்தாலும் சரி, சர்ச்களில் நடந்தாலும் சரி, சங்கடப்படாமல் சென்று வாழ்த்துவார்.

• காரில் செல்ல நேரும்போது கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் பாடல்களைக் கேட்டுக்கொண்டே பயணிப்பது பிடிக்கும்.

• ரஷ்யா, ஜெர்மனி, சீனா, இலங்கை ஆகிய நாடுகளுக்குக் கட்சி சார்பில் சென்றுள்ளார். அப்போது கட்சி சார்பில் கோட் தருவார்கள். அணிந்துகொள்வார். அதோடு, அந்த கோட்சூட் கதை முடிந்துபோகும்.

• அரசுக் குடியிருப்பில்

முகம்

6,000 வாடகையில் குடி இருக்கிறார். சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில்கூட சொந்த வீடு கிடையாது. மனைவியின் ஓய்வூதியம், கட்சியின் உதவித்தொகை

முகம்

4,000-ல் வீட்டுச் செலவுகளைக் கவனித்துக்கொள்கிறார்.

• அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படாதவர், சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஹரி மாரடைப்பால் இறந்தபோது, கேவிக் கேவி அழுதுவிட்டார். ஒரு மகனைப் போல அய்யாவிடம் பழகியவர் ஹரி.

• பயணங்களில் தோழர்கள் வாங்கித் தருகிற உணவைத்தான் உட்கொள்வார். முன்பு விரும்பிச் சாப்பிட்ட கத்தரிக்காய், மீன், கருவாடு ஆகியவற்றை இப்போது தள்ளிவைத்து இருக்கிறார்.

• இணையத்தில் ஈடுபாடு இல்லை. ஃபேஸ்புக்கில் உறுப்பினர் இல்லை. ஏன்? செல்போன்கூட முழுமையான பரிச்சயம் கிடையாது. அழைப்பு வந்தால் பேசுவார். அவ்வளவுதான் தெரியும்.

• இன்டர்மீடியட் படிப்பை முழுவதுமாக முடிக்காமல் கட்சியில் நுழைந்தவர் நல்லகண்ணு. ஹோசிமின்தான் இவரது ரோல் மாடல். இதை ஒரு பேட்டியில் அவரே சொல்லி உள்ளார்.

• எல்லோருக்கும் 'தோழர் நல்லகண்ணு’. தோழர்களுக்கு 'ஆர்.என்.கே.’

• யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேச மாட்டார். எந்தக் கட்சித் தலைவர் மீதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது.

• ஒருமுறை சிறையில் இருந்தபோது 'அன்னமே, ரஞ்சிதமே’ என்று எதார்த்தமாக கவிதை எழுதி இருக்கிறார். ரஞ்சிதம் அம்மாளுடன் நல்லகண்ணு அவர்களின் திருமணம், கட்சி பார்த்து நடத்திவைத்தது. அம்மையாரை அவர்கள் வீட்டில் செல்லமாக அழைப்பதும் 'அன்னம்’ என்றுதான்.