Published:Updated:

மிஸ்டு கால்

பாரதி தம்பிஓவியங்கள் : பாலமுருகன்

மிஸ்டு கால்

பாரதி தம்பிஓவியங்கள் : பாலமுருகன்

Published:Updated:
##~##

ப்போதெல்லாம் நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு, மாப்பிள்ளை சார் பரிசுஅளிக்கும் முதல் பொருள், அநேகமாக செல்போன்.

'வாழ்த்துகள், எங்கள் கோலா விளம்பர புரொமோவில் உங்கள் போன் 7,50,000 யூரோ ஜெயித்திருக்கிறது. உடனே, உங்களைப் பற்றிய விவரங்களைக் கீழ்க்கண்ட இ மெயிலுக்கு அனுப்பிவையுங்கள்’ என்று எஸ்.எம்.எஸ். வந்தபோது, நான் வளசரவாக்கம் கடை ஒன்றில், '200 ரூபாய்க்கு ஃபுல் டாக் டைம் கிடையாதாங்க?’ என்று விசாரித்துக்கொண்டு இருந்தேன்.

சாலிகிராமத்தின் அந்த பேச்சிலர்ஸ் அறையில் மொத்தம் ஐந்து பேர். அதில் அரவிந்தும் ஒருவன். அவன் ஒரு

மிஸ்டு கால்

பெண்ணைக் காதலிக்கிறான். அதில் எதுவும் பிரச்னை இல்லை. அவன் தன் காதலிக்கு வைத்திருக்கும் ரிங்டோன், 'பேசுகிறேன்... பேசுகிறேன்... உன் இதயம் பேசுகிறேன்’. எல்லோரும் தூங்கும் நடு இரவில்தான் அந்தப் பெண் இவனை அழைப்பாள். 'பேசுகிறேன்... பேசுகிறேன்...’ என்று செல்போன் அலறும். இவன் அடித்த இரண்டு பீருக்கு இதயம் என்ன... நுரையீரல், சிறுநீரகம் எல்லாம் சேர்ந்து வந்து பேசினால்கூட எழுந்திருக்கப்போவது இல்லை. எல்லோரது தூக்கமும் கலைந்து, 'உன் இதயத்துகிட்ட பேசித்தான் தொலையேன்டா’ என்று உதைத்து எழுப்ப வேண்டியிருக்கும். முக்கால் தூக்கத்தில் போனை எடுத்துத் திட்டிவிட்டு, செல்போனை ஆஃப் செய்துவிட்டு அவன் தூங்கிவிடுவான். அதன் பிறகுதான் க்ளைமாக்ஸ். அந்தப் பெண் அறையில் உள்ள மற்ற நண்பர்களின் செல்போனுக் குக் கூப்பிடத் துவங்குவாள்.

று மாதங்களுக்கு முன்பு செந்தில்குமார் வீட்டு டி.வி-யின் பிக்சர் டியூப் போய்விட்டது. அடுத்த மாதச் சம்பளத்தில் வாங்கினான். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவன் வீட்டு மிக்ஸி காலி. புது மிக்ஸி வாங்க மூன்று வாரங்கள் ஆனது. கடந்த வாரம் செந்திலின் செல்போன் உடைந்துவிட்டது. அவசரமாக 5,000 கடன் வாங்கி அன்று மாலையே புது செல்போன் வாங்கினான்.  

மிஸ்டு கால்

ந்து ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குப் போயிருந்தபோது, 'நான் பேசுனா பேசுமா?’ என என் செல்போனைப் பார்த்துக் கேட்ட பெரியப்பாவிடம், இப்போது கொரியன் போன் மினுமினுக்கிறது. போன் வந்தால் பச்சை பட்டன். பேசி முடித்ததும் சிவப்பு பட்டன். அவர் முகம் எல்லாம் புன்னகை. அந்த போன் தன்னை நவீன காலத்துடன் இணைத்துவிட்டதாக நம்புகிறார். தன் வயது குறைந்துவிட்டதாக அவர் மனம் நினைக்கிறது. 'இந்த நம்பரைப் போட்டுக் குடு’ என மகனின் எண்ணுக்கு போன் பண்ணும் பெரியப்பா, காலையில் ஏழரை பஸ்ஸில்தான் கொய்யாப் பட்டறையில் இருந்து வந்ததையும் வீட்டுக்கு இலவச ஆட்டுக்குட்டி கொடுத்திருப்பதையும் சொல்லிவிட்டு, 'போனுக்கு 100 ரூவா போட்ரு... மறந்திராத’ என மறக்காமல் சொல்லிவிட்டு சிவப்பு பட்டனை அழுத்துகிறார். முன்பு வெற்றிலை, சீவல் மட்டுமே இருக்கும் அவரது வேட்டி மடிப்பில் இப்போது செல்போனும் சேர்ந்துவிட்டது.

நீங்கள் ப்ரீபெய்டு மொபைல் இணைப்புடன் காஷ்மீருக்குச் சென்றால், அங்கே உங்கள் செல்போன் இயங்காது. 2009-ம் ஆண்டின் இறுதியில் இருந்து காஷ்மீரில் ப்ரீபெய்டு செல்போன் சேவை தடை செய்யப்பட்டுவிட்டது. காரணம், ப்ரீபெய்டு இணைப்புகளைத் தீவிரவாதிகள் எளிதாகப் பெற்றுவிடுகிறார்களாம். இதனால், சாதாரண ஏழை மக்கள் செல்போன் பயன்படுத்த விரும்பினாலும், அதிகப் பணம் கட்டி போஸ்ட்பெய்டு சேவையைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். வேறு வழி இல்லை. அப்ப கப்பல்ல இது மட்டும்தான் ஓட்டையா?!  

ரு காதலியைவிட இணக்கமானதாக, ஒரு நண்பனைவிட நெருக்கமானதாக மாறிவிட்டது அலைபேசி. நமது விரல்கள் எப்போதும் அதை நீவிவிடுகின்றன. அழைப்பு வருகிறதோ, இல்லையோ... சில நிமிடங்களுக்கு ஒருமுறை எடுத்துப் பார்க்கும் வியாதி அநேகமாக நம் எல்லோருக்குமே இருக்கிறது. ஆயிரம் பேருக்கு மத்தியிலும் தன் குழந்தையின் அழுகுரலைக் கண்டுபிடித்துவிடும் தாயைப் போல, எவ்வளவு பேர் இருந்தாலும் நம் அலைபேசியின் அழைப்பு மணி நமக்குத் தெரிந்துவிடுகிறது.

வேலை, பணம், வியாபாரம், காதல், கள்ளக்காதல், காமம், முத்தம், வன்மம், சமாதானம், அன்பு, திருட்டு, கொலை, ஊழல், துரோகம், பிரிவு, அழுகை, புன்னகை... செல்போன்!

மிஸ்டு கால்