Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

மீபத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத இரண்டு செய்திகளைப் படித்தேன். முதல் செய்தி, உண்மையில் ஒரு புகைப்படம்!

 ஆப்பிள் நிறுவனத்தை ஜாப்ஸுடன் இணைந்து தொடங்கிய ஸ்டீவ் வாஸ்னியாக் எப்போதும் சுமந்து செல்லும் பேக்குக்குள் என்னவெல்லாம் வைத்திருக்கிறீர்கள் என்பதை வலைப்பதிவர் ஒருவர் கேட்க, அதற்குப் பதில் அளிக்கும் விதத்தில் வாஸ்னியாக் தான் வைத்திருக்கும் மின்னணுச் சாதனங்களை மேசையில் விரித்துப் போட்டிருக்கும் படம்தான் அது. லேப்டாப், ஐ/பாட்|போன்|பேட், பல வித ஆண்ட்ராயிட் போன்கள். ப்ளூடூத் ஸ்பீக்கர் வகையறாக்கள், வயர்லெஸ் இணைப்பு கொடுக்கும் வைஃபை சாதனங்கள், இவற்றை எல்லாம் இயக்கத் தேவைப்படும் பேட்டரிகள் என எலெக்ட்ரானிக்ஸ் ரகளையாக இருக்கிறது இந்தப் படம்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

படித்த மற்றொரு செய்தி... உலகம் முழுவதும் அதிகரித்துவரும் உடல் பருமன் பிரச்னைக்கு, மின்னணுச் சாதனங்களின் பெருக்கம் காரணமாக இருக்கக் கூடும் என்பதைப் பற்றிய ரிப்போர்ட். கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவரும் தகவல் தொழில்நுட்பத்தின் பிரமாண்ட வளர்ச்சி, வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித் திறனையும் உயர்த்தி இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அதேவேளையில், அதற்காக நாம் கொடுக்கும் விலை இருக்கிறது!

முன்னொரு காலத்தில் திரை என்றால், தியேட்டரில் படம் பார்ப்ப தற்காக நமக்கு முன்பாக இருக்கும் செவ்வக வடிவு என்பது போய், இப்போது தொலைக் காட்சிப் பெட்டிகள், மேசை/மடிக் கணினிகள், அலைபேசிகள் என நம்மைச் சுற்றிலும் கோடிக்கணக்கில் குட்டித் திரைகள்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

லாப நோக்கமற்ற, தன்னார்வ நிறுவனமான மில்கென் உலகின் பல்வேறு பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய ஆராய்ச்சிக்குப் பெயர் பெற்றது. சென்ற வாரம் மில்கென் வெளியிட்டுஇருக்கும் ரிப்போர்ட், 'திரைகளுக்கு முன்னால் மக்கள் செலவழிக்கும் நேரத்துக்கும் அவர்களது எடை அதிகமாவதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது’ என்கிறது.

உங்களிடம் இருக்கும் தொழில்நுட்பச் சாதனங்களை 10 சதவிகிதம் அதிகரித்தால், உங்கள் உடல் பருமன் ஒரு

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

சதவிகிதம் அதிகரிக்கும் என்று நிரூபிக்கிறது இந்த அறிக்கைக்குப் பின்னிருக்கும் தகவல்கள். தொழில்நுட்பச் சாதனங்கள் அதிகரித்து வரும் வளரும் நாடுகளான இந்தியா, சீனா போன்றவற்றிலும் இந்தப் பிரச்னை கிடு கிடுவென அதிகரித்தபடி இருக்கிறது என்கிறது இந்த ரிப்போர்ட். தகவல் தொழில்நுட்பங்களில் (ICT - Information and Communication Technologies) நாடுகளின் முதலீடுகளையும், நாடுகளில் உடல் பருமன் அதிகரிக்கும் அளவுகளையும் கடந்த 20 ஆண்டுகளில் அளந்து கொடுக்கப்பட்டு இருக்கும் வரைபடங்கள் அப்படியே ஒன்றுடன் ஒன்றாகப் பொருந்துவதைப் பார்க்க முடிகிறது. உடல் பருமனால் வரும் நோய்களை எதிர்கொள்ளப் பல்வேறு நாடுகள் செலவழிக்கும் பணமும் வருடந்தோறும் அதே விகிதத்தில் அதிகரிப்பதும் உண்மை. இதேரீதியில் போனால், அடுத்த 20 வருடங்களில் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்த்தால் கவலையாக இருக்கிறது.  

'தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் இடையளவு விளைவுகள்’ என்று தலைப்பிட்ட மில்கென் நிறுவன அறிக்கையை முழுமையாகப் படிக்க, இதைச் சொடுக்குங்கள்....

இந்தப் பிரச்னையை மேற்கொள்ளச் சில சிபாரிசுகளை அரசாங்கங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் சமூகத்துக்கும் கொடுக்கிறது மேற்படி ரிப்போர்ட்.

ஊழியர்களின் பழக்கவழக்கங்களை மாற்ற உற்சாகப்படுத்துவதுடன், ஆக்டிவாக இருக்க முயலும் பழக்கங்களுக்குப் பரிசளிக்கும் திட்டங் களைக் கொண்டுவருதல், நகர்களில் சைக்கிள் ஓட்ட வசதியான பாதை களைக் கட்டமைக்க நிதி ஒதுக்குதல், நடந்து செல்ல வசதியான வகையில் நடைபாதைகளை உருவாக்குதல்... இப்படிப் பல!

கணினி முன் அமர்ந்து வேலை பார்க்கும் நேரம் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்கள் என்றல்ல; பல துறைகளிலும் அதிகரித்தபடியே இருப்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. விகடன் அலுவலகத்தின் எடிட்டோரியல் பிரிவில் 20 வருடங்களுக்கு முன்னால், மேசைகளும் அவற்றில் தொலைபேசியும் அமர்ந்திருக்கும். இப்போது ஒரு சாப்ட்ஃவேர் நிறுவனம்போல இருக்கிறது. செக்யூரிட்டி தவிர, ஒவ்வொருவரும் தீர்க்கமாகக் கணினித் திரையைப் பார்த்தபடி அமர்ந்து இருக்கிறார்கள்.

இந்த ரிப்போர்ட்டில் இல்லாத சில நடைமுறைத் தீர்வுகளை இணையப் பெருவெளியில் சமீபத்தில் பார்த்ததைப் பகிர்கிறேன்.

உடற்பயிற்சிக் கூடங்களில் இருக்கும் டிரெட்மில் பார்த்திருப்பீர்கள். அந்த டிரெட்மில் சாதனத்துடன் மேசை ஒன்றை இணைத்துவிட்டால், உட்கார்ந்து கணினியில் வேலை பார்ப்பதைவிட நடந்துகொண்டே பணிபுரியலாம். 'ஆடு மேய்ப்பு அண்ணனுக்குப் பொண்ணு’ டைப்பில் வேலையும் நடக்கும்; உடற்பயிற்சியும் கிடைக்கும். இந்த ஸ்பெஷல் டிரெட்மில்லை நீங்களே எளிமையாகச் செய்துகொள்ள வேண்டுமானால், இந்த உரலியைப் பாருங்கள்: http://lifehacker.com/5463105/build-a-walking-work-station-in-20-minutes-for-20

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

டிரெட்மில் நகர்வதற்கு மின்சாரம் தேவை. கணினியை இயக்கவும் மின்சாரம் தேவை. பயனீட்டாளரின் இயக்கத்தின் மூலமாகவே மின்சாரத்தை உருவாக்க முடிந்தால்..? இந்தக் கற்பனையை அழகான சாதனம் ஆக்கியிருக்கிறது நெதர்லாந்தைச் சார்ந்த வீவாட் என்ற நிறுவனம் (www.wewatt.be ). மேசையில் அமர்ந்து பெடலை அழுத்த மின்சாரம் தயாராகிறது; அதைக்கொண்டு கணினியை இயக்கிக்கொள்ளலாம். மின்சாரக் கட்டணமும் குறையும்; உங்களது இடுப்பளவும் குறையும். Brilliant!

இது மட்டும் அல்லாமல், இந்த மின்னணுச் சாதனங்களில் இருந்து வரும் கதிரியக்கங்களின் விளைவுகள் என்ன, அவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? பார்க் கலாம்... அடுத்த வாரம்!

LOG OFF