Published:Updated:

ஆறாம் திணை

மருத்துவர் கு.சிவராமன்படம் : சொ.பாலசுப்பிரமணியன்

ஆறாம் திணை

மருத்துவர் கு.சிவராமன்படம் : சொ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:
##~##

புற்றுநோய்...

 இந்த வார்த்தையைப் படிக்கும்போதே உள்ளுக்குள் ஒரு நடுக்கம் எழுகிறதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருகாலத்தில், தமிழ் சினிமாவின் 13-வது ரீலில்தான் புற்றுநோய் வரும். ஆனால், இப்போது பக்கத்து வீட்டு அத்தை, ஒன்றுவிட்ட சித்தப்பா, நண்பனின் குழந்தை என எங்கு பார்த்தாலும் புற்றுநோயின் தாக்கம். புற்று நோயின் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன என்கிறது அரசு சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் புள்ளிவிவரங்கள்.

புற்றுநோய் வர என்ன காரணம் என்று என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? அறிவியலும் மருத்துவமும் ஆயிரமா யிரம் காரணங்களை அடுக்கினாலும் முக்கியமான, சுருக்கமான ஒரு காரணம் உண்டு... நம் வாழ்க்கை முறை!

ஆறாம் திணை

நம் கண்களுக்கு எதிரே மரங்கள் வெட்டப்படுகின்றன. அமைதியாகக் கடக்கிறோம். நச்சுக் கழிவுகள் குப்பைகளாகக் கொட்டப் படுகின்றன. அமைதியாகக் கடக்கிறோம். ஆறு மாதங்கள் வரைக்கும் கெடாது என்று பிளாஸ்டிக் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. அமைதியாகச் சாப்பிடுகிறோம். புகையைச் சுவாசித்து, நச்சுத் தண்ணீரைக் குடித்து, பூச்சிக்கொல்லிகளும் ரசாயனங்களும் சேர்ந்த உணவைச் சாப்பிட்டு வாழ்ந்தால், புற்றுநோய் வராமல் என்ன செய்யும் நண்பர்களே?

ஆறாம் திணை

து அவசர உலகம். கரிசனம் காட்டவோ, அக்கறையாக மெனக்கெடவோ முடியாத நெருக்கடியில்தான் நம்மில் பலர் இருக்கிறோம். குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்குச் சமையல் அறையில் பெண்கள் அதிக நேரம் செலவிட்டது அந்தக் காலம். அதே குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அதே பெண்கள், அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவது இந்தக் காலம். 'ஈவது விலக்கேல்’ என்பது மறந்து 'ஈ.எம்.ஐ. தவறேல்’ என்று வாழ்ந்துவரும் நம்மில் பலர் உடனடிக் கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம். இந்த உடனடிக் கலாசாரத்தை மாற்றிக்கொள்வதில் இருந்தே மாற்றத்தை நீங்கள் தொடங்கலாம்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். யார் யார் எல்லாம் உடனடிக் கலாசாரத்தின் ஆபத்பாந்தவன்கள் என்று. இன்ஸ்டன்ட் அல்லது ரெடி டு ஈட் சமாசாரங்களில் பாலிதீன் பயன்பாடு தொடங்கி முந்தைய நாள் செய்ததை ஃப்ரிஜ்ஜில்வைத்து இன்றைக்குச் சாப்பிடுவது வரை எங்கெங்கும் அவசர யுகப் பயன்பாடே வியாபித்து இருக்கிறது.

சமைத்த உணவு, சில மணி நேரங்களில் கெட ஆரம்பிக்கும் என்பது இயற்கையின் நியதி. புளிக்கத் துவங்குவது, பூஞ்சைகள் வளர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சி ஒவ்வொன்றாகத் தொடங்குவது இயல்பு. அந்த இயற்கையைச் சிதைக்க, நொதிக்காமல் இருக்க ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ், பூஞ்சை வளராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமணம் கெடாது இருக்க நைட்ரஜன் ஃப்ளஷ்ஷிங்... இன்னும் என்னென்னவோ தேவைகளுக்காக விதவிதமான ரசாயனங்களைச் சேர்த்துதான் 'உடனடியாகச் சாப்பிடலாம் வாங்க’ எனச் சந்தைக்கு வரு கின்றன, உடனடிச் சாப்பாட்டுச் சமாசாரங்கள். அதுவும் எதில் வருகின்றன? பாலிதீன் பைகள்

ஆறாம் திணை

அல்லது பிளாஸ்டிக் புட்டிகளில். இதை வாங்கிப்போய் நீங்கள் எங்கே வைப்பீர்கள்? ஃப்ரிஜ்ஜுக்குள். அவ்வளவும் சொந்த செலவில் சூனியம்வைத்துக்கொள்ளும் விஷயங்கள்தான்.

'மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம். வாய்ப்பு இருக்கும் போது சமைத்து வசதியாக ஃப்ரிஜ்ஜில்வைத்துச் சாப்பி டலாம் என்கிறது இன்றைய தமிழ்க் குடும்பம். ஃப்ரிஜ்ஜில் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டி லில்வைப்பது ஆகட்டும்; காய் கறிக் கடையில் வாங்கிய காய்கனிகளைப் பத்திரமாக பிளாஸ்டிக் பையில் பிரித்துவைப்பது ஆகட்டும்;  இன்னும் புத்திசாலித்தனமாக இரவே காய்களை வெட்டி, பிளாஸ்டிக் பையில் போட்டு சமர்த்தாக ஃபிரிஜ்ஜில்வைத்து, காலையில் சமையல் செய்து வேகமாகக் கிளம்பு வது ஆகட்டும்... உங்கள் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ள நீங்களே வழிவகுத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

அதிசூட்டிலும் அதிகுளிரிலும்தான் பிளாஸ்டிக்கில் இருந்து 'டயாக்ஸின்’ வாயு கசிந்துவருமாம். இரவு முழுவதும் ஃப்ரிஜ்ஜுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் பையில் இருந்து கசியும் டயாக்ஸின், உங்கள் பீன்ஸ் துண்டுகளுக்குப் போயிருக்கும். அப்புறம் அந்த பீன்ஸ் பொரியல், புரோட்டின் தருமோ என்னவோ... கண்டிப்பாக புற்றுநோயைத் தரக்கூடும்.

பள்ளிக்கூடத்துக்கு எவர்சில்வர் பாத்திரங்களில் தண்ணீரோ, சாப்பாடோ எடுத்துச் செல்ல முடியுமா? அதெல்லாம் அசிங்கம் என்று சொல்லும் குழந் தைகள் அதிகமாகிவிட்டார்கள். எல்லாம் நம் வளர்ப்புதான். அழகான பிளாஸ்டிக் டப்பர் வேர் வாங்கி, அதில் சூடான வத்தல் குழம்பைக் கொடுத்து அனுப்புவீர்கள் நீங்கள். வத்தல் குழம்பில் மெள்ளக் கசியும் டயாக்ஸின் அப்போது ஒன்றும் செய்யாதுதான். எப்போதுமே ஒன்றும் செய்யாமல் இருக்குமா என்ன?

புற்றுநோய்க்கான காரணிகளில் ரொம்ப முக்கியமாகப் பேசப்படுவது பிளாஸ்டிக்கும் டயாக்ஸின், பென்சீன் வகையறாக்களும்தான்.

புற்றுநோய் மட்டுமா? சர்க்கரை நோய் அதிக ரித்து இருப்பதற்கு, தண்ணீர் விநியோகத்துக்கு பி.வி.சி. குழாய்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்குமோ என்று இப்போது ஆராய்கிறார்கள். பி.வி.சி. குழாய்கள் வளைந்து நெளிந்து வீட்டுக்குள் செல்ல, அதில் பயன் படுத்தப்படும் சில 'பாலிமர் துணை கள்’ கொஞ்சமாகக் கசிந்து இன்சுலின் சுரப்பில் சிக்கல் உண்டாக்கி இருக்க லாம் என்று சந்தேகிக்கிறது இந்த ஆய்வு.

ரொம்பப் பயமுறுத்துவதற்கோ, அதிகப்படியான கற்பனையிலோ இதை எல்லாம் எழுதவில்லை. சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை வெளி யிட்டு இருக்கும் புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளின் பட்டியலில், தொகுதி 1-ல் மேற் சொன்ன பிளாஸ்டிக் துணுக்குகள் உள்ளன. (தொகுதி 1 காரணி என்றால், அது புற்றுநோயை உறுதியாகத் தோற்றுவிக்கும் என்று பொருள். தொகுதி 2, 3 எல்லாம் அவ்வளவாக உறுதிப்படுத்தாத காரணிகள்).

இந்த நேரத்தில், தேசிய உணவியல் கழகம் சொல்லும் உணவுத் தொழில்நுட்பம் தொடர்பான  தகவலைத் தருகிறேன்.

'நீர்க் காய்கறியைக் கூட்டாகவைக்க வேண்டும்; பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும் முற்றிய காயைப் பொரியலாகவும் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல; காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக் கரைசலில் வேக விடவும் வேண்டும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் அல்லவா? 'புளியில் வேக வைத்தால் அதன் புரதச் சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை.  நீர்க் காய்கறிகளில் மிதந்து நிற்கும் வைட்ட மின்கள், வற்றவிடாமல், வடித்துக் கொட்டாமல் கூட்டாகச் செய்யும்போது அதன் பயன் சற்றும் கெடாது’ என்று சொல்கிறது தேசிய உணவியல் கழகம்.

நம் முன்னோர்கள் எவ்வளவு பாதுகாப்பாகத் தந்த வாழ்க்கையை எவ்வளவு அபாயகரமானதாகவும் நாசகரமானதாகவும் நாம் மாற்றிக்கொண்டு இருக்கிறோம்... பார்த்தீர்களா?

'சரி டாக்டர். பிளாஸ்டிக்கைத் தவிர்க்கிறோம், எவர் சில்வர் பாத்திரங்களுக்கு மாறுகிறோம். அவசர, அத்தியாவசியம் இல்லாமல் ஃப்ரிஜ்ஜைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கிறோம். நீங்கள் சொல்லும் ரெடி டு ஈட் சமாசாரங்களையும் விட்டுவிடுகிறோம். ஆனால், அவசர உலகில் வாழும்      எங்களைப் போன்றவர்களுக்கு மாற்று உணவு என்ன இருக்கிறது?’ என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. நிறைய இருக்கின்றன. முக்கியமானது அவல். கைப்பையில் கொஞ்சம் சிவப்பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்ல மும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்பு தயார். கால் மணி நேரம் ஊறவைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும்.

ஆறாம் திணை

உடனடியாகச் செய்யக்கூடியது கேழ்வரகு லட்டு. கேழ்வரகு கால்சியம் நிறைந்த ஒரு தானியம். அதை வாணலியில் வறுத்து, பனை வெல்லம் அல்லது வெல்லத்தை நன்கு உதிர்த்து அதில் கிளறிப்போட்டு, சூடாக இரண்டு ஸ்பூன் நெய்விட்டு சூட்டோடு உருண்டையாகப் பிடித்துவையுங்கள். இரும்பு, கால்சியம், புரதம் இன்னும் உடலுக்குத் தேவையான பல கனிமங்கள் நிறைந்த இந்த உருண்டை ருசியோடு பசியாற்றும்.

'எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது டாக்டர்!’ என்று சொல்வீர்கள் என்றால், பொரி வாங்கிக்கொள்ளுங்கள். கொஞ்சம் மஞ்சள் தூள், காரம் சேர்த்து பொட்டலம் கட்டிக்கொள்ளுங்கள். இன்னும் நிறைய உண்டு. மனம் இருந்தால், மார்க்கம் உண்டு நண்பரே... எல்லாவற்றுக்குமே!

- பரிமாறுவேன்...  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism