Election bannerElection banner
Published:Updated:

"ராஜீவ் கூசாமல் பொய் சொன்னார்!"

போஃபர்ஸ் 'உண்மை' சொல்கிறார் சித்ரா சுப்பிரமணியம்

"ராஜீவ் கூசாமல் பொய் சொன்னார்!"
##~##

சென்னை, அடையாறில் உள்ள ஐ.ஐ.டி. அரங்கில் அரங்கம் முழுக்க மாணவர்கள் நிரம்பி வழிந்தார்கள். மைக் முன் வந்தார் சித்ரா சுப்பிரமணியம். போஃபர்ஸ் ஊழல் விவகாரம் அமர்க்களப்பட்டபோது இந்தியத் தொடர்பு கள் அதில் பெற்ற கமிஷன் ஆதாரங்களை ஜெனிவாவில் இருந்து கூடை கூடையாக அனுப்பிவைத்து இந்தியப் பத்திரிகையாளர்களில் கோலோச்சிய நிருபர். முதல் 20 நிமிடங்களுக்கு போஃபர்ஸ் ஊழல்பற்றிப் பேசினார் சித்ரா. அப்புறம் கேள்வி-பதில்!

''போஃபர்ஸ் சம்பந்தமாக உங்களுக்குப் பயமுறுத்தல் எதுவும் வந்ததா?''

''ஓ! 1989-களில் நிறைய வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கு. டெலிபோன் மிரட்டல்களும் வரும். ஆனால், இந்தி சினிமாவில் காட்டுவதுபோல் எல்லாம் இல்லை. முரட்டுத்தனம் இன்றி பாலிஷாகப் பேசுவார்கள். என்னை போஃபர்ஸ் ரிப்போர்ட்டிங்கில் இருந்து விலகிக்கொள்ளும்படி அட்வைஸ் செய்வார்கள். இல்லை என்றால் என் குழந்தைக்கு ஆபத்து வரும் என்றும் மிரட்டுவார் கள். ஆனால், நான் எதுகுறித்தும் கவலைப்பட்டது இல்லை.''

''போஃபர்ஸ்பற்றிய விசாரணையை நிறுத்தும்படி எழுதியிருந்த - யாரோ கொடுத்த ஒரு கடிதத்தை சுவிஸ் அதிகாரியிடம் நம் மத்திய அமைச்சர் சோலங்கி கொடுத்தாரே... அதில் என்ன எழுதியிருந்தது?''

"ராஜீவ் கூசாமல் பொய் சொன்னார்!"

''என்ன எழுதியிருந்தது என்பதைவிட, அது எவ்வளவு மட்டமான ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது என்பதுதான் தமாஷான விஷயம் அதைவிட தமாஷ்... அதை சோலங்கி கொடுத்த சூழ்நிலை. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடக்கும் சர்வதேச மாநாடு அது. மாநாட்டு ஹால் வராண்டா வில் அதிகாரிகளுடன் போய்க்கொண்டு இருந்த சுவிஸ் நாட்டு அதிகாரியை, சோலங்கி 'ஸ்... ஸ்...’ என்று சத்தம் ஏற்படுத்த, ரகசியமாக ஏதோவென்று பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பேரையும் உடனடியாகப் பக்கத்து அறைக்குள் அனுப்பிவைக்க... அங்கேதான் கடிதப் பரிமாற்றம் நிகழ்ந்தது. அந்தக் கடிதத்தில் தேதியும் இல்லை... யாருக்கு யார் எழுதினார்கள் என்கிற விவரமும் இல்லை. கடிதம் 'ஜாங்கோ’ ஆங்கிலப் பட ஸ்டைலில் 'நிறுத்தவும்’ என்று எழுதப்பட்டு இருந்ததுதான் மகா வெட்கக்கேடான விஷயம்.''

''போஃபர்ஸ் ஊழலில் எவ்வளவு ஆதாரங் களை உங்களால் கைப்பற்ற முடிந்தது? அவை எத்தகைய ஆதாரங்கள்?''

''போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தை ஒட்டி 1,000-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் நான் மட்டுமே 350-க்கும் மேற்பட்ட ஆதாரங்களைக் கைப்பற்றி இருக் கிறேன்.

ஆதாரங்களில் போஃபர்ஸ் கம்பெனிக்கும் இந்திய இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள், கடிதப் பரிவர்த்தனைகள், மூன்று பிரபல இந்திய கம்பெனிகளுக்குப் பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கு அத்தாட்சிகள் என்று பரவலாக இருக்கின்றன.''

''ராஜீவ் காந்தி நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளதற்கு என்ன ஆதாரம் உள்ளது?''

''நீங்கள் நினைக்கிறார்போல ராஜீவ் காந்தி பெயரிலேயே சுவிஸ் கணக்கெல்லாம் இல்லை. குவாத்ரோச்சி (Quattrochhi) என்பவர் இந்தியாவில் வியாபாரம் செய்துவரும் இத்தாலிய வியாபாரி. அவ ருக்கும் ராஜீவ் குடும்பத்துக் கும் ரொம்ப நெருக்கம். அவர் பெயரில் உள்ள சுவிஸ் கணக்குதான் தற்போது சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் முடக்கப்பட்டு உள்ளது.''

'' 'ஆம். போஃபர்ஸிடம் இருந்து கமிஷன் பணம் வந்தது. அதன் ஒரு பகுதி கட்சி நிதிக்குப் போய்விட்டது. மீதி அரசாங்கத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும்’ என்று ராஜீவ் சொல்லியிருந்தால் என்ன ஆகி இருக்கும்?''

''அப்போதும் ராஜீவ் காந்தி அந்த எலெக்ஷனில் ஜெயித்திருக்க மாட்டார். தோற்றுத்தான் போயிருப்பார். ஆனால், ராஜீவோ 'போஃபர்ஸ் விவகாரத்தில் யாருக்கும் சம்பந்தம் இல்லை’ என்று கூசாமல் பொய் சொன்னார். இத்தனைக்கும் 250 கோடி ரூபாய்க்குள்ளான ஊழல் விவகாரம்தான் இது. ஆம்! இப்போது 3,000 கோடி ரூபாயைத் தாண்டியெல்லாம் இந்திய ஊழல் போய்க்கொண்டு இருப்பதைப் பார்க்கும்போது, போஃபர்ஸ் ஊழல் என்பது ரொம்ப ரொம்ப சின்ன தொகை!''

றுநாள் காலை... ஐ.ஐ.டி. கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த சித்ரா சுப்பிரமணியத்தைச் சந்தித்தோம்.

''உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்...''

"ராஜீவ் கூசாமல் பொய் சொன்னார்!"

''தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறைதான் அப்பாவுக்குச் சொந்த ஊர். அப்பாவின் குடும்பம் அறிவியல் மேதைகளும் கணித மேதைகளும் நிறைந்தது. அப்பா சுப்பிரமணி யம், கெமிக்கல் இன்ஜினீயர். இங்கிலாந்து சென்று படித்தவர். ஓய்வுபெறும் வேளையில் ஒரு பப்ளிக் கம்பெனியின் தலைவராக இருந்தார். அம்மாவின் அப்பா, சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். அம்மாவின் அம்மா ராஜ லட்சுமி, சுதந்திரப் போராட்டக் காலத்தில் மகிளா காங்கிரஸ் உறுப்பினர். மடிசார் புடைவை உடையில்... கையில் குக்கர், ஸ்டவ் சகிதம் பாட்டி குவாலியர் மாநாட்டில் பங்கு பெற்றது, இன்றும் புகைப்படமாக எங்கள் வீட்டில் உண்டு. இந்தியக் கலாசாரம் குறிப்பாக, பிராமணர்கள் ஆசாரம் எதுவும் கெடக் கூடாது பாட்டிக்கு. இது தொடர்பாக என் சின்ன வயதில் எக்கச்சக்க விவாதங்களை

என் பாட்டியோடு நடத்தியிருக்கிறேன். இப்படி அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு சூழலில் வளர்க்கப்பட்டு இருந்ததால், இரண்டு தரப் பின் நல்ல பழக்கங்களும் எனக்கும் என் அண்ணனுக்கும் வந்துவிட்டன. வீட்டில் சர்வ சுதந்திரம் உண்டு. ஆனாலும், 'எதிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும். தவறான விஷயங்கள் பக்கம் போகவே கூடாது’ என்ற போதனை ஆரம்பத்தில் இருந்தே இயல்பாக எங்கள் மண்டைக்குள் ஏற்றப்பட்டுவிட்டது. டெல்லி பல்கலைக்கழகத் தில் நான் பி.ஏ. முடித்ததும் என் அம்மாதான் (ஜானகி சுப்பிரமணியம்) சொன்னார் - 'நீ ஏன் ஒரு நிருபராகக் கூடாது?’ என்று!''

''அப்படியானால் பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்று நீங்கள் நினைத்தது இல்லையா?''

''இல்லை... எனக்குத் தொடக்கத்தில் வேறு கனவுகள் இருந்தன. சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் பிரமாதமான நாட்டியக்காரி ஆகத்தான் விருப்பப்பட்டேன். கிட்டத்தட்ட 20 வருடங்கள் பரதம் ஆடியிருக்கிறேன். அம்மா சொன்னதற்காக எதேச்சையாக - ஒரு வட நாட்டுப் பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து வேலை கேட்டேன். அப்போது ஏதோ போட்டியில் விளையாட டெல்லிக்கு சுனில் கவாஸ்கர் வந்திருந்தார். 'அவரைப் பேட்டி கண்டு வாருங்கள். அப்புறம் பார்க்க லாம்’ என்றார்கள் அந்தப் பத்திரிகையில். எனக்கு சுனில் கவாஸ்கரைத் தெரியுமே தவிர, கிரிக்கெட்டில் பிரமாத அறிவெல்லாம் கிடையாது. கவாஸ்கரிடமே இதை ஒப்புக்கொண்டேன். என் முதல் பேட்டி என்று சொல்லி மனதில் தோன்றிய அத்தனை அசட்டுத்தனமான கேள்விகளையும் கேட்டு வைத்தேன்.

சுனில் சிரித்தபடி பதில் சொன்னார். பேட்டி வெளிவந்தது. பேட்டி  நன்றாகவே வந்திருப்பதாகச் சொல்லி எனக்கு வேலை தந்தார்கள். அப்புறம் பத்திரிகைத் துறை யில் மேற்படிப்பு படிக்க அமெரிக்கா போனேன்.

அங்கு உள்ள பல்கலைக்கழகத்தில் நான் படித்தபோதுதான் என் கணவர் கார்லோவைச் சந்தித்தேன். எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் படித்துக்கொண்டு இருந்தார். நாங்கள் நண்பர்களாகத்தான் இருந்தோம். திடீரென்று ஒருநாள் கார்லோ என்னிடம் வந்து, 'உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்றார். நான் 'இந்தியா போய், என் அம்மா - அப்பாவைக் கேளுங்கள்’ என்று சொல்லிவிட்டேன். அவர் மெனக்கெட்டு இந்தியா வந்து என் அம்மா, அப்பா சம்மதம் பெற்று என்னை டெல்லியில் கல்யாணம் செய்துகொண்டார்.''

''போஃபர்ஸ் ஊழல் விவகார டாகுமென்ட்களைச் சேகரித்த வேளையில் நீங்கள் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தீர்களாமே... எப்படிச் சமாளித்தீர்கள்?''

''உண்மைதான்! எங்கள் வீட்டில் இருந்து எனக்குத் தகவல் தருபவரின் இருப்பிடத்துக்குப் போவதற்கே பல மணி நேரம் ஆகும். வீட்டுக்கு வந்தால், அதையெல்லாம் ரெஃபர் செய்து கட்டுரை எழுத வேண்டும். இது தவிர வீட்டு வேலை. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஆறே மணி நேரம்தான்தான் தூங்க முடியும். இருந்தும் என்ன செய்வது? சாதிக்க வேண்டும் என்றால் செய்துதானே ஆக வேண்டும்? நான் ஆயாசம்கொண்டால் என் அம்மா சொல்வாள், 'மனது வைத்தால் இது ரொம்ப சுலபம்... நம் ஊரில் சித்தாள் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் கையோடு குழந்தையையும் தூக்கிக்கொண்டு போய் வேலை செய்கிறார்கள். உனக்காவது வீட்டு வேலையைப் பங்கு போட்டுக்கொள்ள கணவர் இருக்கிறார். எனவே, தைரியமாகச் செய்’ என்பாள். அது ரொம்ப உண்மை. எனக்கு எவ்வளவோ விஷயங்களில் கணவர் உதவு கிறார். அதை மீறியும் வீட்டு வேலைகள் அதிகம்தான். அப்போதும் கத்திக்கொண்டே யாவது வேலை செய்கிறேனே தவிர, அப்படியே தான் கிடக்கட்டுமே என்று எதையும் உதறித் தள்ளுவதே இல்லை. இதுதான் பெண் குணம்.

எல்லாமே லைஃபில் ஒரு பகுதி... சகஜம் என்று எடுத்துக்கொண்டால், கர்ப்பிணியானாலும் சாதிக்க முடியும்; இது ஏதோ புது மொழி அல்ல. அனுபவம்!'' (சிரிக்கிறார்)

"ராஜீவ் கூசாமல் பொய் சொன்னார்!"

''நீங்கள் பெண்ணாக இருந்ததால், தகவல் தருபவர் மனசு இளகினாரா?''

''நான் பெண் என்கிற தகுதியை எதற்காகவும் உபயோகப்படுத்தியது இல்லை. என் எதிரில் இருப்பவர், நான் பெண், அதிலும் கர்ப்பிணி என்று மனசு இளகி ஆதாரங்களைக் கொட்டினால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? ஆனால் ஒன்று... என் விஷயத்தில் - எனக்குத் தகவல் தந்தவர் என்னைக் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் காக்கவைத்தார். 'நாளைக்கே தாயாகப்போகிறாய்... பொறுமை வேண்டும் பெண்ணே’ என்பார். தொடர்ந்து அவரை நச்சரித்துவந்தேன். என் விடாமுயற்சிக்குத்தான் பலன் கிடைத்ததே தவிர, நான் பெண் என்கிற தகுதியால் அல்ல!''

''இந்தியப் பத்திரிகைகளில் தாவிக்கொண்டே இருந்தீர்களே?''

''அதற்கும் நான் பொறுப்பு அல்ல. ஒரு கட்டத்தில் என் கட்டுரைகளைப் பிரசுரிக்க மறுத்தவர்களிடம் இருந்து நான் விலகித்தானே ஆக வேண்டும். இப்போதும் ஒன்று சொல்வேன்... இந்தியப் பத்திரிகைச் சுதந்திரம் என்பது இரண்டு பக்கமும் கூர் முனைகொண்ட கத்தி. அதில் ஆட்பட்டுவிடுகிற முதலாளிகளுக்கு நிறைய நிர்ப்பந்தங்கள் வந்துவிடுகின்றன. அதை மீறியும் கதவைத் தட்டுபவர்களுக்குத்தானே நான் என் வாசல் கதவைத் திறக்க முடியும்!'' என்று சொல்லும் சித்ரா சுப்பிரமணியம், தற்போது ஜெனிவாவில் இந்திய தினசரி ஒன்றுக்கு நிருபராக இருக்கிறார். சித்ரா - கார்லோ தம்பதிக்கு நிகில், நித்யா என்ற இரண்டு குழந்தைகள். ''நித்யாவுக்கு ஆறு மாசம்தான் ஆகிறது. பெங்களூரில் உள்ள என் அம்மா வீட்டில்தான் வளர்ந்துவருகிறாள். நிகிலை ஊருக்குப் போய்தான் ஸ்கூலில் சேர்க்க வேண்டும்!''

''அது சரி... தமிழ்ப் பெண்ணாக இருந்துகொண்டு ஏன் பொட்டு வைப்பது இல்லை?''

''எந்த மதத்தின் பழக்கவழக்கத்தோடும் என்னை நான் பிணைத்துக்கொள்வது இல்லை. அதனால் என்றைக்காவது தோணினால் மட்டுமே பொட்டு, பூவெல்லாம் வைத்துக்கொள்வேன். தாலியைக்கூட இரவு நேரங்களில் கழற்றிவைத்துவிடுவது உண்டு!''

- எஸ்.சுபா
படங்கள்: மேப்ஸ்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு