பிரீமியம் ஸ்டோரி
பேயோன் பக்கம்!

இதயம் பேசுகிறது

பேயோன் பக்கம்!

'இதயம்’ படத்தை மாதிரியாக வைத்து ஒரு சினிமா கதை எழுதிக்கொண்டிருக்கிறேன். நாயகனும் நாயகியும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு இடையே திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது, ஆனால், காதல் சுத்தமாக வற்றிவிட்டது. எனவே, இவர்கள் நடுவில் விவாகரத்து ஆசை துளிர்விடுகிறது. ஆனால், இருவருமே தன்னை மற்றவர் இன்னும் காதலிக்கிறாரோ என்ற சந்தேகத்தில் தங்கள் ஆசையைச் சொல்ல முடியாமல் தவி(ர்)க்கிறார்கள். தைரியத்தை வர வழைத்துக்கொண்டு சொல்லப்போனால், அந்தச் சமயம் பார்த்து யாராவது குறுக்கே வந்து விடுகிறார்கள். நண்பர்கள் இவர்களைப் பிரித்து வைக்கப் படாதபாடுபடுகிறார்கள். கடைசியில் நாயகனும் நாயகியும் பிரிகிறார்களா என்பதை வெள்ளித் திரையில் காண்க!

உங்கள் பிள்ளைப் பருவத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்?

பேயோன் பக்கம்!

த்தாம் வகுப்பு வந்த பிறகுதான் எனக்குப் பிள்ளைகளிடம் ஆர்வம் ஏற்பட்டது. என்னோடு படித்த பையன்கள் மூன்றாம் வகுப்பிலிருந்தே சில பிள்ளைகளுக்குப் பின்னே சுற்றிக்கொண்டு இருந்தார்கள். அந்த வயதில் எனக்கு அது நேர விரயமாகத் தோன்றியது. பத்தாப்பு வந்ததும் மத்தாப்பு. என் வகுப்பில் வி.சாந்தி என்று ஒரு பிள்ளை இருந்தது. அது பிள்ளைமார்ப் பிள்ளை என்பதால், வாத்தியார்கள் அதை 'ரெட்டைப் பிள்ளை’ என்பார்கள். சாந்தி எவ்வளவு அழகியோ, அவ்வளவு வெட்க சுபாவி. நான் அதனிடம் பேசப் போனால், முகத்தைத் திருப் பிக்கொண்டு, கோபாலன், வேலு, சிங்காரம் என்று எந்தப் பையனின் கையையாவது பிடித்து இழுத்துக்கொண்டு வகுப்புக்கு வெளியே ஓடி விடும். சாந்தி எனது முதல் காதல். அதற்குப் பிறகு த்ரிஷா மேடம்தான். ஆனால், த்ரிஷா ஐயர் சா(ந்)தி என்று நினைக்கிறேன்.

சயின்ஸ் புராஜெக்ட்

பேயோன் பக்கம்!

குழந்தைகளை இணையத்தில் மேய விட்டால், அவர்கள் அங்கே என்ன பார்க்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதனால்தான் என் மகன் கணினியைப் பயன்படுத்தும்போது வேலை இருக்கும் பாவனையில் அதைச் சுற்றி நடமாடுவேன். இரு நாட்களுக்கு முன்னர் அவன் யூ டியூபில் 'டைம்பாம் செய்வது எப்படி?’ என்று ஒரு விளக்க வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். நான் அதிர்ச்சியில் அங்கேயே விழுந்துவிட்டேன். 'என்னடா பார்க்கிறாய்?' என்று கத்தினேன் தரையிலிருந்தபடி. 'ஸ்கூல் புராஜெக்ட்பா' என்ற பிறகே சமாதானம் அடைந்தேன். ஐந்து நாட்களுக்குப் பின்பு அவன் பள்ளியிலிருந்து சம்மன் வந்தது. அவனது வகுப்பாசிரியர் என்னிடம் ஒரே புலம்பல்: 'உங்கள் பையனுக்கு சுட்டுப்போட்டாலும் சயின்ஸ் வராது சார். நாங்கள் சயின்ஸ் புராஜெக்ட் செய்துவரச் சொன்னோம். அவன் இன்டர்நெட்டைப் பார்த்து டைம் பாமை எடுத்துவந்து நிற்கிறான். அது வெடிக்கவேயில்லை. அவனை நம்பி ஸ்கூலில் இருந்த எல்லோரையும் அரக்கப்பரக்க வெளியே அனுப்பி போலீஸுக்கு வேறு சொல்லிவிட்டோம். பாம் ஸ்குவாடு வந்து பாமைப் பார்த்துக் காறித் துப்பி விட்டுப் போய்விட்டது. ஸ்கூலுக்கே அவமானம். ஏன் சார், ஒரு ஒயர் கனெக்ட் செய்வது கம்பசூத்திரமா? ப்ராங்க் கால் என்று பிரின்சியை லாக்கப்பில் போட்டி ருக்கிறார்கள். ஸ்கூலுக்கு லீவ் விட வேண்டியதாய்ப் போனது. இன்று ஒரு டொனேஷன் ஷெட்யூல் செய்திருந்தோம். ஆனால், இன்றைக்குப் பார்த்து உங்கள் பையன்...'

குமார் துப்பறிகிறார்

பேயோன் பக்கம்!

பெனாயில் மணக்கும் சம்பவ வீட்டிற்குள் கான்ஸ்டபிள் 114 உடன் நுழைந்தார் இன்ஸ்பெக்டர் குமார். கூடத்தில் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது. வீடு கழுவப்பட்டிருந்தது. பதற்றமான நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் இன்ஸ்பெக்டரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றார். 4க்கு4 பாத்ரூமில் அந்தப் பெரியவர் சடலமாகக் கிடந்தார். காலடியில் ஒரு குளியல் சோப்.

'காலைலேந்து இப்பிடித்தாங்க கெடக்கறாரு. கூப்டா பதிலே இல்ல'- பெரியவரின் மனைவி விம்மினார்.

'மிஸஸ் மேடம், உங்க கணவர் கொல்லப்பட்டிருக்காரு' என்றார் குமார்.

மனைவி ஒரு கணம் அதிர்ந்து பின் கதறி அழுதார். 'அவரை யாருங்க கொல்லப்போறாங்க?'

'இவருக்கு எதிரிங்க யாராவது இருக்காங்களா?' என்றார் குமார், கீழே கிடந்தவரை லத்தியால் சுட்டிக்காட்டி.

'இல்லீங்க, இவர் யார் வம்புக்கும் போக மாட்டாரு' என்றார் மனைவி அழுதபடி.

குமார் குனிந்து பிணத்தின் பாதங்களைப் பார்த்தார். பிறகு முகத்தை நெருங்கிப் பார்த்தார்.

'பேச்சு மூச்சில்லாமக் கெடக்கறப்ப ஏன் ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ல?' என்றார் இன்ஸ்பெக்டர்.

'அவர் கோவிச்சிக்கிட்டுப் பேசாம இருக்கார்னு நினைச்சேன்...'

'கோவிச்சுக்கிட்டுன்னா அவரோட எதுக்காவது சண்டை போட்டீங்களா?'

'சண்டை இல்லைங்க. ரசத்தை வாயில வெக்க முடியலன் னாரு. அதுக்காகத் திட்டுனேன்.'

'மிச்சத்தை நான் சொல்றேன். அவர் மேல இருக்குற கோவத்துல அந்த ரசத்தைக் குடுத்தே அவரைக் கொன்னுட் டீங்க. அப்புறம் அவரை பாத்ரூமுக்கு இழுத்துட்டு வந்து காலடில சோப்பை வச்சீங்க. கைலேந்து சோப்பு வாசனை போக வீட்டைக் கழுவுற சாக்குல பெனாயிலைப் போட்டு கையைக் கழுவிருக்கீங்க. ஆம் ஐ ரைட்?'

அந்தப் பெண்மணி ஓடப்பார்த்தார். இன்ஸ்பெக்டர் அவரைத் தடுத்து நிறுத்தித் தொடர்ந்தார்.

'ஆனா, பேஷன்ட்டோட ரெண்டு கால்லயும் சோப்பு வாசனை வர்ல, பிசுபிசுப்பு இல்ல. வாயை நல்லாத் துடைச்சு விட்டிருக்கீங்க. பட், ரசத்தோட வாசனை உங்களைக் காட்டிக் குடுத்திருச்சு. அரெஸ்ட் ஹெர்!'

பேயோன் பக்கம்!
பேயோன் பக்கம்!

- புரட்டுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு