Published:Updated:

தெரு விளக்கு

"தருவது நம் கடமை... பெறுவது மக்களின் உரிமை!"பாரதி தம்பிபடங்கள் : ச.வெங்கடேசன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

"நாம் வாழ்க்கையில் பெறும் வெற்றிகள் அனைத்திலும் நம் உழைப்பு இருக்கலாம்... திறமை இருக்கலாம்... ஆனால், நம்மை அந்த வெற்றிக்கு அழைத்துச் செல்வது இந்தச் சமூகம்தான். அந்த ஒருங்கிணைந்த கூட்டு உழைப்பில்தான் தனி மனித வெற்றி சாத்தியமாகிறது. யாருடைய துணையும் இன்றி தன்னந்தனியே ஒருவர் சிறு செயலையும் செய்ய முடியாது. அதனால், சமூகத்துக்குத் திருப்பிச் செய்ய வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இந்தப் பள்ளிக்கூடம், எனக்கான கடமை!''- குழந்தைகளின் விளையாட்டுச் சத்தத்துக்கு இடையே மென்மையாகப் பேசுகிறார் பேராசிரியர் இராம.மணிவண்ணன். சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத் தலைவரின் இன்னொரு முகம்... இந்தப் பள்ளி.

 வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கணியம்பாடிக்கு அருகில் குரும்பப்பாளையம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது அமைதிப் பூங்கா ஆரம்பப் பள்ளி. மலைகள் சூழ்ந்த பசுமைப் பிரதேசத்தில் மழலைகளின் படிப்புச் சத்தம் காற்றில் எதிரொலிக்கிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடைபெறும் பள்ளியில் மொத்தம் 160 குழந்தைகள் படிக்கிறார்கள். மதிய உணவு, பாடப் புத்தகம் என அனைத்தும் இலவசம். யாரிடமும் எந்தக் கட்டணமும் வாங்குவது இல்லை.

தெரு விளக்கு

''அதை இலவசம் என்ற வார்த்தையால் சொல்ல வேண்டாம். என்னை வளர்த்தெடுத்த பகுதி இது. அருகில் இருக்கும் நெல்வாய்த்தோப்பு என் அம்மாவின் கிராமம். கல் உடைத்து, தோல் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து அன்றாட உணவுக்கே எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இப்போது நான் பேராசிரியர். என் சம்பளத்தில் இருந்து மாதம் 45 ஆயிரம் ரூபாயை இந்தப் பள்ளிக்குச் செலவழிக்கிறேன். மீதி தேவைப்படும் 35 ஆயிரம் ரூபாயை நண்பர்கள் தருகிறார்கள். இதைச் செய்வது என் கடமை. சேவையைப் பெற்றுக்கொள்வது இந்தப் பிள்ளைகளின் உரிமை!'' என்கிறார் மணிவண்ணன்.

கல் உடைப்பது, செங்கல் கால்வாய் கூலி வேலை, விவசாயக் கூலி வேலைகள், வேலூர் நகருக்கு உதிரி வேலைகளுக்குப் போவது... இவைதான் இந்தப் பகுதி ஏழைகளின் வாழ்வாதார வாய்ப்புகள். அதனாலேயே கல்விக்கான முக்கியத்துவம் குறைந்துபோகிறது. பள்ளியில் இருந்து இடைநிறுத்தப்படும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தப் பகுதியில் மிக அதிகம்.

''நானும் அப்படி ஒரு கஷ்டமான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன்தான். அடிப்படையில் மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் நாங்கள். என் பெரியப்பா கே.எஸ். ராஜுவுடன் சேர்த்து எல்லோரும் இந்தியா வந்தார்கள். பெங்களூரில் சில காலம் குடியிருந்துவிட்டு, பிறகு வேலூருக்கு வந்தோம். வேலூர் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அப்பா, அம்மா இருவரும் கூலி வேலை செய்தார்கள். அந்த வருமானமும் போதாதபோது பெரியப்பாதான் படிப்பதற்கு எனக்கு உதவி செய்தார். அவரது பேச்சும் ஆர்வமும் இளம் வயதிலேயே எனக் குள் சமூகப் பார்வையைக் கொண்டு வந்தது. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம் இங்கெல்லாம் படித்துவிட்டு, அமெரிக்காவில் இயங்கும் பன்னாட் டுப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புக் காகவும் வேலைக்காகவும் சென்றேன். அங்கு நேர்முகத் தேர்வில், 'படித்துவிட்டு என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று கேட்டபோது என்னையும் அறியாமல், 'என் சொந்தக் கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் நடத்துவேன்’ என்றேன். அப்போது வரை அப்படி ஓர் ஆசை அடிமனதில் இருந்தது எனக்கே தெரியாது.

தெரு விளக்கு

அதன் பிறகு, டெல்லி பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டு காலம் பணிபுரிந்தபோதும், சொந்த ஊரில் பள்ளி தொடங்கும் ஆசை மட்டும் விடவில்லை. 36 வயதை எட்டியபோது ஒரு முடிவு எடுத்தேன். '40 வயது வரையிலும் இந்த வேலையில் இருந்து கிடைக்கும் வருமானம் எனக்கு. அதன் பிறகு சமூகத்துக்குத் திருப்பிச் செய்யும் காலம்’ என்று முடிவெடுத்த பிறகு, பல விஷயங்கள் தெளிவாகத் துவங்கின. என் பிராவிடன்ட் ஃபண்ட் சேமிப்பை எடுத்து பள்ளிக்கூடத்துக்கான இந்த இடத்தை வாங்கினேன். இதற்கிடையில் எனக்கு சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு பணி மாறுதல் வந்தது. அதுவும் வசதியாகவே இருந்தது.

இந்தப் பகுதியின் சமூக யதார்த்தத்தை அறிந்துகொள்ளும் வகையில் முதலில் கல் உடைக்கும் குவாரிகளில் பத்து இடங்களில் மாலைப் பள்ளிகள் ஆரம்பித்து நடத்தினேன். நான்கு வருடங்கள்... அந்த மாலைப் பள்ளியில் கிடைத்த அனுபவம் ஒரு முழு நேரப் பள்ளிக்கான தேவைகள் என்னென்ன என்பதை உணர்த்தின. 2004-ல் ஒரே ஓர் ஆசிரியர், ஏழு மாணவர்களுடன் 'அமைதிப் பூங்கா ஆரம்பப் பள்ளி’ துவங்கியது. ஒரு கட்டடம்கூடக் கிடையாது. சமூக அக்கறைகொண்ட பல்வேறு நண்பர்களின் உதவியுடன் இந்த மண் கட்டடத்தைக் கட்டினோம்.

என்னைப் பொறுத்தவரை இந்தியா போன்ற ஒரு பின்தங்கிய நாட்டில் கல்வியால் மட்டுமே ஒட்டுமொத்தச் சமூக மாற்றம் சாத்தியம். பொருளாதார மற்றும் சாதிரீதியாகப் பின்தங்கிய ஒரு கிராமத்து விவசாயியின் மகன் கல்வி பெற்றால்... முதலில் தான் ஏன் ஏழையாக இருக்கிறோம் என்று சிந்திப்பான். பிறகு, தான் ஏழையாக இருப்பதால் தலித்தாக இல்லை, தலித்தாக இருப்பதால்தான் ஏழையாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வான். தன்னை ஒடுக்கும் சக்திகளின் பலம் என்ன என யோசிப்பான். அதில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகளைத் தேடுவான். தன் அருகில் இருப்பவனையும் கை தூக்கிவிடுவான். கல்வி என்ற சிறு வெளிச்சம் ஒன்றில் இருந்து ஒன்றாக அடுத்தடுத்த இருட்டுகளைத் துடைத்து எரியும். இதை நான் மனதார நம்புகிறேன்.

ஆனால், எதிர்பாராதவிதமாக நம் ஊர்க் கல்வி நிலையங்கள் சமூக யதார்த்தத்தில் இருந்து விலகி நிற்கின்றன. பாடப் புத்தகத்தைத் தாண்டிய உண்மை யான உலகம் மாணவர்களுக்குச் சொல்லித்தரப்படுவது இல்லை. ஒரு மாணவன் காணும் புத்தக உலகமும் நடைமுறை உலகமும் வேறுவேறாக இருந்தால், அவன் குழம்பிப்போக மாட்டானா? ஆகவே, கல்வியறிவுடன் சேர்த்து சமூகப் பொறுப்பு உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்காக ஆரம்பப் பள்ளி மாணவனிடம் அரசியல் பேச முடியாது, பேசவும் கூடாது. நாங்கள் அவர்களுக்கு வழக்கமான கல்விமுறையைத் தாண்டி வேறு சிலவற்றைக் கற்றுத்தருகிறோம். இந்தப் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் இருக்கின்றன. அவற்றின் பெயர்களை நகரத்து மாணவர்கள் மனப்பாடம் செய்யலாம். ஆனால், இங்குள்ள மாணவர்கள் அனுபவபூர்வமாக மரத்தின் பெயர், பயன்பாடு என அனைத்தையும் சொல்வார்கள்.

பள்ளிக்கு உள்ளேயே இயற்கை முறையில் விவசாயம் செய்கிறோம். கம்பு, சோளம், கேழ்வரகு, காய்கறிகள், கீரை வகைகள் எனப் பல வகைப் பயிர்களின் விவசாயம் நடக்கிறது. இவற்றையும் மாணவர்கள் பார்க்கிறார்கள். பயிர் வளர்வதை யும் அறுவடை செய்வதையும் கவனிக்கிறார்கள். இதுவும் கல்விதான். இயற்கையோடு இயைந்த கல்வி. பாடப் புத்தகத்தில் சொல்லித்தரப்படாத, மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்ட கல்வி. இந்தச் சூழலுக்குள் படிக்கும் மாணவர்கள் நாளை வேலைக்குச் செல்லும்போது கிரானைட் குவாரிகளின் பெயரால் நம் பூமி நாசமாக்கப்படுவதை அனுமதிக்க மாட்டார்கள். ரசாயன உரங்களைப் போட்டு நிலத்தை நஞ்சாக்குவதை ஏற்க மாட்டார்கள். இப்படிப்பட்ட அனுபவரீதியாக உணரத்தக்க சமூகக் கல்வி நம் மாணவர் களுக்கு அவசியம். முன்பு நம் பள்ளிகளில் சமூகக் கல்வி இருந்தது. இப்போது அதையும் நீக்கிவிட்டார்கள். கல்லூரி அளவில்தான் சமூகக் கல்வியை ஒரு பாடமாக வைத்துள்ளனர். 17 வயது வரை பள்ளியில் சமூகத்தைப் பற்றி எதுவுமே சொல்லித்தராமல் கல்லூரிக்குக் கொண்டுபோனால் அது மாணவர்களுக்கு அந்நியமாகத் தெரியாதா? பள்ளி அளவில் செக்ஸ் எஜுகேஷன் கொண்டுவர விரும்பும் நாட்டில், பள்ளிகளில் அவசியம் சமூகக் கல்வி சொல்லித் தரப்பட வேண்டும்!'' என உண்மைகளை உரக்கப் பேசுகிறார் மணிவண்ணன்.  

தெரு விளக்கு

பள்ளியில் படிப்பவர்களில் 60 சதவிகிதம் பேர் பெண் குழந்தைகள். முக்கால்வாசிப் பேர் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள். ''இந்தக் குழந்தைகள் இங்கு படிக்க வரவில்லை என்றால், பெற்றோருடன் கூலி வேலைக்குத்தான் சென்றாக வேண்டும். வேறு வழி இல்லை. இந்தப் பள்ளியை அடுத்தடுத்து 8-ம் வகுப்பு, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி என எடுத்துச் செல்ல ஆசை. அதுபோக இதே இடத்தில் சமூகக் கல்லூரி ஒன்றையும் துவங்குவதற்கான வேலைகளையும் செய்துவருகிறோம். என் சொந்தக் காசையும் நண்பர்களின் உதவியையும் நம்பித்தான் இதை நடத்துகிறோம். என்னைப் பொறுத்தவரை, வாழ்வில் ஓரளவுக்கு உயர்ந்த நிலைக்கு வந்த அனைவருக்கும் சமூகத்துக்குத் திருப்பிச் செலுத்தும் கடமை இருக்கிறது. அவரவரின் சொந்தக் கிராமங்களைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், அங்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாகக் காத்திருக்கின்றன!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு