Published:Updated:

மிஸ்டு கால்

பாரதி தம்பிஓவியங்கள் : பாலமுருகன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

முன்பு எல்லாம் அந்த நண்பர் எந்த வங்கியில் இருந்து கடன் வாங்கிக்கொள்ளச் சொல்லி போன் வந்தாலும், 'ரொம்ப நன்றிங்க... நேத்துதான் வேலையை ரிஸைன் பண்ணேன். செலவுக்கு என்ன பண்றதுனு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். கரெக்டாப் போன் பண்ணீங்க... சொல்லுங்க, எங்கே வந்து வாங்கிக்கணும்!’ என்றுதான் பேசத் துவங்குவார். வேலை டென்ஷனுக்கு இடையே அவருக்கு அது ஒரு ரிலாக்ஸ். அருகில் இருப்பவர்களுக்கும் அவர் கஸ்டமர் கேர் ஆட்களிடம்தான் பேசுகிறார் என்று புரிந்துவிடும் என்பதால், அவர்கள் சிரிப்பார்கள். அவரும் சிரித்துக்கொண்டே கலாய்த்துவிட்டு அழைப்பை கட் செய்வார். ஒரு நாள் அப்படிப் பேசிவிட்டு வைத்த உடனே வேறு ஒரு நம்பரில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. எடுத்தால் அதே கஸ்டமர் கேர் பெண். ''சார், நான் மாசம் நாலாயிரம் சம்பளத்துக்கு வேலை பார்க்குறேன். ஒரு நாளைக்கு இத்தனை நம்பருக்கு போன் பண்ணிப் பேசணும்னு டார்கெட். நம்பரும் அவங்களே கொடுக்குறாங்க. பேசறதுதான் சார் எங்க வேலை. பிடிக்கலைன்னா கட் பண்ணிடுங்க. வேலைக்குத் தொந்தரவுன்னு நினைச்சா, புகார் பண்ணுங்க. எங்களைக் கிண்டல் பண்ணா நாங்க என்ன சார் பண்ணுவோம்?'' என்றதும் அவருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இப்போதுஎல்லாம் கஸ்டமர் கேர் அழைப்புகளுக்கு, 'ஸாரி... வேண்டாங்க’ என்பது டன் நிறுத்திவிடுகிறார்.  

மிஸ்டு கால்

''என் பையன் ரிமோட்டை எடுத்து அவனா டி.வி. போடுறான்'', ''ஹாரன் சத்தத்தை வெச்சே அப்பா வண்டியைக் கண்டுபிடிச்சுடுறா என் பொண்ணு'' என்ற பெற்றோர்களின் பெருமிதப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது செல்போன். ''என் பையன் அவனாவே செல்போனை எடுத்து கேமராவுல போட்டோ எடுத்துடுறான்'' என்று சொல்லும்போதே அந்த அம்மாவுக்கு முகம் எல்லாம் சந்தோஷம். அவர், தன் கணவருக்கு மட்டும் ஒரு பாட்டு வைத்திருக்கிறார். அவர் போன் பண்ணினால் அதுதான் ஒலிக்கும். அந்தப் பாட்டு ஒலித்தாலே பையன் ''அப்பா... அப்பா...'' என்று குதூகலிக்கிறான். இன்னும் பல வீடுகளில் குழந்தைகள், செல்போனைக் கொடுத்தால்தான் அழுவதை நிறுத்துகின்றன. எல்லாம் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் கதைதான்!

ரு பெண்ணுக்கும் செல்போனுக்குமான உறவு, மிக அந்தரங்கமானது. கட்டுப்பாடுகள் நிறைந்த பெண்ணின் ரகசிய உலகத்தை செல்போன் மிக இலகுவாகத் திறந்துவைக்கிறது. 'இவர்கூடப் பேசாதே... அவர்கூடப் பேசாதே... மெதுவாப் பேசு... அக்கம்பக்கம் பார்த்துப் பேசு...’ எனப் பெண்ணைப் பேசாமல் இருக்கவைக்கத்தான் எத்தனை எத்தனை கட்டுப்பாடுகள்? அனைத்தையும் ஒரு விரல் சொடுக்கில் உடைத்துவிட்டது செல்போன். அந்தச் சின்னஞ் சிறிய கருவி, பெண்களின் உலகத்தில் நிகழ்த்தியிருக்கும் பாய்ச்சல் அசாத்தியமானது.

ன்னொரு வகையில் செல்போன் பெண்களுக்கு ஒரு பாதுகாவலனாகவும் இருக்கிறது. பேருந்தில், சாலைஓரங்களில் பேசிக்கொண்டே நடந்து செல்லும் ஏராளமான பெண்களைத் தினமும் பார்க்கிறோம். அவ்வப்போது கமென்ட்டும் அடிக்கிறோம். ஆனால், பெரும்பகுதி உண்மை என்ன தெரியுமா? ''ஹஸ்பெண்ட் வர்றதுக்காக பஸ் ஸ்டாப்ல பத்து நிமிஷம் வெய்ட் பண்றேன்னு வைங்க. அந்த நேரத்துக்குள்ள எத்தனை பேர், எத்தனை விதமாப் பார்க்குறாங்க தெரியுமா? அப்போ அந்தக் கொடுமையான பார்வைகளில் இருந்து தப்பிக்க, யார்கிட்டயாவது போன்ல பேசுறது பாதுகாப்பா உணரவைக்குது'' என்று சொல்லும்போது அந்தப் பெண்ணின் குரலில் அவ்வளவு அச்சம். 'பெண் என்றால் பேயிரங்கும் என்றதய்யா ஊரு, பெண்ணை ஒரு மனுஷியாக மதிச்சவங்க யாரு’ என்ற அறிவொளி இயக்கப் பாடல் நினைவுக்கு வந்தது.

மிஸ்டு கால்

டாஸ்மாக் பாரில் அமர்ந்து, முதல் ரவுண்டை முடித்தவுடன் அலைபேசி அடிக்கத் துவங்குகிறது. கலவையான கூச்சல், இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும் என்ற அவசரத்துடன் 'பாரை’ விட்டு வெளியேறியவுடன் அழைப்பின் ரிங்டோன் நின்றுவிடும். அழைத்த எண்ணை மீண்டும் தொடர்புகொள்ள முயற்சிக்கும்போது, 'எங்கேஜ்டு டோன்’ வரும். கடைக்கு வெளியே நானும், கடைக்கு உள்ளே என் மனமும் அலைபாயும்!

- ரவி மோகனா, ஈரோடு - 2.

 ல்யாணமாகி ஒரே மாதத்தில் கணவனைப் பொருளீட்ட வெளிநாடு அனுப்பிவைத்த மனைவியும், மகன் வெளி மாநிலத்தில் பணிபுரிய தனியாக வசிக்கும் தாய் ஒருவரும் எனது வீட்டின் அருகில் வசிக்கின்றனர். அந்த மனைவிக்குக் கணவனிடம் இருந்தோ, தாய்க்கு மகனிடம் இருந்தோ செல்லில் அழைப்பு வரும்போது அந்த செல்லே கணவனாகவும் மகனாகவும் மாறிவிடுவது எந்த அறிவியலாலும் விளக்க முடியாத விந்தை. அப்போது அவர்களின் கண்ணில் தெரியும் ஒரு துளிக் கண்ணீரில் தெரியும் ஏக்கம், தவிப்பு, பாசம், எதிர்பார்ப்பு எல்லாம் அற்புதம்!

- கே.ஆனந்தன், தருமபுரி.

மிஸ்டு கால்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு