Published:Updated:

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

பிரீமியம் ஸ்டோரி

பி.பாரத்குமார், பாண்டிச்சேரி.

 ''ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்தது... பிடிக்காதது?''

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

''பிடித்தது... பிடிவாதமான போர்க் குணம். பிடிக்காதது... புலிகள் எதிர்ப்பில் பிடிவாதம்!''

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

ரா.பிரபு, வந்தவாசி.

''நடிகை குஷ்பு, தி.மு.க-வில் முக்கிய இடம்பிடித்துவிட்டாரா?''

''அவருடைய ரசிகரான உங்களுக்குத்தான் தெரியும். எனக்கு எப்படித் தெரியும்?''  

உ.ரமேஷ், புதுக்கோட்டை

''அகவை 50... திருமணம் எப்போது?''

''கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து இதே கேள்வியைக் கேட்டுக் கொண்டு இருக்கும், என்னை ஈன்ற என் தாய்க்கே இன்னும் நான் விடை சொல்லவில்லையே.

1982-ல் மாநிலக் கல்லூரியில் எனது பட்ட வகுப்பை முடித்தபோது, முதுகலைப் பட்டம் முடித்தபோது எல்லாம் என் திருமணப் பேச்சைத் தொடங்கினார் அம்மா. அப்போது எல்லாம் நான் பிடிகொடுக்கவில்லை. 1983-ல் இருந்து தீவிர ஈழ ஆதரவாளராகக் களமாடி னேன். விடுதலைப் புலிகளின் மாணவர் இயக்கத்தோடு இணைந்து இயங்கியதில் குடும்ப வாழ்க்கைபற்றிய எண்ணங்களோ, கனவுகளோ எனக்குள் எழவே இல்லை. நான்கைந்து மாணவர்கள் கடல் வழியே ஈழத்துக்குச் செல்லவும் துணிந்தோம். அம்மா, அப்பா, உடன்பிறந்தோர், சொந்தம், பந்தம், பிறந்த ஊர் எதுவுமே நினைவில் இல்லை. ஈழத்துக்குச் செல்லும் அந்த முனைப்பில் தீவிரமாக இருந்தோம். ஆனாலும், அது நிறைவேறவில்லை.

1987-ல் தடயவியல் துறையில் வேலை கிடைத்தபோது, 'படிப்பும் முடிந்தது; வேலையும் கிடைத்துவிட்டது. இனி, சாக்குப்போக்கு சொல்லாதே, திருமணம் செய்’ என்று வற்புறுத்தினார் அம்மா. ஆனால், தலித் அரசியலும் ஈழ அரசியலும் என்னைக் குடும்பத்தில் இருந்து மேலும் மேலும் அந்நியப்படுத்தி எங்கோ இழுத்துச் சென்றது. எப்போதாவது, எங்காவது பொதுக்கூட்டத்தில் மக்களோடு மக்க ளாக நின்று அம்மாவும் அப்பாவும் என்னைத் தொலைவில் இருந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவதோடு சரி. 99-ல் தேர்தல் அரசியலுக்கு அடியெடுத்துவைத்தோம். நாடாளுமன்றத் தேர்தலில் மூப்பனாரோடு கூட்டணி. எனக்கே தெரியாமல் கட்சித் தோழர் ஒருவரின் முயற்சியோடு மூப்பனாரைச் சந்திக்க சென்னை வந்துவிட்டனர் அம்மாவும் அப்பாவும். உடன் நானும் சென்றேன். என் திருமணம் தொடர்பாக மூப்பனாரிடம் முறையிட்டனர். பின்னர் மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் சேது ராமன், பழ.நெடுமாறன், கலைஞர் என்று ஒவ்வொரு தலைவரிடமும் முறையிட்டனர். அப்பா அந்த ஏக்கத்தோடு 2010 ஜூலை 15-ல் காலமாகிவிட்டார். அம்மா அந்த ஏக்கத்தோடு காத்திருக்கிறார்.

##~##

மகனின் பதவி, அதிகாரம், புகழ் போன்ற எதையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத என் தாய், வேறு எதையுமே எதிர்பார்க்காத என் தாய் இந்த ஒரு கேள்விக்கு மட்டுமே விடையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். அம்மாவுக்கு என்ன விடை சொல்லப்போகிறேனோ... நெஞ்சின் ஆழத்தில் தீரா வலி மட்டும் தெரிகிறது; விடை தெரியவில்லை.''  

அ.நித்யா, வாலாஜா.

''ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், கருணாநிதிக்கு அடுத்த இலக்காக உங்களைக் குறிவைத்து வரும் நெகட்டிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள் கிறீர்கள்?''

''அதைவிடப் பன்மடங்கு அதிகமாக அதே வலைதளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் வந்து குவிகின்றன. அதிலிருந்து ஊக்கம் பெற்றுக்கொள்கிறேன்.''

வே.இளம்பரிதி, வீரப்பநாயக்கன்பட்டி.

''ஆசையாக சினிமாவில் நடித்தீர்கள். ஆனால், தொடர்ந்து திரையில் பார்க்க முடியவில்லையே... ஏன்?''

''நீங்கள் என்னைத் திரையில்தான் பார்க்க வேண்டுமா? உங்கள் தெருவில் பார்க்கலாம்; அழைத்தால், உங்கள் வீட்டிலேயும் பார்க்கலாம்.''

பா.ஹரிபிரசாத், கமலாபுரம்.

''ஆரம்பத்தில் உங்களுக்கு இருந்த நற்பெயர் தி.மு.க- வுடனான கூட்டணியால் கெட்டுவிட்டதாக ஒரு பேச்சு இருக்கிறது. தி.மு.க-விலும் உங்களுக்கான அங்கீகாரம் முழுதாக அளிக்கப்படவில்லை என்று உங்கள் கட்சியினரே புலம்புகிறார்கள். அப்படி இருந்தும் 'வான்டட்’ ஆக தி.மு.க. வண்டியிலேயே திரும்பத் திரும்ப ஏறுகிறீர்களே... ஏன்? கருணாநிதியின் கொள்கைகள் மீது இன்னமுமா உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது?''

''புலிகளுக்கும் சிறுத்தைகளுக்கும் தோட்டத்தில் இடம் இல்லை என்பதால்தான்.''

சி.சசி, வங்கனூர்.

''தமிழ்ப் பெயர்களைக் கட்சிக்காரர்களுக்கு வைத்தீர்கள். நல்ல விஷயம்தான். ஆனால், வெறும் பெயரில் மட்டும் தமிழ்ப் பெயர்கள் இருந்து பயன் இல்லையே?''

''தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக்கொள்வதால் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்துவிடும் என்று நாங்கள் நம்பவில்லை. ஆனால், அன்றைய அ.தி.மு.க. அரசின் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்ப்பதற்கும் மொழி, இனம் தொடர்பான விழிப்பு உணர்வை உருவாக்குவதற்கும்தான் தமிழ்ப் பெயர் ஏற்பு நடவடிக்கைகளில் தீவிரமாகக் களம் இறங்கினோம்.''

எஸ்.பாஸ்கரன், ஊத்துக்கோட்டை.

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

''வறிய சூழலில் வளர்ந்த உங்களை உங்கள் தந்தை மிகச் சிரமப்பட்டுப் படிக்கவைத்தார் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். உங்கள் பால்யம்குறித்துச் சொல்ல முடியுமா?''

''பதினொன்றாம் வகுப்பு முடிந்தவுடன் மேற்கொண்டு கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத பொருளாதார நெருக்கடி. 'படித்தது போதும்; இதற்கு மேல் வெளியூருக்கு எங்கும் அனுப்ப வேண்டாம்’ என்று மீண்டும் எனது தாயின் பாசக் குரல் தடுத்தது. எனினும், என்னை கல்லூரியில் படிக்கவைக்க வேண்டும் என்கிற வேட்கை அப்பாவுக்கு இருந்தது. அதனால், தனக்குத் தெரிந்த பண்ணையார் ஒருவரிடம் கடன் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் எனது தந்தையை வெகுவாகக் காயப்படுத்தி இருக்கிறது. இரவு வீடு திரும்பிய தந்தை அதைப் பற்றி என் தாயிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். 'இதுக்கு மேல படிச்சு உன் மகன் என்ன பண்ணப்போறான்? பெரிய படிப்பு படிச்சவங்களுக்கே வேலை கிடைக்கல; நம்ம பண்ணையில அவனை வேலைக்கு விடு; படிச்ச பையனா இருக்கிறதால கணக்கு வழக்கு எழுதுவான்’ என்று அந்தப் பண்ணையார் சொல்கிறார் என மிகுந்த வேதனையோடு அம்மாவிடம் அவர் சொன்னது என் நெஞ்சில் இன்னும் அப்படியே உள்ளது.

அதன் பிறகு, திருமணம்ஆகியிருந்த எனது அக்காவிடம் போய், காதில் கிடக்கும் நகையை வாங்கி வரச்சொல்லி என்னை அனுப்பிவைத்தார். அரை பவுன் மதிப்புள்ள அந்த நகையை நூறு ரூபாய்க்கு அடமானம்வைத்து, என்னை விருத்தாசலம் கல்லூரியில் கொண்டுபோய்ச் சேர்த்தார். இப்படி எத்தனையோ வறுமையின் வடுக்கள் என் வாழ்வில்.''

க.திவ்யா, கிருஷ்ணன்கோயில்.

'' 'அடங்க மறு! அத்துமீறு! திமிறி எழு! திருப்பி அடி!’ என்பது நீங்கள் தலித்களுக்குச் சொல்லித்தந்த தாரக மந்திரம். இன்னமும் அந்த வார்த்தைகள் உயிருடன் இருக்கின்றனவா?''

''சமூகத்தில் ஆதிக்கம், அடக்குமுறை, சுரண்டல் ஆகியவை இருக்கும் வரையில், இந்த முழக்கங்கள் உயிர்ப்புடனேயே இருக்கும்!''

சி.சந்துரு, நகரி.

''மேல்மட்டத்தில் உள்ள ராமதாஸும் நீங்களும் நட்பு பாராட்டுகிறீர்கள். ஆனால், கீழ்மட்டத்தில் உள்ள தொண்டர்களால் ஆதிக்க சாதி - தலித் மனநிலை யில் இருந்து விடுபட்டு இணைந்து வேலை செய்ய முடியுமா?''

'' 'அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி’ என்பது முதுமொழி. அதன்படி, தலைவர்கள் நல்வழி காட்டினால், களப் பணியாளர்களும் அதையே பின்பற்றுவார்கள். தலைவர்களே பகைமை யோடு மோதினால், தலைவர்களை நம்பிக் களத்தில் நிற்பவர் கள், அப்பாவி மக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். சமூக நல்லிணக்கத்தை விரும்பும் தலைவர்கள் கைகோத்துக் களமாடுவது அடித்தட்டு மக்களின் பாதுகாப்பை அடிப்படையாகக்கொண்டதே ஆகும்!''

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

வி.ராமச்சந்திரன், அண்ணாநகர்.

''தேர்தல் அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்காமல், பெரியார் பாணியில் விடுதலை அரசியல் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் இயக்கமாக மட்டும் விடுதலைச் சிறுத்தைகள் இருந்துஇருந்தால்... இத்தனை விமர்சனங்களைத் தவிர்த்திருக்கலாமே?''

''பொது வாழ்க்கைக்கு வராமலேயே இருந்திருந்தால்? கல்வி வாசனையே இல்லாமல், எங்கோ காடு மேடுகளில் திரிந்திருந்தால்..? ஏன், மனிதனாகவே பிறக்காமல் இருந்திருந்தால்..? பிரச்னையே இல்லாமல் இருந்திருக்கல£ம்!''

கே.ஆறுமுகம், கடலூர்.

''அம்பேத்கரை தமிழகச் சேரிகளுக்குக் கொண்டுசேர்த்த பெருமை யாரைச் சாரும்?''

''புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையே சாரும். அவருடைய உழைப்பும் தியாகமும்தான் அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கின்றன.''

எம்.தணிகாசலம், மயிலாப்பூர்.

''சமீபத்தில் உங்கள் பொன்விழாவையட்டிய கவியரங்கத்தைப் பார்க்கையில், ஏனோ தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நடக்கும் பாராட்டு விழாக்கள் நினைவில் மின்னி மறைந்தன.  புகழ்ச்சி உரைகளுக்கு தலித் தலைவர் களும் பலியாகிவிட்டார்களா?''

''உங்களைப் போன்றவர்களுக்கு கலைஞரின் தாக்கம் வெகுவாகவே பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதுகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற மாபெரும் தலைவர்களுக்கும் பிறந்த நாள் விழாக் கள் நடந்திருக்கின்றன. ஏன் அவர்கள் எல்லாம் உங்கள் நினைவுக்கு வரவில்லை?''

- இன்னும் பேசுவோம்...

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

அடுத்த வாரம்

''கருணாநிதியோ, ஜெயலலிதாவோ சொல்வதற்கு அப்படியே தலை அசைக்க ஒரு தனிக் கட்சி நடத்த வேண்டிய அவசியம் என்ன?''

'' 'வன்கொடுமை தடுப்புச் சட்டம் வட மாநிலங்களுக்குத்தான் பொருந்தும், தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தினைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்’ என்று கூறிய ராமதாஸுக்கு தாங்கள் அம்பேத்கர் விருது வழங்கிய காரணம் என்ன?''

'' 'அரசுத் துறையிலேயே வேலை பார்த்து மாதா மாதம் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்திருக்கலாம். இந்த அரசியலுக்கு ஏன் வந்தோம்’ என்று என்றைக்காவது எண்ணியது உண்டா?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு