Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ல மாதங்களுக்கு முன், ஸ்டாப் ஆன்லைன் பிரைவஸி ஆக்ட் (Stop Online Piracy Act), சுருக்கமாக, SOPA என்ற பெயரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை ஹாலிவுட் லாபி கொண்டுவர முயற்சித்ததும், அதற்கு டெக் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியதால், மசோதா சட்டமாகாமலேயே போனதையும் சொல்லியிருந்தேன். காட்டிய எதிர்ப்பில் மிகத் தீவிரமானது விக்கிப்பீடியாவின் எதிர்ப்பு.

இணையத்தை லேசுபாசாகப் பயன்படுத்துபவர்களுக்கும் பரிச்சயமானது விக்கிப்பீடியா. விக்கிமீடியா ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வ நிறுவனத்தால் நடத்தப்படும் இந்தத் தளம், இணையத்தின் 10 முக்கியத் தளங்களில் ஒன்று. 22 மில்லியன்களுக்கு மேற்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய இந்தத் தளத்தில், தகவல்களை எழுதுவது உங்களையும் என்னையும் போன்ற இணையப் பயனீட்டாளர்கள்தான். பானி பூரியில் இருந்து பானிபட் யுத்தம் வரை விக்கிப்பீடியாவில் இல்லாத சமாசாரம் கிடையாது என்ற நிலை வந்துவிட்டது.  

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

'அப்படி யார் வேண்டுமானாலும் எழுதினால், அதை எப்படி நம்புவது? நான் எழுதியதை இன்னொருவர் அழித்து தவறான தகவல்களை இணைத்துவிட்டால்?’ - இப்படிக் கேள்விகள் எழலாம். விக்கிப்பீடியா கட்டப்பட்டு இருக்கும்தொழில் நுட்பம் செம ஸ்மார்ட். வம்புக்கென நீங்கள் கட்டுரைகளில் இருக்கும் தகவல்களை மாற்றி னால், உங்கள் பயனீட்டு நடவடிக்கைகளைக்கொண்டு நீங்கள் மாற்றியிருக்கும் தகவல்கள் நம்பகமானதுதானா என்பதைக் கண்டறிய முடியும். அதோடு, கட்டுரையை எழுதியவர்களுக்கும் உங்களது மாற்றங்கள் தெரியவரும் என்பதால், அவர்களால் எளிதாக இதைத் திருத்திவிட முடியும். 'கட்டுரைகளில் இருக்கும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல’ என்று விக்கிப்பீடியா பெயரளவில் சொல்லிக்கொண்டாலும், விக்கிப்பீடியாவில் இருக்கும் தகவல்கள், தகவல் களஞ்சியத் தொகுப்புகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

விக்கிப்பீடியா பாரம்பரியமாகத் தகவல் களஞ்சியம் வெளியிடும் பிரசுர வணிகத்துக்கே வேட்டு வைத்துவிட்டது என்று தாராளமாகச் சொல்லலாம். ஒரு நேரடி உதாரணம், 1768-ல் இருந்து பல நூற்றாண்டுகளாகப் பிரசுரமாகிவரும் என்சைக்ளோபீடியா புத்தகங்கள் இனி அச்சு வடிவில் வராது என்று இந்த வருடம் விடுத்திருக்கும் அறிவிப்பு.  

விக்கிப்பீடியா காட்டிய கடுமையான எதிர்ப்புக்கு வருவோம்.SOPA மசோதாவுக்கு எதிராக 24 மணி நேரம் இருட்டடிப்புச் செய்யலாம் என்று பரிந்துரைத்தது மட்டும் அல்லாமல், விக்கிப்பீடியா தளத்தையே 24 மணி நேரம் கறுப்பாக ஆக்கியது விக்கிமீடியா நிறுவனம். கிட்டத்தட்ட 400 மில்லியன் பயனீட்டாளர்கள் விநாடி ஒன்றுக்கு 60 ஆயிரம் பக்கங்கள் என விக்கிப்பீடியா கட்டுரைகளைப் படிப்பதால், 24 மணி நேர இருட்டடிப்பு பலமான தாக்கத்தைத் தந்தது. சோபா மசோதா மடிந்துபோனதற்கு முக்கியக் காரணம் விக்கிப்பீடியா எனப் புகழ்ந்தது மீடியா.

சரி, இப்போது என்ன நடக்கிறது?

விக்கிப்பீடியாவின் நிறுவனரான ஜிம்மி வேல்ஸ், இணையம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கைகொண்டவர். உதாரணத்துக்கு, திறந்தவெளிப் புத்தகமாக இருக்கும் விக்கிப்பீடியா தளத்தை இயக்கும் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்கிறார் ஜிம்மி. விக்கிப்பீடியாவுக்குப் போட்டியாக நீங்கள் ஒரு தளத்தை உருவாக்க வேண்டுமானால், மேற்படி மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்படிப்பட்ட நபர் ஆக்ரோஷமாக அமெரிக்க அரசின் மசோதாவை எதிர்த்ததில் ஆச்சர்யம் இல்லை. இந்த வாரம் அவரது நுண்ணாய்வில் புலப்பட்டு இருப்பது ஸ்னூப்பர் சார்டர் (snooper charter) என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசு சத்தம் இல்லாமல் கொண்டுவர முயலும் திட்டம். இந்தத் திட்டத்தின்படி, இணைய இணைப்பு நிறுவனங்களும் அலைபேசி சேவை நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் பயனீட்டு விவரங்களையும் சேமித்துவைக்க வேண்டும். பிரிட்டிஷ் குடிமக்கள் ஒவ்வொருவரின் இமெயில், சாட், குறுஞ்செய்தி உள்ளிட்ட ஒவ்வொரு தகவலும் 12 மாதங்களுக்குச் சேமித்து வைக்கப்பட வேண்டும் என்று சொல்லும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் முயன்றால், பிரிட்டனில் இருந்து எங்களது தளத்துக்கு வரும் ஒவ்வொருவரது தகவல் தொடர்பையும் மறையாக்கம் (encryption)  செய்துவிடுவோம் என்கிறார் ஜிம்மி. கிரெடிட் கார்டு போன்ற பாதுகாப்பான தகவல்களைக் கொடுக்கும் வலைப் பக்கங்களில் மட்டுமே பயன்படுத்தப் படும் மறையாக்கல் தொழில்நுட்பம், உங்களுக்கும் வலைதளத்துக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றத்தை மற்றவர்கள் திருடிவிடாத வண்ணம் பாதுகாக்கிறது. இதே தொழில்நுட்பத்தை பிரிட்டன் பயனீட்டாளர்களுக்கு மட்டும் கொடுத்து, அவர்கள் என்ன கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதை மறைத்துவிட முடியும். பிரிட்டனின் பிரபல 'கார்டியன்’ இதழுக்குக் கொடுத்திருக்கும் பேட்டியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை 'டெக் அறிவில்லாத முட்டாள்’ என்றெல்லாம் கடுமையாக விமரிசித்திருக்கும் ஜிம்மிக் குப் பதிவுலகம் எங்கும் பலரும் போடும் 'ஜே’ சத்தம்... அபாரம்!

LOG OFF

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு