Published:Updated:

ஆறாம் திணை!

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை!

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
##~##

ழங்கள் தரும் பரவசமான பலன்கள்பற்றிப் பேசாத உணவியலாளர்கள் இல்லை. ஒரு தாவரத்தின் ஒட்டுமொத்த உழைப்பின் சாரம் கனிகளில் தான் பெரும்பாலும் தேக்கி வைக்கப்படும். தனது அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக விருத்திசெய்ய தாவரம், தான் உருவாக்கும் விதைக்கு அளிக்கும் ஊட்டத்தைத்தான் பழங்களின் வாயிலாக நாமும் பகிர்ந்துகொள்கிறோம்.

 ஆனால், எந்தப் பழம் சாப்பிடலாம்? எப்போது சாப்பிடலாம்? எப்படிச் சாப்பிடலாம்? இது சிக்கலான கேள்வி. ஏனென்றால், எது நல்ல பழம் என்று உங்களுக்குப் பரிந்துரைப்பதற்குப் பின் பல்லாயிரம் கோடிச் சந்தை இருக்கிறது. பல நாடுகளின் வியாபாரக் கனவுகள், திட்டங்கள் இருக்கின்றன. எனக்கு அப்படி எல்லாம் திட்டங் கள் ஏதும் இல்லை என்பதால், உண்மையை நேர்மையாகச் சொல்கிறேன்.

தங்கம் விலை ஏறிக்கொண்டேபோவது செய்தியாகிறது. ஆனால், ஆப்பிள் விலை ஏறிக்கொண்டேபோவதை

ஆறாம் திணை!

நீங்கள் கவனிக்கிறீர்களா? கடந்த வார நிலவரம்... பழ விற்பனை அங்காடிகளில் பளபளக்கும் ஆப்பிள் விலை ஒரு கிலோ 200 ரூபாய். ஆனால், பழ வண்டிக்காரரிடம் பூவன் வாழைப் பழம் ஒரு ரூபாய்க்கும் கற்பூரவல்லி வாழைப் பழம் இரண்டு ரூபாய்க்கும் கிடைக்கிறது. இந்த ஆப்பிள் விலை மட்டும் பறக்கிறதே... எப்படி? அமெரிக்க ஆப்பிள், சீன ஆப்பிள் என்று விதவிதமாக வந்து இறங்குகின்றனவே எப்படி? எல்லாம் சந்தை உருவாக்கி இருக்கும் மாயை.

ஆப்பிள் சத்துள்ள பழம்தான். ஆனால், அதைவிடவும் பல மடங்கு சத்துள்ள பழங்கள் நம்முடைய நாட்டுப் பழங்கள் (பார்க்க: ஒப்பீட்டு அட்டவணை). தவிர, உணவியல் தொடர்பான ஆராய்ச்சிகள் திரும்பத் திரும்பச் சொல்லும் விஷயம்... நீங்கள் எந்த மண்ணில் வாழ்கிறீர்களோ, அந்த மண்ணில் விளையும் காய், கனிகளே உங்கள் உடலுக்கு மிகச் சிறந்த பலன்களைத் தருபவை என்பது. சரி, நாட்டுப் பழங்களில் எங்கும் கிடைக்கும் தலையாய ஐந்து பழங்களைப் பார்ப்போமா?

மலிவு விலை வாழையில் இருந்தே தொடங்கலாம். 'வாழைப் பழமா? ஐயையோ! வெயிட் போட்டுடும். அப்புறம் என் ஜீரோ சைஸ் என்னாவது?’ என்று பதறுவோருக்கு ஒரு செய்தி. சின்ன வாழைப் பழம் வெறும் 60-80 கலோரிதான் தரும். ஆனால், கூடவே, எலும்புக்கு கால்சியம், இதயத்துக்கு பொட்டாசியம், மலமிளக்க நார்ச்சத்து, மனம் களிக்க ஹார்மோன் ஊட்டம், உடனடியாக உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது குளுக்கோஸ் தரும் ஹைகிளைசிமிக் என அது தரும் பலன்களில் பல இங்கிலீஷ் கனிகளில் கிடையாது.

அதுவும் வாழையின் ஒவ்வொரு ரகத்துக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. பாலூட்டியும் போதாதபோது, திடீர் திட உணவுக்குத் திரும்பும் பச்சிளம் குழந்தைக்கு நாகர்கோவில் மட்டி அல்லது கூழாஞ்செண்டு ரகம் சிறந்தது. நடுத்தர வயதுக்காரர்களுக்கு, நார் நிறைய உள்ள திருநெல்வேலி நாட்டு வாழைப் பழம் சிறந்தது. மெலிந்து நோஞ்சானாக உள்ள குழந்தை எடை அதிகரிக்க வேண்டுமானால், நேந்திரன் வாழைப்பழம் சிறந்தது. மூட்டெல்லாம் வலிக்கிறது; குறிப்பாக குதிகாலில் வலிக்கிறது என்போருக்கு செவ்வாழைப் பழம் சிறந்தது. இப்படி குன்னூர் மலைப்பழம், கிருஷ்ணகிரி ஏலக்கி என இதன் ரகங்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ள தனிச் சிறப்புகளைப் பட்டியலிடலாம். அதிலும் இந்த மொந்தன் பழம் இருக்கிறதே... அது தரும் குளுமைக்கு ஈடு இணையே இல்லை. தினமும் ஒரு மொந்தன் பழத்தைக் கனியவிட்டுச் சாப்பிட்டால், பல நோய்கள் உங்கள் பக்கம் தலை வைத்தும் படுக்காது. குறிப்பாக, மூல நோய். ஆனால், அதன் முரட்டுத் தோலை உறித்துச் சாப்பிட அலுத்துக்கொண்டு, உரிக்க ஏதுவாக மஞ்சளிலும் சேர்த்தி இல்லாமல், பச்சையிலும் சேர்த்தி இல்லாமல் மேக்கப் போட்டு வந்திருக்கும் ஹைப்ரீட் பெங்களூரு வாழையைச் சாப்பிடுகிறோம். இனி, காய்கறிக் கடைப் பக்கம் போனால், வறுக்க வாங்கும் பெரிய வாழைக்காயைப் பழுக்கவைத்துச் சாப்பிடுங்கள். மொந்தன் அதுதான் ஐயா!

ஆறாம் திணை!

ஒருகாலத்தில், 'கூறு போட்டு வித்துக்கோ; அல்லது கூவிக் கூவி வித்துக்கோ’ என்று ஒதுக்கப்பட்ட பழங்களுள் ஒன்று கொய்யா. ஆனால், இன்று உலகம் எங்கும் சிவப்புக் கொய்யாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறார்கள். இந்தியா வில் கிடைக்கும் பழங்களிலேயே அற்புதமானது என்று கொய்யாவைச் சுட்டிக் காட்டுகிறார்கள் இந்திய உணவியல் கழக விஞ்ஞானிகள். ஆமாம், ஆப்பிளையும் கொய்யா தோற்கடித்துவிட்டது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள், உயிர்ச் சத்து, நார்ச் சத்து, இன்னும் பல கனிமச் சத்துகள் எனக் கொய்யாவின் மெய்யான விஷயங்களில் உணவு உலகம் அசந்துபோயிருக்கிறது.

ஆறாம் திணை!

எய்ட்ஸ் நோயாளிகளுக்கே ஊட்டம் கொடுக்க, நோயை எதிர்த்து அவர்கள் போராடச் சிறந்த பழமாக எதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் தெரியுமா? நெல்லிக்காய்.

பேராசிரியர் தெய்வநாயகம் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், 'நெல்லி லேகியத்தை வைத்து மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வுகள் நல்ல ஊக்கம் அளிக்கின்றன!' என்கின்றனர்.

பழங்களின் ராணி என்று மாதுளையைச் சொல்வார்கள். புற்றைத் தடுக்கும் ஆற்றலும் ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றலும் மாதுளைக்கு உண்டு. உடனே, பளபளப்பான ஆப்கன் மாதுளையை மனக் கண்ணில் கொண்டுவராதீர்கள். புளி மாதுளை, நாட்டு மாதுளை என்று கேட்டு வாங்குங்கள்.

நம் மண்ணில் பிறந்த இன்னோர் அற்புதப் பழம் எலுமிச்சை. வைட்டமின் சி சத்தும் கனிமங்களும் நிறைந்த இந்தப் பழம் உடலின் பித்தத்தைத் தணிக்கக்கூடியது என்று தமிழ் மருத்துவம் நெடுங்காலமாகக் கொண்டாடுகிறது. சாதாரணத் தலைச்சுற்றல், கிறுகிறுப்புப் பிரச்னை முதல் மனப்பதற்றம் / பிறழ்வு வரையிலான பல பித்த நோய்களுக்கு எலுமிச்சை நல்ல மருந்து.

ஆறாம் திணை!

மா, பலா, வாழை, நாவல், நெல்லி, இலந்தை இவை மட்டும்தான் நம் அன்றைய கனி ரகங்கள் என்று நினைத்திருக்கிறோம். அப்படி அல்ல. மணத் தக்காளிப் பழம், கோவைப் பழம், தூதுவளைப் பழம் என்று ஏராளமான பழங்கள் நம்மிடம் உண்டு. இந்தப் பழங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி வரலாறும் ஏராளமான மருத்துவக் குணங்களும் உண்டு. மெழுகு பூசப்பட்ட ஆப்பிள், பூச்சிக்கொல்லிகளில் நனைக்கப்பட்ட திராட்சை என்று வந்தேறிகள் விட்டுச்சென்ற மாயையில் இருந்து வெளியே வந்தால்தான், அவை எல்லாம் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.

- பரிமாறுவேன்...