Published:Updated:

முகம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் (பின்னணிப் பாடகர்)நா.கதிர்வேலன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'பாடும் நிலா பாலு’... தலைமுறைகள் தாண்டி ரசனை பரப்புபவரின் பெர்சனல் பக்கங்களில் இருந்து...

• புத்தகங்கள் படிக்காமல் ஒரு நாளும் எஸ்.பி.பி-க்கு நிறைவடையாது. வெளியூருக்குச் சென்றால் புத்தகக் கடை விசிட் தவறவே தவறாது.

• புதிது புதிதாக செல்போன்களை மாற்றிக்கொண்டே இருப்பார். நவீன செல்போன்கள், அவற்றின் வசதிகள் குறித்து நண்பர்கள் இவரிடம்தான் விசாரித்து அறிவார் கள்.

• ''என்னைப் பார்த்தா நிறையச் சாப்பிடுற ஆள் மாதிரி இருக்கும். ஆனா, அஞ்சு நிமிஷத்துக்கு மேல நான் சாப்பிட மாட்டேன்!'' என்பார். உண்மைதான். புதிதாக அவருடன் உணவு அருந்த அமரும் நபர் முதல் ரவுண்ட் முடிப்பதற்குள், எஸ்.பி.பி. சாப்பிட்டு முடித்து இருப்பார். அவ்வளவு கொஞ்சம்தான் சாப்பிடுவார்.

முகம்

சினிமா பார்ப்பது அரிது. சமீபத்தில் இவர் விரும்பிப் பார்த்த படம் 'நான் ஈ’. ''இப்படி எல்லாம்கூடப் படம் எடுக்க முடியுமா என்ன?'' என்று நண்பர்களிடம் வியந்திருக்கிறார்.

• வருடத்தில் பல மாதங்கள் வெளிநாடுகளில்தான் கழியும். பயணக் குறிப்புகள் நிரம்பி 10 பாஸ்போர்ட் புத்தகங்கள் மாற்றிவிட்டார். அநேகமாக உலகில் விமான நிலையங்கள் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் சென்று வந்திருப்பார். சமயங்களில் குடும்பத்தினருக்கே அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தெரியா தாம்.

• மனைவி சாவித்திரியைவிட எஸ்.பி.பி-யுடன் அதிக நேரம் கழித்தது அவரது பள்ளித் தோழரான விட்டல். 43 ஆண்டுகளாக உதவியாளர், நண்பர், மக்கள் தொடர்பாளர் எனச் சகல விதங்களிலும் எஸ்.பி.பி-யின் நிழலாக உலா வந்த விட்டல், இப்போது உடல் நலிவுற்று ஓய்வில் இருக்கிறார். விட்டலை எஸ்.பி.பி-யின் மனசாட்சி என்பார்கள்.

• ஜூன் 4 பிறந்த நாள். முன்பெல்லாம் பெரும் கொண்டாட்டமாக நடக்கும். விருந்தினர்கள் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த 10 வருடங்களாக ஏனோ பிறந்த நாளைக் கொண்டாடுவதே இல்லை.

• தீவிர ஆன்மிகவாதி. கொல்லூர் மூகாம்பிகை, திருப்பதி இரண்டு இடங்களுக்கும் அடிக்கடி செல்வார். கடவுள் தரிசனத்துக்கு நேரம், காலம் பார்க்க மாட்டார். நினைத்த மாத்திரத்தில் காரிலேயே நெடும் பயணம் மேற்கொள்வார்.

• 43,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். கணக்கில் வராத பாடல்கள் தனி. 'எவ்வளவு பெரிய சாதனை!’ என நேரில் யாரும் வியந்தால், சின்னப் புன்னகை மட்டுமே பதில்.

• சொந்த ஊர் தெலுங்கு தேசம் என்பார்கள். ஆனால், திருவள்ளூர் மாவட்டம், நகரிக்கு அருகில் இருக்கும் கோனேட்டம்பேட்டாதான் இவருடைய பூர்வீகம்.

• ஒரு சமயம் விரும்பி விரும்பி நிறையப் படங்களில் நடித்தார். இப்போது நடிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. மிகவும் தேர்ந்தெடுத்துத்தான் நடிக்கிறார்.

• மிக சமீபத்தில் உடல் பருமன் குறைப்புச் சிகிச்சை செய்துகொண்டார். கணிசமான எடை குறைந்த பிறகு, இப்போது லாகவமாக நடமாடுகிறார்.

• நண்பர்களின் பரிசுகளுக்கு உச்சபட்ச மரியாதை கொடுப்பார். விருந்தினர்களிடம் வீட்டில் அடுக்கப்பட்டு இருக்கும் பொருட்களை, 'இதை இவர் கொடுத்தார்’ எனப் பெருமையுடன் சொல்லி நினைவுகூர்வார்.

• ரஜினியும் கமலும் இவருடைய நெருங்கிய நண்பர்கள். சந்தடி இல்லாமல் அடிக்கடி சந்தித்து நீண்ட நேரம் அளவளாவுவது உண்டு.

• வெளியிடங்களில் குழந்தைகள் பாடச் சொல்லிக் கேட்டால் மட்டும் நாலு வரி பாடுவார். அதுவும்கூட குழந்தைகளின் சந்தோஷத்துக்காகவே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு