Published:Updated:

விவாகரத்தை நோக்கி... சார்லஸ் டயானா

விவாகரத்தை நோக்கி... சார்லஸ் டயானா

விவாகரத்தை நோக்கி... சார்லஸ் டயானா
##~##

லகத்திலேயே மக்களை மிகவும் கவர்ந்த ஒரு ராஜ குடும்பம், பிரிட்டிஷ் அரச குடும்பம். அமைதியான அந்த அரச குடும்பத்திலும் சில விரிசல்கள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொஞ்ச நாட்களுக்கு முன்பு பிரிட்டிஷ் அரண்மனையில் இருந்து அதிரவைக்கும் ஒரு செய்தியை எலிசபெத் மகாராணி அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இரண்டாவது மகன் இளவரசர் ஆண்ட்ரூ - மருமகள் சாரா ஃபெர்குஸன் இருவருக்கும் இடையே இருந்த தாம்பத்ய உறவு முறிந்து, விவாகரத்து ஆகிறது என்கிற செய்தி அது.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் விவாகரத்து என்பது புதிய விஷயம் அல்ல. மகாராணியின் மகள் இளவரசி ஆன் - (இளவரசர்கள் சார்லஸுக்கும் ஆண்ட்ரூவுக்கும் நடுவில் பிறந்தவர்) காப்டன் மார்க் பிலிப்ஸ் என்பவரை மணந்துகொண்டார். இளவரசி ஆன் பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் கணவர் மீது ஏதாவது குற்றம் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார். மார்க் பிலிப்ஸோ சந்தேகப் பேர்வழி. எதிரும் புதிருமாக இருந்த இவர்களின் மண முறிவை யாராலும் தடுக்க முடியவில்லை.

விவாகரத்தை நோக்கி... சார்லஸ் டயானா

அரண்மனை வட்டாரத்திலேயே அறிவுஜீவி, சுற்றுச்சூழல் ஆர்வலர் என்றெல்லாம் கருதப்பட்ட இளவரசர் சார்லஸ், திருமணம் செய்துகொள்வாரா என்பதே ஆரம்பத்தில் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால், 81-ம் ஆண்டு அனைவரும் அதிசயப்படும்படியான அறிவிப்பு - அரண்மனையில் இருந்து. 'இளவரசர் சார்லஸ், டயானா ஸ்பென்சர் என்ற அழகிய இளம்பெண்ணைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்’ என்ற செய்தி டயானா வின் வண்ணப் படங்களுடன் பத்திரிகைகளில் வெளியானது. ஹேர் ஸ்டைலில் இருந்து காலுக்கு அணியும் ஷூ வரை, டயானா என்ன அணிகிறாரோ அதுவே அப்போதைய ஃபேஷன் என்கிற அளவுக்கு டயானா மோகம் ஃபேஷன் உலகில் புகுந்து கலக்கியது. கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே 'உலகம் முழுவதிலும் பத்திரிகைகளில் அதிகம் இடம்பெற்ற ஒரே பெர்சனாலிட்டி’ என்ற சாதனையை டயானா தட்டிக்கொண்டுபோனார். 'சார்லஸுக்கு மிகவும் பொருத்தமான ஜோடி’ என்று ஏகமனதாக டயானா ஏற்றுக்கொள்ளப் பட்டார்.

அழகாக அலங்காரம் செய்துகொள்வது - கவர்ச்சியாக டிரெஸ் அணிந்துகொள்வது என எதையுமே ஒரு டேஸ்ட்டோடு செய்த மருமகளைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போனார் மகாராணி. மாமியாரை மகிழ்விக்கும் வகையில், இரண்டு பேரன்களைப் பெற்று அவர் கையில் தந்தார் டயானா.

வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது தங்களுடைய மகன் வில்லியம்ஸையும் உடன் அழைத்துச் சென்றனர் சார்லஸ் - டயானா தம்பதி. 'என் மகன் வளர்ச்சியை எப்போதும் நான் கூடவே இருந்து ரசிக்க விரும்புகிறேன்’ என்று ஒரு நிருபரிடம் கூறினார் டயானா. இதற்கேற்ற மாதிரி, குட்டி இளவரசர் வில்லியம்ஸ் ஆஸ்திரேலியா வில் முதன்முதலாகத் தளிர் நடை நடந்து அம்மாவைச் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

இப்போது சார்லஸ் - டயானா 'கருத்து வேறுபாடு - மண முறிவு’ என்ற கடுமையான மேகமூட்டம்தான் பக்கிங்ஹாம் அரண்மனைப் பரபரப்பு!

உலகமே கண்டு பெருமைப்படும்படியான, பொறாமைப்படும்படியான ஜோடியாகப் போற்றப்பட்ட சார்லஸ் - டயானா இல்லறத்தின் இடையில் சின்ன குறுக்கீடாக கமில்லா பார்க்கர் பௌல்ஸ் என்ற பணக்கார நண்பி நுழைந்தார். 'கமில்லாவுடன் சார்லஸ் நெருங்கிப் பழகுகிறார். பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளின்போது கமில்லா பார்க்கருடன் சார்லஸ் காட்சியளித்தார். இத்துடன், லேடி ட்ரியான் என்ற பெண்ணுடனும் சார்லஸ் நெருங்கிப் பழகுகிறார்...’ என்ற தகவல்கள் பரவின. இந்த இரண்டு தகவல்களையும் கேள்விப்பட்ட மகாராணி மிகவும் அப்செட் ஆனதாக செய்தி வெளியே வந்தது.

விவாகரத்தை நோக்கி... சார்லஸ் டயானா

''டயானா மாதிரி கமில்லா பார்க்கரும் பார்ட்டிகளின்போது கலகலப்பாகப் பழகுவார்... கமில்லாவுக்கு மீன் பிடிப்பது என்றால் மிகவும் இஷ்டமான ஹாபி. வேட்டையாடுவது, சுடுவது எல்லாமே பிடிக்கும். இந்தக் குணங்கள் எல்லாமே சார்லஸுக்குப் பிடித்த விஷயங்கள். மாறாக, சார்லஸுக்குப் பிடித்த எதிலும் அக்கறை காட்டுவது இல்லை டயானா. நாள் பூரா டி.வி. பெட்டியின் முன் உட்கார்ந்து நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுதான் டயானாவின் பொழுதுபோக்கே!'' என இளவரசருக்கு ஆதரவாகச் சிலர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

''டயானா செக்ஸ் விஷயத்தில் கில்லாடி. ஆனால், இளவரசர்? அவருக்கு 44 வயதாகிறது. தலையில் பின்னால் லேசாக வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டது. அதுவும் அல்லாமல், அரண்மனையில் அப்பா பிலிப்ஸோடு மோதல்; அம்மாவோடு சண்டை, மனைவி டயானாவைப் பார்ப்பதே கிடையாது. இவற்றுக்கெல்லாமே கமில்லா பார்க்கர் இளவரசரிடம் கொண்டிருக்கிற நெருங்கிய நட்புதான் காரணம்'' என்று சிலர் பகிரங்கமாகவே அரண்மனை விவகாரங்களை அலச ஆரம்பித்தனர்.

''அண்மையில், கோல்ஃப் மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்த வில்லியம்ஸ் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்ட... டயானா தன் மகனைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி, டாக்டரிடம் காட்டிக் கட்டுப்போட்டுப் பதற்றத்துடன் இருந்தபோது, சார்லஸ் ஜாலியாக ஒரு நடன நிகழ்ச்சி யைக் கண்டுகளித்துக்கொண்டு இருந்தார். இதுதான் ஒரு தந்தைக்கு லட்சணமா..?'' என்று டயானாவுக்குப் பரிந்து பேசுபவர்களும் உண்டு.

இந்த நிலையில்தான், ஆண்ட்ரூ மார்ட்டன் என்பவர் எழுதி 'டயானா - ஹெர் ட்ரூ ஸ்டோரி’ (Diana-Her-True Story) என்ற ஒரு புத்தகம் அண்மையில் வெளியாகி பக்கிங்ஹாம் அரண்மனையில் பயங்கர சலசலப்பை ஏற்படுத்தியது.

''சார்லஸ் - டயானா இல்லற வாழ்க்கை குறித்து அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சில சம்பவங்கள் முழுக்க முழுக்க சார்லஸ் மீதே குற்றம்சாட்டுவதுபோல அமைந்திருக்கின்றன. அது தவறு'' என்பது அரச குடும்பத்துடன் நெருங்கியவர்களின் கருத்து.

திருமணம் ஆகி மூன்று மாதக் கருவைச் சுமக்கும்போதே டயானாவுக்குக் கசப்பான அனுபவங்கள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன. அப்போதே தன் கணவருடன் கமில்லா பார்க்கர் நெருங்கிப் பழகியதைப் பார்த்து விக்கித்துப்போயிருக்கிறார் டயானா.

''ஒரு நிமிஷம் பார்த்தால் நான் எதுவுமே இல்லாத ஜடம் மாதிரி இருப்பேன்... அடுத்த நிமிஷமே நான் வேல்ஸ் இளவரசி, தாய், பத்திரிகைகளுக்குச் சிரித்தபடி போஸ் கொடுக்கும் கவர்ச்சிப் பொம்மை, அரச குடும்பத்தின் பிரதிநிதி எனப் பல்வேறு பாத்திரங்கள்... எல்லாவற்றையும் நான் ஒருத்தியே ஏற்றுச் செயல்படுவது என்பது இயலாத காரியமாக எனக்குப்பட்டது'' என்று டயானா கூறுவாராம்.

இந்தக் கடினமான அரச வாழ்க்கையில் இருந்து மீள சார்லஸின் உதவி நாடி டயானா கெஞ்சியதும் உண்டு. சண்டையும் போட்டது உண்டு. ஆனால், இதற்கெல்லாம் சார்லஸ் அசைந்து கொடுக்கவே இல்லை என்பதுதான் டயானாவின் வேதனை.

82-ம் ஆண்டு ஜனவரி மாதம், அரச குடும்பத்தோடு இளவரசியாக இணைந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது.

''டயானா மருமகளாக வர நிச்சயிக்கப்பட்ட தினத்தில் இருந்தே பக்கிங்ஹாம் அரண்மனையில் வசித்த மற்றவர்களுக்கு இருந்த புகழ், கவர்ச்சி, செல்வாக்கு எல்லாமே ஒட்டுமொத்தமாக டயானாவின் பக்கம் வந்து குவிந்தன. எங்கே போனாலும் டயானாவைக் காண நெருங்கி வந்து அலைமோதிய கூட்டம், மலர்ச்செண்டுகள் மற்றும் பரிசுகள் அளித்தல் என டயானாவின் செல்வாக்கு, புகழ் ஓங்குவதுகுறித்து மற்றவர்களுக்கு உள்ளூரப் புழுக்கமும் பொறாமையும் ஏற்பட்டது உண்மை'' என்கிறார் லண்டன் பத்திரிகை நிருபர் ஒருவர்.

விவாகரத்தை நோக்கி... சார்லஸ் டயானா

ஆனால், டயானா இந்தப் புகழ்ச்சியினால் கர்வம் அடைந்துவிடவில்லை. ''பெரிய கூட்டத்தைப் பார்க்கும்போது எனக்கு நடுக்கமாகவே இருக்கிறது. இவர்களைச் சந்திப்பதற்குத் தேவையான சக்தி என்னிடம் இல்லையோ என்று மிகவும் நெர்வஸாகிவிடுகிறேன்!'' என டயானா, சார்லஸிடம் கூறி வருத்தப்பட்டது உண்டாம்.

''அரச குடும்பத்தில் ஓர் அங்கமாக இணைந்துவிட்டால் இவற்றையெல்லாம் நீ சந்திக்கத்தான் வேண்டிவரும். போகப் போகப் பழகிவிடும்...'' என்று அப்போதைக்கு ஆறுதல் கூறினாராம் சார்லஸ்.

''எனக்கு எதுவுமே புரிபடவில்லை. டென்ஷனாக இருக்கிறது. நான் தற்கொலை செய்துகொண்டுவிடுவேன் போலிருக்கிறது...'' என்று டயானா சார்லஸிடம் பயமுறுத்திப் பார்த்தார். ஆனால் சார்லஸோ, ''ஏன் ஓநாய் மாதிரி கூச்சலிடுகிறாய்?'' என்று திட்டிவிட்டு குதிரையில் ஏறி சவாரி செய்யப் போய்விட்டார்.

அப்படியெல்லாம் டயானா தற்கொலை முயற்சியில் இறங்க மாட்டார். சும்மா ஒரு ஸ்டன்ட்’ என்பது இளவரசரின் நினைப்பு.

ஒரு நாள் டயானா சொன்னபடி செய்து விட்டார். தற்கொலை எண்ணத்துடன் மேலிருந்து குதிக்க, அதிர்ஷ்டவசமாகக் காயங்களுடனும் சிராய்ப்புகளுடனும் உயிர் தப்பினார். டயானா தற்கொலை முயற்சிபற்றிக் கேள்விப்பட்ட ராணி அதிர்ச்சியுற்றார். இந்த விஷயம் உடனே சார்லஸுக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர் வரவில்லை. அப்போதும் குதிரைச் சவாரி செய்துகொண்டு இருந்தார்.

மற்றொரு முறை... பிளேடை எடுத்துத் தன் மணிக்கட்டு நரம்பைத் துண்டித்துக்கொள்ள டயானா முயற்சி செய்தார்; பின்னர் ஒரு முறை சார்லஸுடன் காரசாரமான மோதல் வர, டிரெஸ்ஸிங் டேபிளின் மேல் இருந்த ஒரு பேனா கத்தியை எடுத்துத் தன் கழுத்திலும் தொடையிலும் கீறிக்கொண்டார்; ரத்தம் குபுகுபுவெனக் கொட்டியும் சார்லஸ் அசைந்துகொடுக்கவில்லை. ''இதெல்லாம் என்னை ஏமாற்ற நடத்தும் நாடகம்'' என்று கூறினார் சார்லஸ்.

சார்லஸ் அரண்மனைக்கு வராத நாட்கள் எல்லாம் டயானாவுக்குத் தூக்கம் இல்லாத நாட்கள்தான். கண்கள் நீர் சிந்த, டயானா அழுதுகொண்டே தொடர்ந்து டெலிபோன் செய்துகொண்டிருக்கும் காட்சிகள் அடிக்கடி நடக்குமாம். ஒருமுறை இப்படி போனில் பேசிக்கொண்டு இருக்கும்போது, ''எது எப்படி நடந்தாலும், நான் எப்போதும் உன்னைத்தான் காதலிக்கிறேன்...'' என்று இளவரசர் அந்த முனையில் வேறு ஒரு பெண்ணிடம் தேனொழுகக் கூறுவதை டயானாவால் கேட்க முடிந்ததாம்.

சார்லஸ் தன் நண்பர்கள் சிலரை இழந்தது, உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டது... இப்படி இளவரசர் மாறியதற்கு டயானாதான் காரணம் என அரண்மனை உறவினர்களால் குற்றம்சாட்டப்பட்டார்.

பலவித மன வேதனைகளினாலும் சொல் அம்புகளாலும் தவித்த டயானாவை மனநோய் மருத்துவ நிபுணர்கள் பலர் பரிசோதித்து, மருந்து மாத்திரைகள் என மாற்றி மாற்றிக் கொடுத்தது உண்டு.

சார்லஸும் டயானாவும் மனம்விட்டுப் பேச வேண்டும் என டாக்டர்கள் அட்வைஸ் தர, ''ஒவ்வொரு நாளும் பேசியதைவிட, நான் கண்ணீர்விட்டதுதான் அதிகம்...'' என்று கூறி அழுதாராம் டயானா.

இரண்டாவது முறையாகக் கருவுற்றிருந்த டயானா மீது கொஞ்ச நாட்கள் சார்லஸ் அன்பு செலுத்தியது வாஸ்தவம்தான். ஆனால், அதிலும் ஒரு சுயநலம் இருந்துஇருக்கிறது. அடுத்து பிறக்கப்போவது பெண் குழந்தைதான் என்ற நம்பிக்கையில், டயானாவோடு மகிழ்ச்சியாக இருந்தாராம் சார்லஸ். இளவரசருக்குத் தெரியாமல் டயானா 'ஸ்கேன்’ எடுத்துப் பார்த்தார்.

பிறக்கப்போவதும் ஆண் குழந்தைதான் என்று தெரிந்த வுடன், அந்த ரகசியத்தைத் தன் மனப் பெட்டிக்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்ட டயானா. பிரசவமான செய்தியைக் கேள்விப்பட்டு 'ஓ மகனா?’ என்ற அலட்சியத்துடன் சார்லஸ் போலோ ஆடப் போய்விட்டாராம். அந்தக் கணத்தில் இருந்தே ''எனக்குள் இருந்த ஏதோ ஓர் உணர்வு அறுந்துபோய்விட்டதை உணர்ந்தேன்...'' என்று ஓவெனக் கண்ணீர்விட்டுக் கதறி அழுததாகக் கூறினார் டயானா. அன்றே அவர்கள் வாழ்க்கை யில் விரிசல் விட ஆரம்பித்துவிட்டது.

 - கேயெஸ்