Published:Updated:

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

ஃபேஸ்புக் நட்பு தப்பா?

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

ஃபேஸ்புக் நட்பு தப்பா?

Published:Updated:

பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''எனக்குத் திருமணமாகி மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். ஃபேஸ்புக் மூலம் ஒருவருடன் நெருக்கமானேன். தினமும் அவருடன் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. அதிலும் செக்ஸ் பற்றியே அதிகம் சாட் செய்கிறோம். இது தவறு என்று தெரிந்தாலும் மாற்றிக்கொள்ள முடியவில்லை. நான் என்ன செய்யட்டும்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சிகரெட், மதுபோல நீங்கள் ஃபேஸ்புக்குக்கு அடிமை ஆகி இருக்கிறீர்கள். திருமணத்துக்குப் பிறகு, வேறு ஓர் ஆணுடன் இப்படியான தொடர்புகள் சரியா என்ற கலாசாரக் கட்டுப்பாட்டைக்கூட விடுங்கள். உங்கள் உடல், மன நலனுக்கு ஆரோக்கியமானதா அது? பேச்சுதான் செயலை நோக்கித் தள்ளும். செக்ஸ் தொடர்பாக மட்டுமே பேசுபவர், உங்களிடம் என்ன எதிர்பார்ப்பார் என்பதை உணராதவரா நீங்கள்? ஃபேஸ்புக் நண்பருடன் பேசக் கூடாது என்று எத்தனை வைராக்கியமாக இருந்தாலும், வழக்கமான சாட்டிங் சமயம் உங்கள் மனம் உங்களைத் தீண்டித் தூண்டத்தான் செய்யும். அந்த நேரத்தைக் கடப்பதுதான் உங்களுக்கான சவால். 'நாளை முதல் குடிக்க மாட்டேன். இன்று மட்டும் கொஞ்சமாகக் குடித்துக்கொள்கிறேன்’ என்பதுபோல செயல்படத் தொடங்கு வீர்கள். அதனால், கொஞ்சமும் தயங்காமல் ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள். உங்கள் நிலைமையின் தீவிரம் உணர்ந்து, தேவைப்பட்டால் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்!''

கே.ரம்யா, கும்பகோணம்.

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''மாஸ்காம், விஸ்காம் எனப் பல படிப்புகள் இருக்கின்றனவே... எதைப் படிக்கலாம்?''

''எலெக்ட்ரானிக் மீடியா, விஷ§வல் கம்யூனிகேஷன் என்பவை இளங்கலை, முதுகலைப் படிப்புகள். மாஸ் கம்யூனிகேஷன் முதுகலைப் படிப்பு மட்டுமே. எலெக்ட்ரானிக் மீடியா, விஷ§வல் கம்யூனிகேஷன் படித்தால், நீங்கள் காட்சி ஊடகம் என்று சொல்லப்படும் விஷ§வல் மீடியாக்களில் ஜொலிக்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பது, விளம்பரங்கள் எடுப்பது, குறும்படங்கள், ஆவணப்படங்கள் இயக்குவது போன்ற அத்தனை முயற்சிகளுக்கும் இவை கைகொடுக்கும். மாற்று சினிமாவைப் படைப்பதற்கான வாய்ப்புகளும் இதில் உண்டு.

மாஸ் கம்யூனிகேஷன் படித்தால் பத்திரிகை, மக்கள்தொடர்பு, சினிமாவில் தயாரிப்பு நிர்வாகம் போன்ற வேலைகளுக்குப் போகலாம். முதுகலை மாஸ் கம்யூனிகேஷன் படிக்க எந்த இளங்கலைப் படிப்பை முடித்திருந்தாலும் போதும்.

எலெக்ட்ரானிக் மீடியா முதுகலைப் படிப்பாகக் கற்றுத்தரப்படுகிறது. எலெக்ட்ரானிக் மீடியா ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டுகள்கொண்ட படிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ளது. எலெக்ட்ரானிக் மீடியா படித்தால், பண்பலை, தொலைக்காட்சி, சினிமாவில் பிரகாசிக்கலாம். இதற்கு ப்ளஸ் டூ தகுதி போதுமானது. இவை எல்லாம் ஆங்கில வழியில் படிக்க வேண்டும். தமிழில் படிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. லயோலா கல்லூரியில் மட்டும் முதுகலை ஊடகக் கலைகள் துறை உள்ளது. இளங்கலையில் எந்தப் படிப்பைப் படித்தவர்களும் முதுகலையில் தமிழ் வழியில் படிக்கலாம். இதழியல், தொலைக்காட்சி, விளம்பரம், சினிமா, குறும்படம், ஆவணப்படம், உடல்மொழி, திரைமொழி, திரைக்கதை வரைவு என அத்தனையும் பாடங்களாக இருப்பதால், நீங்கள் விரும்பும் எந்தத் துறையிலும் சாதிக்கலாம்!''

பெயர் வேண்டாமே...

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''நான் இந்து. எனக்கு 24 வயது. என் காதலிக்கு வயது 21. கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர். இருவரும் விரும்புகிறோம். எங்கள் திருமணத்துக்கு வீட்டில் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பதிவுத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறோம். என்ன செய்ய வேண்டும்... வழிகாட்டுங்களேன்?''

''இருவருக்கும் 18 வயது ஆகிவிட்டது என்பதற்கு ஆதாரமாக உங்கள் வயதை நிரூபிக்கும் ஆவணங்கள் அவசியம். இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ்  உங்கள் திருமணத்தைப் பதிவுசெய்யலாம். உங்கள் திருமண விவரத்தைப் பெண் மற்றும் உங்கள் இருப்பிட எல்லைக்கு உட்பட்ட திருமணப் பதிவாளரிடமோ, திருமணம் நடைபெறும் எல்லைக்கு உட்பட்ட திருமணப் பதிவாளரிடமோ தெரிவிக்க வேண்டும். உங்கள் இருவரின் புகைப்படங்களுடன் படிப்பு உள்ளிட்ட மற்ற விவரங்களையும் குறிப்பிட்டு, இருப்பிடச் சான்றிதழ், வயதுகுறித்த ஆவணங்கள் போன்றவற்றை இணைத்து ஒரு மனுவைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை அறிவிப்புப் பலகையில் ஒட்டிய பின்பு, 30 நாட்களுக்குப் பின்னர் எந்த ஒரு நபரும் உங்கள் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால், உங்கள் திருமணம் முறையாக திருமணப் பதிவாளரால் மூன்று சாட்சிகள் முன்னிலை யில் பதிவுசெய்யப்பட்டு,  சான்றிதழ் தரப்படும்!''

எஸ்.ஆனந்த், சென்னை.

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!

''சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தேன். சாஃப்ட்வேர் துறை. நெருக்கடியான வேலைப் பளுவால் அடிக்கடி தலைவலி வருகிறது. வீட்டுக்கு வந்தால் காரணம் இல்லாமல் யார் மீதாவது எரிந்துவிழுகிறேன். என்னையே எனக்குப் பிடிக்கவில்லை. என்ன செய்வது?''

'' 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் மருத்துவ மனையைச் சுத்தம் செய்யும் தாத்தாவுக்கு வந்த பிரச்னைதான் உங்களுக்கும். மன அழுத்தத்தால் சிலருக்கு அல்சர் வரும் உங்களுக்குத் தலைவலி அவ்வளவுதான். வேலைப் பளுவில் உங்க ளால் சரியாகச் சாப்பிட முடியாது. அதிகமாக காபி மட்டுமே குடிப்பீர்கள். உடலைச் சரியாகக் கவனிக்க மறந்துவிடுவீர்கள். இதுவும் உடல்நலக் குறைவு ஏற்படக் காரணங்கள். மன உளைச்சலைப் போக்க காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது, எரிந்துவிழுவது எப்போதுமே தீர்வாகாது. உடற்பயிற்சி, யோகா, தியானம், நீச்சல் போன்றவை மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவும். முக்கியமாக, நீங்கள் கால மேலாண்மையைப் பின்பற்ற வேண்டும். அதே சமயம், வேலைக்கு என்று ஒரு நேரத்தை நிர்ணயிப்பதுபோல, வாழ்க்கைக்கு என்றும் ஒரு நேரத்தை நிர்ணயுங்கள். வேலையை எங்கே ஆரம்பிப்பது என்று தெரிந்த உங்களுக்கு எங்கே முடிப்பது என்றும் தெரிந்திருக்க வேண்டும். பலருக்குப் பிரச்னை ஏற்படும் இடம் இதுதான். அவசியம் எனில் மனநல மருத்துவரின் ஆலோசனையை நாடலாம்!''

இதுதான்... இதற்குத்தான்... இப்படித்தான்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism