Published:Updated:

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

படம் : சொ.பாலசுப்பிரமணியன்

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

படம் : சொ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:
##~##

அருள் முத்துக்குமரன், சிதம்பரம்.

 ''கருணாநிதியோ, ஜெயலலிதாவோ சொல்வதற்கு அப்படியே தலை அசைக்க ஒரு தனிக் கட்சி நடத்த வேண்டிய அவசியம் என்ன?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளோடும் விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் உறவைக்கொண்டு இருந்தாலும் ஒருபோதும் எங்களின் தனித்துவத்தை இழந்தது இல்லை. 'இதைச் செய்!’, 'அதைச் செய்யாதே!’ என்று தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ ஒருபோதும் எங்களிடம் சொன்னதும் இல்லை. மேலும், தோழமைக் கட்சிகளின் நடவடிக்கைகளில் தலையிடும் அளவுக்கு தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் தலைமைகள் ஜனநாயக நாகரிகத்தை அறியாதவை அல்ல!''

க.முருகன், திருச்சி.

 '' 'வன்கொடுமை தடுப்புச் சட்டம் வட மாநிலங்களுக்குத்தான் பொருந்தும், தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தினைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்’ என்று கூறிய ராமதாஸுக்குத் தாங்கள் அம்பேத்கர் விருது வழங்கிய காரணம் என்ன?''

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

 ''தலித்துகளின் தலைநிமிர்வுக்காகப் பாடுபடும் தலித் அல்லாதவருக்கும் அம்பேத்கர் விருது வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில்தான் அந்த விருதை விடுதலைச் சிறுத்தைகள் வழங்கிவருகிறது. புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளையும் அவரது உருவ அடையாளங்களையும் பா.ம.க-வின் அதிகாரபூர்வ அடையாளங்களாக ஏற்றுக்கொண்டவர் மருத்துவர் ராமதாஸ். மேலும், தலித்துகளுக்கும் வன்னியர் களுக்கும் இடையில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட மாவட்டம்தோறும் 'ஒரு தாய்மக்கள் மாநாடு’ நடத்தினார். வட மாவட்டங்களில் அம்பேத்கரின் சிலைகளை ஏராளமாக அவர் நிறுவி இருக்கிறார். நேர்மறையான அணுகுமுறைகளையும் நிலைப்பாடுகளையும் தேடிப்பிடித்துப் பாராட்டுவதும், ஊக்கப்படுத்துவதும் சமூக நல்லிணக்கத்துக்கு ஏதுவாக அமையும். பகை முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதும் மோதலுக்கான சூழலை உருவாக்குவதும் சமூக அக்கறையுள்ளவர்களின் இயல்பாக இருக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக ஒருவேளை அவர் அப்படிக் கூறியிருக்கலாம். ஆனால், தலித் மற்றும் தலித் அல்லாதோரின் ஒற்றுமையையும் மனப்பூர்வமாக அவர் விரும்புகிறார் என்ற நம்பிக்கையில் அவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்து இருக்கிறோம்!''

நடராஜன், பாலுசெட்டிசத்திரம்.

'' 'அரசுத் துறையிலேயே வேலை பார்த்து மாதாமாதம் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்திருக்கலாம். இந்த அரசியலுக்கு ஏன் வந்தோம்’ என்று என்றைக்காவது எண்ணியது உண்டா?''

 ''எப்போதாவது... கொஞ்சமும் நியாயம் இல்லாத தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொள்ளும்போது...''

பேபி.அமுதா, வண்ணாரப்பேட்டை.

 ''ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி வாயே திறக்கவில்லையே? கூட்டணி தர்மமா?''

 ''ஏராளமாகப் பேசி இருக்கிறேன். பெரு முதலாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட தொழில் போட்டியில், முன்னாள் அமைச்சர் ஆ.ராசா குறிவைக்கப்பட்டார். அலைக்கற்றை ஒதுக்கீட்டுக் கொள்கையில் ஐந்து பெரும் நிறுவனங்களைத் தாண்டி வேறு எவரும் தலையிடக் கூடாது என்ற மேலாதிக்கம் இருந்தது. அதை முதன்முறையாக உடைத்து நொறுக்கியவர் ராசா. அவரால்தான், கோடீஸ்வரர்களின் கைகளில் மட்டுமே இருந்த அலைபேசிகள் இன்று கூலித் தொழிலாளிகளின் கைகளிலும் தவழ்கின்றன. இது 21-ம் நூற்றாண்டில் நிகழ்ந்துள்ள தலைகீழ் மாற்றம். ஊழல் முறைகேடுகளை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளையில், பெருநிறுவனங்களின் தொடர் கொள்ளைகள் தடுத்து நிறுத்தப்பட்ட நடவடிக்கையை நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் ஊழல் சேற்றுக்குள் இழுத்துவிடுவதே, பெரு நிறுவனங்களும் முதலாளி வர்க்கமும்தான். ஆனால், அண்ணா ஹஜாரே போன்றவர்கள்கூட, முதலாளி வர்க்கத்தின் சுரண்டல் மற்றும் ஊழலை அம்பலப்படுத்தவோ, கண்டிக்கவோ தயாராக இல்லை. இதுகுறித்து நாங்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் இருக்கிறோம்!''

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

ப.உமா மகேஸ்வரி, விருதுநகர்.

 ''குஷ்பு கற்பு தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் வெளியான சமயத்தில், உங்கள் கட்சியினர் அவருக்கு எதிராகப் பேசினார்கள். கற்பு என்கிற கருத்தாக்கம் குறித்து உங்கள் கருத்து என்ன?''

''ஒன்றைப்பற்றி நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ கருத்து சொல்ல யாவருக்கும் உரிமை உண்டு. ஆனால், யாரும் யாரையும் இழிவுபடுத்துவது ஏற்புடையது அல்ல. மானுட வாழ்க்கை என்பது உணர்ச்சிகளின் மாயையில் கட்டப்பட்டது. ஆகவே, உணர்ச்சிபூர்வமான சிக்கல்களைக் கையாளும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. இதுதான் நடிகை குஷ்பு சந்தித்தவற்றில் இருந்து நாம் கற்பதும் கற்பிப்பதுமாகும்!''

ஆர்.கண்ணன், திருவாரூர்.

''பெரியார் குறித்த தற்போதைய சர்ச்சைகளைக் கிளப்பியது உங்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரவிக்குமார் தான். பெரியார் குறித்த அவருடைய கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?''

 ''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் ஆவதற்கு முன்பே தோழர் ரவிக்குமார் ஒரு நாடறிந்த எழுத்தாளர். ஒவ்வொரு தனி மனிதருக்கும் கருத்துரிமை உண்டு. ரவிக்குமார் இதற்கு விதிவிலக்கு அல்ல. விடுதலைச் சிறுத்தைகளின் கருத்தியல் அடையாளங்களுள் பெரியாரும் ஒருவர் என்பது தோழர் ரவிக்குமாருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், ஒரே கட்சியில் இருப்பதால், அந்தக் கட்சியில் உள்ள இருவருக்கு எல்லாவற்றிலும் 100 விழுக்காடு உடன்பாடு இருக்க வேண்டும் என்பது இல்லை. மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றி நான் கொண்டிருக்கிற கருத்தில் அவருக்கு மாறுபாடு உண்டு. ஆனால், கட்சியின் கொள்கை மற்றும் செயல்திட்டங்களுக்கு 100 விழுக்காடு ஊக்கமும் ஒத்துழைப்பும் தருகிற முதிர்ச்சியும் பக்குவமும்கொண்டவர் அவர். பெரியார் குறித்து தோழர் ரவிக்குமாருக்கு முன்னரே தமிழகத்தில் எதிர்மறை விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது உண்டு. திராவிட முன்னேற்றக் கழகமே தி.க-வில் இருந்து பிரிந்த காலத்தில் பல்வேறு விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைத்துள்ளது. எனவே, தோழர் ரவிக்குமார்தான் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பினார் என்பது தவறான புரிதல்.''

பி.மோகன், ஆ.கே.பேட்டை.

 ''அறிக்கைப் போராகட்டும்... அநாகரிகமாக ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொள்ளும் பொதுக்கூட்டங்களாகட்டும் இப்போதைய அரசியல் சூழல் அநாகரிகத்தின் உச்சம் என்று சொல்வேன். கட்சிப் பாகுபாடு இன்றி இந்த சூழல் எங்கும் நீக்கமற வியாபித்துக் கிடக்கிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?''

 ''இத்தகைய அநாகரிகங்களை ஊக்கப்படுத்துவதற்கும் ஆட்கள் இருப்பதனால்தான், இது உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இது கவலைக்குரியதுதான்!''

என்.சக்கரவர்த்தி, திருவான்மியூர்.

''தடயவியல் துறை ஆய்வாளர் திருமா எப்படி அரசியல்வாதி ஆனார்?''

''காவல் துறையே அதற்குப் பெரும் பங்களிப்பு செய்தது. அப்போது நான் கோவையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். ஒரு நாள் மதுரை செல்வதற்காக கோவை பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டு இருந்தேன். சற்றுத் தொலைவில் நின்றவாறு என்னை இரண்டு பேர் கவனித்துக்கொண்டே இருந்ததை உணர்ந்தேன். நான் நகர்ந்த இடங்களுக்கு எல்லாம் அவர்களும் நகர, அவர்களை நெருங்கிச் சென்று சற்று கடுமையாக, 'யாரைத் தேடுகிறீர் கள்?’ என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறி னார்கள். தோற்றத்தில் அவர்கள் காவல் துறையினர்தான் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. 'உங்களிடம் பேச வேண்டும்’ என்று என் கையைப் பிடித்தார் அவர்களில் ஒருவர். அப்போது இரண்டு பேராக இருந்த அவர்கள் நான்கு பேராக என்னைச் சூழ்ந் தார்கள். என்னைக் கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வதுபோல் சாலையோரப் பூங்காத் திட்டுக்கு அழைத்துப் போனார்கள். அப்போதுதான் அவர்கள் மதுரையைச் சார்ந்த 'க்யூ பிராஞ்ச் போலீஸ்’ என்று அறிமுகப் படுத்திக்கொண்டார்கள். 'உனக்கு நக்சலைட் நாகராஜனைத் தெரியுமா?’ என்றார்கள். 'அப்படி எனக்கு யாரையும் தெரியாது’ என்றேன். அவர்கள் மிரட்டும் உத்திக்கு மாறினார்கள். 'சரி, மதுரைக்கு வா! எங்கள் அதிகாரியிடம் இதைச் சொல்லிவிட்டு நீ போகலாம்’ என்று என்னைக் கடத்தும் முடிவுக்கு வந்தார்கள். ஒரே பேருந்தில் அனைவரும் மதுரைக்குப் பயணமானோம்.

மதுரையில் இறங்கும்போது, எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நான் வந்த வண்டியைச் சுற்றி ஏராளமான போலீஸார் சூழ்ந்து நின்றனர். தீவிரமாகத் தேடப்படும் ஒரு பயங்கரவாதியைச் சுற்றி வளைத்துக் கைதுசெய்வதைப் போல, வண்டியில் இருந்து இறங்கிய என்னை வளைத்துக்கொண்டனர். தனியார் விடுதி ஒன்றுக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கும் சீருடை அணிந்த, சீருடை அணியாத போலீஸார் காத்திருந்தனர். அங்கிருந்த உயரதிகாரி கோவையில் கேட்ட அதே கேள்விகளைக் கேட்டார். நானும் அங்கே சொன்ன அதே பதில்களையே மீண்டும் சொன்னேன். 'இவனை இரவோடு இரவாகச் சென்னைக்குக் கொண்டுபோய் ஐஸ் கட்டிகளில் படுக்கவைத்து, நகக் கண்களை ஊசியால் குத்தி, தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்தால்தான் இவன் சொல்வான்’ என்று அவர் என்னை மிரட்டினார். பனியனோடு அமர்ந்திருந்த அந்த அதிகாரி திடீர் என அப்போது ஓர் அதிர்ச்சியைக் கொடுத்தார். சட்டென ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து, என் முகத்துக்கு நேரே நீட்டி 'உன்னை இங்கேயே சுட்டுக் கொன்றால் எவன் வந்து கேட்கப்போகிறான்? சாக்கடையில் தூக்கி வீசிவிட்டுப் போய்விடுவோம்; ஒழுங்காக உண்மையைச் சொல்’ என்றார். அதற்குப் பிறகு இப்படிப் பல அதிர்ச்சிகள், நிகழ்வுகள்... அது ஒரு நீண்ட கதை!

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

அரசு ஊழியராக இருந்த என்னை இப்படித்தான் காவல் துறை அரசியல்வாதி ஆக்கியது!''

இ.தேசிங்கு, திருநெல்வேலி.

 ''வடக்கே மாயாவதி, கன்ஷிராம்போல மிகப் பெரும் அரசியல் சக்தியாக ஏன் இங்கே தலித் தலைவர்கள் வளரவில்லை?''

 ''உத்தரப் பிரதேசத்தில் தலித் அல்லாத சமூகத்தினரிடையே அரசியல் விழிப்பு உணர்வு, தலித்துகளைத் தோழமைச் சக்தியாகப் பார்க்கும் அணுகுமுறை, தலித்து களோடு இணைந்த ஒருங்கிணைந்த வளர்ச்சியை அங்கீகரிக் கும் போக்கு போற்றத்தக்க வகையில் வளர்ச்சியடைந்து இருப்பதை, கன்ஷிராம், மாயாவதி ஆகியோரின் வளர்ச்சியில் இருந்து காண முடிகிறது. அத்தகைய மாற்றம் தமிழகத்திலும் தலித் அல்லாதாரிடையே வளரும்போது, நீங்கள் விரும்பும் மாற்றம் நிச்சயம் இங்கே நிகழும்!''

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism