Published:Updated:

"என் பெற்றோர் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன்!"

"என் பெற்றோர் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன்!"

"என் பெற்றோர் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன்!"

"என் பெற்றோர் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன்!"

Published:Updated:
"என் பெற்றோர் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன்!"

நேபாளத் தலைநகர் காட்மண்டு... அரசக் குடும்பத்தின் குலதெய்வமான தாலேஜு என்கிற பெண் கடவுளின் கோயில் அது.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 எட்டு கைகள், ருத்ரதாண்டவம், முறைக்கும் ஆவேசக் கண்களுடன் தாலேஜு சிலை நிற்கிறது. அதற்கு முன்னால் - அப்போது தான் வெட்டியெடுக்கப்பட்ட 108 ஆடுகளின் தலைகள் வட்டமாக வைக்கப்பட்டு இருக்கின்றன. அடுத்த வட்டமாக 108 எருமை மாடுகளின் தலைகள். தரைஎல்லாம் ரத்தவெள்ளம். சிவப்பு விளக்குகள் சூழ்நிலையை இன்னும் பயங்கரமாக்கிக் காட்ட... சற்று எட்ட நிற்கிறார் நேபாள அரசர். கூடவே அவரது குடும்பத்தினர். அந்த ரத்த வெள்ளத்துக்கு நடுவே நாலு வயதுப் பெண் குழந்தை. நாடு முழுக்க நேபாள ராஜகுரு சுற்றிப் பார்த்துத் தேர்ந்தெடுத்த குழந்தை. சாஸ்திரம் சொல்கிற அத்தனை லட்சணங்களும் பொருந்தப்பெற்ற - சாக்கிய (பொற்கொல்லர்) இனத்தைச் சேர்ந்த குழந்தை... தங்கத்தைத் தொடுகிற பளபளப்பு நிறம். அதன் கண்கள் முழுக்கப் பயம்.

குழந்தைக்கு முன்னால் உட்கார்ந்தபடி ஆவேசமாக மந்திரங்கள் சொல்கிறார் ராஜகுரு. உச்சகட்டத்தில், ''ம்... தாலேஜு கடவுளின் முழு சக்தியும் இந்தப் பெண்ணுக்குள் புகுந்துவிட்டது. இவள் இப்போது கடவு ளாகி விட்டாள். இவள்தான் இனிமேல் நேபாளத்து அரச குலத்தின் தெய்வம்!'' என்கிறார் உரக்க. அதன்பின் ஸ்பெஷலாக அமைக்கப்பட்ட அரண்மனைக்குள் அவளை அழைத்துப்போகிறார்கள். பட்டாடை உடுத்துகிறார்கள். அவள் நெற்றியில் ஒரு 'கண்’ படம் வரைகிறார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கி இன்று வரைக்கும் நேபாளத்தில் நடந்துகொண்டிருக்கிற ராஜ சடங்கு இது. நாலு வயதில் தெய்வமாக்கப்படும் குழந்தை, வயதுக்கு வருகிற வரையில் ராஜ தெய்வமாகவே இருக்கும்.

"என் பெற்றோர் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன்!"

பாதுகாக்கப்பட்ட அந்த அரண்மனைக்குள் தெய்வமாக இருக்கும் வரை அந்தக் குழந்தை வெளியே வர முடியாது. உள்ளேயும் யாரோடும் விளையாட முடியாது. தன் வயதுக் குழந்தைகளையோ, தன் பெற்றோரையோ பார்க்க முடியாது. தாலேஜு என்கிற ஓங்கார தெய்வத் தின் பிரதிநிதியாக நேபாள அரசருக்கு அருள்பாலித்துக்கொண்டு இருப்பதுதான் அதன் வேலை.

வயதுக்கு வந்தவுடனேயே அவள் மீது இருக்கும் தெய்வம் தானே வெளியேறிவிடுவதாக ஐதீகம். அப்புறம் வேறொரு நாலு வயதுக் குழந்தையைத் தேடி, ராஜகுரு நாடு முழுக்க 'திக் விஜயம்’ செய்வார்.

இப்படி எட்டு வருடங்கள் குழந்தை தெய்வமாக இருந்துவிட்டு, இப்போது குடும்பமும் குழந்தைகளுமாக இருக்கும் நானிமயா என்கிற 35 வயதுப் பெண்ணை இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'தி இண்டிபெண்டன்ட்’ பத்திரிகையின் நிருபர் சந்தித்தார். திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகின.

''வெளியில் இருந்து பார்ப்பதற்கு ஜோதி மயமாகத் தெரியுமே தவிர, அது மிகக் கொடுமையான அனுபவம்'' என்று எடுத்த எடுப்பிலேயே சொன்னார் நானிமயா.

''எனக்கு இப்போது இரண்டு பெண் குழந்தை கள்... அவர்களில் ஒருவரை ராஜ தெய்வமாக மாற்ற என்னிடம் வந்து கேட்டார்கள்.என் பெற்றோர் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன் என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டேன்!'' என்றார் கண்களில் பீதி யுடன்.

''நானாவது பரவாயில்லை... என்னைப் புரிந்துகொண்டு திருமணம் செய்துகொள்ளப் பெருந்தன்மையான ஒரு கணவர் கிடைத்தார். எனக்கு முன்பு ராஜ தெய்வமாக அந்த அரண்மனைச் சிறைக் குள் இருந்து திரும்பி வந்த பெண்கள் பலர் சீரழிந்துவிட்டார்கள். கடைசி வரை இந்தச் சமுதாயம் அவர்களை அச்சப் பார்வைதான் பார்க்கிறதே தவிர, ஒரு சாதாரணப் பெண்ணாக ஏற்றுக்கொள்வதே இல்லை. இப்படியே இருந்து கடைசிவரை திருமணமே ஆகாமல் மன நோய் பிடித்தவர்களும் இருக்கிறார்கள். ஏன், பாலியல் தொழிலாளியான கதைகூட உண்டு'' என்று நடுங்கியபடி சொல்கிறார் நானிமயா.

தெய்வக் குழந்தையாக இருந்த ஒரு பெண் பெரியவளாக ஆன பிறகும் அவளிடம் பயங்கர சக்திகள் நிலைத்திருக்கும் என்று நேபாளத்தில் முக்கால்வாசிப் பேர் உறுதியாக நம்புகிறார்கள். 'தாலேஜு தெய்வத்தின் உக்கிரத்தன்மை அவளிடம் நீங்காமல் இருக்கும். அவளைத் திருமணம் செய்துகொள்கிற ஆண்கள் கூடிய சீக்கிரம் கொடூரமாகச் செத்துப்போவார்கள்’ என்றும் நம்பிக்கை. அப்புறம் எப்படிக் கல்யாணம் ஆகும்?!

கஷ்டப்பட்டுத் தேடிப் பிடித்து வழிபடுகிற நேபாள ராஜ குடும்பம், இந்தப் பெண்களின் பிற்காலம்பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை. வயதுக்கு வந்து அரண்மனையில் இருந்து வெளியேறிய பிறகு, அந்தப் பெண்ணுக்கு மாதம் ஆறு பவுண்டு பென்ஷன் (?) கொடுப்பதோடு சரி!

"என் பெற்றோர் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன்!"

இந்தக் குழந்தை தெய்வத்தை, 'குமாரி’ என்கிறார்கள். அரண்மனைக்குள் இருக்கும் வரை அவள் தேவைகளைப் பூர்த்திசெய்து, பத்திரமாகப் பார்த்துக்கொள்ளத் தனியாக 'கேர் டேக்கர்’ உண்டு. அதுவும் பரம்பரைப் பதவிதான். இந்த 'கேர்-டேக்கர்’கள் நேபாள அரசருக்கு ரொம்ப விசுவாசமானவர்கள்.

''அரசரின் எதிர்காலத்தை யும் நாட்டுக்கு வருகிற கெடு தலையும் முன்கூட்டிச் சொல் வது இந்தக் குழந்தைதான். இப்படித்தான் 1979-ம் வருடம் இருந்த குமாரிக்குத் திடீரென கடும் ஜுரம் வந்தது. அரச ருக்குத் தெரிவித்தேன். பதற்றத்துடன் ஓடிவந்தார் அரசர். பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் வந்து பார்த்தும் குணமாகவில்லை. பிறகு, ஒரு மந்திரவாதியை அழைத்து வந்தோம். ஆனால், குழந்தையைத் தொட்ட தினத்தன்று இரவே மந்திரவாதி ரத்தம் கக்கி இறந்துவிட்டார். பிறகு, அவர் மகன் வந்து பார்த்தார். அவரும் இறந்துவிட்டார். அதற்குத் தகுந்தாற்போலவே ஒரு சில நாட்களில் ராஜாவின் குடும்பத்தில் பயங்கரக் குழப்பங்கள்'' என்கிறார் இப்போது தெய்வமாக அரண்மனைக்குள் அடைபட்டு இருக்கும் குழந்தையின் 'கேர் டேக்கர்’.

எப்போது அரசர் தன்னைப் பார்க்க வந்தாலும் கொஞ்சம் மஞ்சள் எடுத்து அவர் நெற்றியில் இந்தக் குழந்தை தெய்வம் வைக்க வேண்டும் என்பது மரபாம்.

''1954-ல் அரசர் திரிபுவன் அப்போது இருந்த குமாரியைத் தன் மகனுடன் பார்க்க வந்தார். அந்தக் குழந்தை மஞ்சள் எடுத்து அவர் மகன் நெற்றியில் வைக்கப்போனது, 'இதென்ன அபசாரம்’ என்று பதறியபடி நான் தடுக்கப்போனேன். குமாரி என்னை எரித்துவிடுவதுபோல் முறைக்கவே... நான் பின்வாங்கினேன். அடுத்த சில நாட்களில் திரிபுவன் ராஜா இறந்து, அவர் மகன் அரசராகிவிட்டார்!'' என்கிறார் பழைய 'கேர்-டேக்கர்’.

மற்ற முன்னாள் குமாரிகளைப் போல் இல்லாமல், வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு, பட்டம் படித்து குடும்ப வாழ்க்கை நடத்தும் நானிமயா - ''இதெல்லாம் பயங்கர டூப். நான் குமாரியாக இருந்தபோது எனக்கு அப்படி எதுவும் சக்தி இருந்ததாகத் தெரியவில்லை. வெளியுலகத்தைப் பார்க்கிற ஏக்கம்தான் எப்போதும் என்னை அரித்துக்கொண்டு இருந்தது'' என்கிறார்.

தற்போதைய 'குமாரி’யைப் பார்க்க அந்த அரண்மனைக்குப் போயிருந்தார் அந்தப் பத்திரிகை நிருபர். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். ரொம்ப நேரம் வாசலிலேயே காத்திருந்த போது, சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தாள் குமாரி. கீழே இரண்டு

குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருப்பதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். நிருபர் படம் எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டார்.

- மௌர்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism