Published:Updated:

அரசு நிர்வாகத்தை சீர்படுத்துவதே பெரிய சவால்: ஜெ.

ஸ்ரீரங்கம், ஜூன் 20,2011

அரசு நிர்வாகத்தை சீர்படுத்துவதே பெரிய சவால்: ஜெ.

'முந்தைய அரசால் உண்டான நிர்வாக குளறுபடிகளை சீர்படுத்துவதே கடும் சவாலாக உள்ளது,' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ரூ.190 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நல உதவிகளை வழங்கியும் அவர் பேசியது:

"இந்த ஸ்ரீரங்கம் தொகுதியிலே வாக்கு சேகரிக்க நான் வந்த போது, நீங்கள் அன்போடும், கனிவோடும் எனக்கு வரவேற்பு அளித்தமைக்கும்; அதற்கேற்றாற்போல், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில் என்னை இந்த தொகுதியிலிருந்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தமைக்கும்; இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாட்டின் முதல்வராக  மூன்றாவது முறையாக பொறுப்பேற்கக் கூடிய வாய்ப்பினை எனக்கு உருவாக்கித் தந்தமைக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியினை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ##~~##

"யாருக்கும், எதற்கும் அடிமையாக மாட்டோம்; அடிமையாக்க நினைப்பவர்களை, அப்புறப்படுத்துவோம்'' என்பதை நீங்கள் உங்கள் வாக்குகள் மூலம் உறுதி செய்துள்ளீர்கள். உங்களின் வாக்குகள் விலை மதிப்பற்றவை; நீங்கள் கிடைத்தற்கரிய வைரம் என்பது இந்த தேர்தலின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. உங்கள் கடமையை செவ்வனே செய்திருக்கிறீர்கள். இதற்காக மீண்டும் ஒரு முறை எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித உறவுகளை மேம்படுத்துவதில் நன்றி மனப்பான்மை மிகவும் முக்கியமானது. அதனால் தான் எனது நன்றியை எழுத்தினால் தெரிவித்தாலும் போதாது; நாவினால் சொன்னாலும் போதாது என்று கருதி, அதைத் திட்டங்கள் வடிவில் உங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அரசு சார்பில் நடத்தப்படும் முதல் கூட்டம் இது தான் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது தலைமையில் அமைந்துள்ள இந்த அரசு, ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக பயன் தரக்கூடிய மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் தான், மக்கள் நலனை முதன்மைப்படுத்தி, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம் பல முக்கிய திட்டங்களுக்கு நான் முதல்வராக பொறுப்பேற்ற அன்றே உத்தரவிட்டேன்.

ஏழைகளை உள்ளடக்கிய வளர்ச்சி...

ஏழை, எளிய மக்களுக்கு முழுமையான உணவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசிக்கு மக்கள் எந்த விலையையும் கொடுக்க வேண்டியதில்லை என்று இலவசமாகவே அரிசியை வழங்க உத்தரவிட்டேன். இதன் மூலம், தமிழக மக்கள் உணவு பாதுகாப்பு என்பதை ஒரு உரிமையாகவே பெற்று விட்டனர்.

வறுமையை முழுமையாக அகற்றுவதை தன் தலையாய கொள்கையாக எனது அரசு கொண்டுள்ளது. உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதோ, பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படுவதோ மட்டும் நாட்டிற்கு உகந்த வளர்ச்சி அல்ல என்பதே என்னுடைய தீர்க்கமான கருத்து ஆகும். எனவே தான், பொருளாதார வளர்ச்சி ஏழை, எளிய மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன்.

நான் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் தான் ஆகிறது. ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாக சூழ்நிலையைப் பார்த்த போது, எனக்கு கடும் அதிர்ச்சி தான் ஏற்பட்டது. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு குளறுபடிகளை செய்து, நிர்வாகத்தையே சீரழித்துள்ளது. துறை தோறும் உள்ள குளறுபடிகளை நான் சீர்படுத்தி, ஒழுங்குபடுத்தி வருகிறேன். இதுவே, ஒரு மாபெரும் சவாலாக அமைந்துள்ளது. கடும் சவாலுக்கு மத்தியில் 190 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்களுடன் நான் இங்கு வந்துள்ளேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி காலத்தில், கருத்திலேயே, திட்டங்களிலேயே பிழை இருந்தது என்பதால் தான், அவர்களது திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு பயன்படாமல் அவர்களுக்கே பயன்படும் திட்டங்களாக இருந்தன.

எங்கள் அரசு, தற்போது கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும், மக்கள் நலனை முன்னிறுத்தியே கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்கள். தமிழக மக்களைத் தவிர, வேறு யாரும் இந்த திட்டங்களின் மூலம் பயன்பெற இயலாது. இந்த திட்டங்கள் மூலம், தமிழக மக்களின் வாழ்க்கை வளம் பெறும்; மனித வளம் மேம்படும்; மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

ஏழை, எளிய மக்களுக்கு ஒரு புறம் சலுகைகளை வழங்குவதும்; மறுபுறம் வாழ்க்கைக்கு தேவையானவற்றை அவர்களே வாங்கிக் கொள்ளும் வகையில், அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்துவதும் ஆகிய இரு வேறு நிலைகளில், பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு மேற்கொண்டு வருகிறது," என்றார் ஜெயலலிதா.