Published:Updated:

தெரு விளக்கு

காடுகளின் காதலன்!பாரதி தம்பிபடம் : எஸ்.தேவராஜன்

தெரு விளக்கு

காடுகளின் காதலன்!பாரதி தம்பிபடம் : எஸ்.தேவராஜன்

Published:Updated:
##~##

'தாய் நிலம் தந்த வரம் தாவரம் - அது
தழைக்கத் தழைக்க மகிழ்வார்கள் யாவரும்!''

- நினைவிருக்கிறதா இந்த 'வயலும் வாழ்வும்’ பாடல் வரிகளை? இப்போது வாழ்வு இருக்கிறது... வயல்? தாய் நிலம் இருக்கிறது... தாவரம்? ரியல் எஸ்டேட்டின் பெயரால், புதிய தொழிற்சாலைகளின் பெயரால், புதிய சாலைகளின் பெயரால்... நாள்தோறும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அதைக் கண்டு நம்மில் பலர் ஆற்றாமையுடன் கடந்துசெல்ல... 'மரம்’ கருணாநிதியோ, அதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்திருக்கிறார். இதுவரை இவரால் உருவாக்கப்பட்டு இருக்கும் மரங்களின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இன்னும் நிறைய மரங்களை உருவாக்கணும். இந்திய மக்கள்தொகை எத்தனையோ, அதுக்கு ஈடா மரங்களை நடணும். கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாய் சுமார் ஒரு கோடி மரங்களை உருவாக்கி இருக்காங்க. அதைத் தாண்டி மரங்களை உருவாக்கணும். இது என் பேராசை. என் வாழ்நாள்ல இது முடியுமோ, முடியாதோ தெரியலை. எனக்குப் பிறகு என் சந்ததியில் யாராச்சும் நிச்சயம் இதைச் செஞ்சு முடிப்பாங்க'' - ஒரு கிராமத்து மனிதனின் வார்த்தைகளில் உலகத்தை அளக்கிறார் கருணாநிதி. இவரது இனிஷியலே 'மரம்’ என்றாகிவிட்டது.  

தெரு விளக்கு

விழுப்புரம் மாவட்டம், சங்கீதமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி, கடலூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். மாதம் 22 ஆயிரம் சம்பளம். பிடித்தம்போக 17 ஆயிரம் ரூபாய் கைக்கு வரும். அதில் 10 ஆயிரம் ரூபாயை மரங்களுக்காகவே செலவு செய்கிறார் கருணாநிதி. ஓய்வு நேரத்தில் கூடுதல் பணம் ஈட்டும் வாய்ப்புகளைத் தேடி அலைபவர்களிடையே, கருணாநிதியின் முனைப்பு நிச்சயம் ஆச்சர்யம். இத்தனைக்கும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்பட மூன்று பிள்ளைகள். இடிந்துபோன வாடகை ஓட்டுவீட்டில் வசிக்கும் கருணாநிதியின் ஒவ்வொரு சொல்லும் செயலும் மரத்தைச் சுற்றியே சுழல்கிறது.

''எங்க கொள்ளுத் தாத்தா வெள்ளக்காரன் காலத்துல 150 ஏக்கரில் மரக்கன்னு நட்டு ஒரு காட்டையே உருவாக்கிஇருக்கார். எங்க தாத்தாவும் மரம் வளர்க்குறதுல ஆர்வம் உள்ளவர். அப்பாவுக்கு அதில் ஆர்வம் இல்லை. ஆனா, எனக்குச் சின்ன வயசுல இருந்தே மரம் மேல அவ்வளவு ஈடுபாடு. பத்தாங்கிளாஸ் வரைக்கும்தான் படிச்சேன். வீட்டுல படிக்கச் சொன்னாலும் எனக்கு அதுல ஆர்வம் இல்லை. காடு மேடு எல்லாம் சுத்தித் திரிவேன். எங்கேயாவது கரட்டுமேட்டுல ஏதாவது செடி முளைச்சுக்கிடந்தா, அதை நல்ல மண்ணுல பிடுங்கி நடுவேன். எங்கே விதை கிடைச்சாலும் அதை எடுத்து முளைக்கவெச்சு யார்கிட்டே யாவது கொடுப்பேன். நர்சரி போட்டு அதுல மரக் கன்னுங்களை உற்பத்தி செஞ்சு கொடுக்குற அளவுக்கு நிலமோ, வசதியோ என்கிட்ட இல்லை. அதனால, என் டிரைவர் வேலை சம்பளப் பணத்துல இருந்து மரக்கன்னுங்களை வாங்கி மக்களுக்குக் கொடுப்பேன். அதுக்காக யார் கேட்டாலும் உடனே கொடுக்குறது இல்லை. அவங்களுக்கு உண்மையிலயே மரம் வளர்க்குறதுல அக்கறை இருக்கானு தெரிஞ்சுக் கிட்டுதான் கொடுப்பேன்.

ஆரம்பத்துல எங்க கிராமத்துக்கு மட்டும்தான் இதைச் செஞ்சேன். அப்புறம் நாள் போகப் போக... சுத்தியுள்ள ஊர்கள், விழுப்புரம் மாவட்டம்னு பரவி... இப்போ தமிழ்நாட்டுல எங்கே கூப்பிட்டாலும் போய் மரக்கன்னுங்க தந்துக்கிட்டு இருக்கேன். பொது இடங்களில் மட்டும் இல்ல, மக்களோட சொந்தத் தோட்டத்துலயும் நான் கொடுத்த கன்னுகள் மரமா வளர்ந்து நிக்குது. சிலர் ஆயிரம் கன்னுங்ககூடக் கேப்பாங்க. அதையும் நர்சரியில இருந்து குறைந்த காசில் வாங்கியாந்து கொடுப்பேன். ஆனால், என் மூணு ஏக்கர் நிலத்துல நான் தோட்டம் அமைக் கலை. அப்படிச் செஞ்சா, 'என் நிலம்... என் மரம்’னு சுயநலம் வந்துடும். அப்புறம், மரம் வளர்க்குற நோக்கம் சிதைஞ்சுபோயிடும்!'' என்று அவர் பேசுவதைக் கேட்டால், 'இந்த மனிதரின் அன்பைப் பெறுவதற்காக நாம் ஓர் மரமாகவே மாறிவிடக் கூடாதா’ என்று தோன்றும்.

தெரு விளக்கு

எங்கு சென்றாலும் விதைகளைப் பொறுக்கிக்கொண்டு வந்துவிடுகிறார். உள்ளூரில் வயதான பாட்டிகள் சிலருக்கு 50, 100 என்று பணம் கொடுத்து விதைகளைப் பொறுக்கி வாங்கிக்கொள்கிறார். அவற்றைப் பையிலேயே வைத்துக்கொண்டு, அவ்வப்போது சந்திப்பவர்களிடம் கொடுத்து நடச் சொல்கிறார். ''இந்த ஏரியா முழுக்க ஆயிரக்கணக்கான நாட்டு பாதாம் மரங்களை உருவாக்கியிருக்கேன். இது சாக்கடைத் தண்ணீர்லகூட வளரும். ஒரே வருஷத்துல பெருசா வளர்ந்து, காய்க்க ஆரம்பிச்சுடும். விக்குற விலைவாசியில ஏழை மக்கள் பாதாம் பருப்பு வாங்கிச் சாப்பிட முடியுமா? இந்த மரத்தை வெச்சா நம்ம வீட்டு வாசல்லயே பாதாம் கிடைக் கும். இப்படி எந்த இடத்துல என்ன மரத்தை நடணும்னு கவனமாப் பார்த்துதான் நடுறேன்.

யாருக்காவது பிறந்த நாள்னு தெரிஞ்சா, அவங்க விரும்புற ஒரு மரக்கன்னைக் கொடுத்திருவேன். கல்யாணத்துக்கு தாம்பூலப்பை கொடுக்குறதுக்குப் பதிலா, மரக்கன்னு கொடுக்குற பழக்கத்தைப் பல வருஷத்துக்கு முன்னாடியே நான் ஆரம்பிச்சு வெச்சேன். இன்னைக்குப் பல இடங்களில் அப்படிச் செய்யுறாங்க. விழுப்புரம் மாவட்டத் துல எனக்குத் தெரிஞ்சு யாருக்குப் பெண் குழந்தை பிறந்தாலும் உடனே, ஒரு சந்தன மரக் கன்னு கொடுத்திருவேன். ஏன்னா, ஒரு சந்தன மரம் ஊக்கமா வளர்ந்து வர 25 வருஷம் ஆகும். சரியா, அந்தப் பெண் குழந்தைக்குத் திருமணம் ஆகும்போது அந்த மரம் கல்யாணச் செலவுக்கு உதவியா இருக்கும். எனக்கு ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. அவங்களுக்காக நான் எதையும் சேர்த்துவைக்கலை. ஆளுக்கு ரெண்டு சந்தன மரம் நட்டுருக்கேன்... அது போதும்!'' என்கிற கருணாநிதி, மரம் நடுவதற்காகக் கடன் வாங்கி அதையும் திருப்பிச் செலுத்திக்கொண்டு இருக்கிறார்.

''பணம் ஒரு பெரிய பிரச்னை இல்லைங்க. நாம நட்ட மரம் செழிப்பா வளர்ந்து காய்ச்சு நிக்கும்போது மனசுக்கு ஒரு நிம்மதி வருது பார்த்தீங்களா... அதுக்கு ஈடு எதுவுமே இல்லை. கணக்கன்குப்பம் கிராமத்துல ஒருத்தருக்கு 1,000 சப்போட்டா மரம் பல வருஷத்துக்கு முன்னாடி கொடுத்திருந்தேன். அதை நானே மறந்துட்டேன். போன வாரம் அந்தப் பக்கமாப் போகும்போது திடீர்னு ஒரு இளைஞர் என்னைக் கூப்பிட்டார். போனா, 10 கிலோ சப்போட்டாவை என் கையில திணிச்சு, 'எல்லாம் நீங்க கொடுத்த மரம்’னு சொன்னதும் நெகிழ்ச்சியா இருந்துச்சு. ஆனா, நான் கொடுத்த செடில இருந்து விளைஞ்சதுங்கிறதுக்காக யார்கிட்டயும்  இலவ சமா எதையும் வாங்க மாட்டேன். 100 ரூபாய் கொடுத்துட்டுதான் அந்த சப்போட்டாவை வாங்கிட்டு வந்தேன்.

அந்தக் காலத்துல சாலையில் வரிசையா இச்சி மரம், புளிய மரம், வேப்ப மரம், மருத மரம், ஆல மரம், அரச மரம், வில்வ மரம், அத்தி மரம், விளா மரம், மா மரம்னு எல்லா மரத்தையும் நட்டாங்க. அந்த மரங்கள் வழிப்போக்கனுக்கு உணவாகவும், கிராமத்துக் கால்நடைகளுக்குத் தீவனமாகவும், பறவைகளுக்குக் கூடாகவும் பயன்பட்டுச்சு. இதனால பல்லுயிர்ப் பெருக்கம் சரியா இருக்கும். உணவுச் சங்கிலி அறுபடாது. ஆனா, இப்போ என்ன நடக்குது? நான்கு வழிச் சாலைங்கிற பேர்ல 50 வருஷ மரத்தை ஒரே நிமிஷத்துல வெட்டிப் போட்டுர்றாங்க. கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் வரை 12 ஆயிரம் புளிய மரங்களை வெட்டியிருக்காங்க. கன்னியாகுமரி வரை வெட்டுன மரத்துக்குக் கணக்குவழக்கே இல்லை. எல்லாத்தையும் வெட்டிட்டு ரோட்டுக்கு நடுவுல பூச்செடிகளை நடுறதால யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவை வெள்ளைக்காரன் ஆளும்போது நாட்டுல 33 சதவிகிதம் காடு இருந்துச்சு. எப்போ வனத் துறை உருவானதோ,

தெரு விளக்கு

அப்போ காடுகள் அழிய ஆரம்பிச்சிடுச்சு. இப்போ இந்தியாவில் 22.5 சதவிகிதம் காடுதான் இருக்கு. அதை மாத்த என்னால முடிஞ்ச அளவில் நான் போராடிக்கிட்டு இருக்கேன்.

என்னை ஊருக்குள்ள கோமாளி மாதிரிதான் பார்க்குறாங்க. என் காதுபடவே கிண்டல்கூடப் பண்ணுவாங்க. ஆனா, எதைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. இந்த மரம் எனக்கு மகிழ்ச்சியை மட்டும் தரலை. என் அடையாளத்தையே மாத்தி இருக்கு. என் கொள்ளுத் தாத்தாவை வெள்ளையக் கவுண்டர்னு சொன்னாங்க. என் தாத்தாவை துரைசாமிக் கவுண்டர்னு சொன்னாங்க. என்னை 'மரம்’ கருணா நிதினு சொல்றாங்க. பேருக்குப் பின்னால இருந்த சாதியை, பேருக்கு முன்னால் வந்த மரம் அழிச்சிருச்சு. இதைவிட வேற என்னங்க பெருமை வேணும்?''

பசுமை வாழ்க்கை!

வாழை, எலுமிச்சை, பப்பாளி, மாதுளை, கொய்யா, முருங்கை... இந்த ஆறு மரங்களும் இருந்தால், ஒரு குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் இவற்றில் இருந்தே கிடைத்துவிடும் என்கிறார் கருணாநிதி. கூடுதல் இடம் இருந்தால் ஐந்து வகைக் கீரைகளையும் இன்னும் இடம் இருந்தால் ஐந்து வகைக் காய்கறிகளையும் நட்டுவிட்டால், எதற்குமே அங்காடிக்குச் செல்லத் தேவை இல்லை என்கிறார்.

• பேருந்து ஓட்டுநரான கருணாநிதி வேலைக்குச் செல்லும்போது எப்போதும் சில மரக்கன்றுகளையும் விதைகளையும் கையிலேயே வைத்திருக்கிறார். யாரேனும் கேட்டால் கொடுக்கிறார்.

• வனத் துறை, தோட்டக் கலைத் துறை, விவசாயத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் மரம் வளர்ப்புபற்றிப் பயிற்சி கொடுக்க இவரை அழைத்துச் செல்கின்றனர். அப்படிச் சென்றதில் சென்னையைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர் மாதம் 5,000 ரூபாய் இவருக்குத் தர ஆரம்பித்திருக்கிறார். அந்தப் பணத்தையும் மரம் நடவே செலவிடும் கருணாநிதி, 'இன்னும் எத்தனை லட்சங்கள் பணம் வந்தாலும் மரம் நட மட்டுமே பயன்படுத்துவேன்’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism