Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

ணிக அடிப்படையில் இணையத் தைப் பயன்படுத்தத் தொடங்கி இந்த வருடத்துடன் 20 வருடங்கள் ஆகின்றன. பதின்ம வயதைக் கடந்து 20-களில் காலடி எடுத்து வைத்திருக் கும் வணிக அடிப்படை இணையம் இன்று எப்படி இருக்கிறது?

 2 பில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். 5 பில்லியன் மக்களுக்கு இன்னும் இணைய இணைப்பு இல்லை. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான டிஜிட்டல் வர்க்கப் பிரிவு என்று சிந்தனைகளைப் பார்க்க முடிகிறது. பாரம்பரிய ஊடகங்களான அச்சு பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் இருக்கும் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பைவிட மூன்று மடங்கு மதிப்பு இணைய நிறுவனங்களுக்கு இருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளம்பரங்களைப் பொறுத்தவரை, தொலைக்காட்சி இன்னும் பெரிய அளவில் மதிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து இணையம். அச்சு ஊடகம் அதோகதியானபடியே இருக்கிறது. அதுவும் குறிப்பாக, தினசரிகளின் முக்கிய வருமானமான வரி விளம்பரங்களை இணையம் சுருட்டி, தின்று ஏப்பம் விட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ஆனால், குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை 10 சதவிகித மக்களிடம் மட்டுமே இணைய இணைப்பு இருக்கிறது. இணைய விளம்பரங்கள் என்பது இன்னும் அழுத்தமான தாக மாறவில்லை. சந்தா தேவைப்படும் தொலைக்காட்சி சேனல்களுக்கு முக்கியத்துவம் குறைந்தபடியே இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இணையத்தின் மூலம் நுகர முடிகிற ஹுலு (www.hulu.com) போன்ற தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் வளர்ந்தபடி இருக்கின்றன.

இணைய விளம்பரங்களைப் பொறுத்தவரை கூகுள் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. அதற்கடுத்த இடத்தில் ஃபேஸ்புக். யாஹூ, மைக்ரோசாஃப்டின் www.msnbc.com, AOL போன்ற நுழைவாயில் இணைய தளங்களின் (Portals) மதிப்பு அதள பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது. 2020 வாக்கில் இவை மறைந்தே போகலாம்.

உலகில் ஏழு பேரில் ஒருவர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார். ட்விட்டர், லிங்க்ட்இன், கூகுள் போன்ற அனைத்து சமூக ஊடகங்களின் ஒட்டுமொத்தப் பயனீட்டைவிட, ஃபேஸ்புக்கின் பயன்பாடு அதிகம். இதனால், கூகுளைவிட ஃபேஸ்புக்குக்கு விளம்பரதாரர்கள் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார்களா என்றால், அது சந்தேகம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், இணைய வரலாற்றிலேயே ஈடு இணையற்ற ஒரு தொழில்நுட்பம் இதுவரை இருக்கிறதென்றால், அது கூகுளின் தேடல் இயந்திரம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். பொருள் ஒன்றை விற்பதற்காக விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

வைத்துக்கொள்ளுங்கள். கூகுளில் அதற் கான விளம்பரத்தைக் கொடுப்பது வணிக வளாகத்தில் இருக்கும் விளம்பரத்தைப்போன்றது. ஃபேஸ்புக்கில் கொடுக்கும் விளம்பரமோ, பார்ட்டி ஒன்றில் கொடுக்கப்படுவதைப் போன் றது. ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலமாக வரும் வருமானம் மிகக் குறைவானதாகவே இதுவரை இருக்கிறது.

மொபைல் தொழில்நுட்பமே எதிர்காலம் என்பது திட்டவட்டமாகிவிட்டது. கணினிகளின் விற்பனை முழுதும் சரிந்துவிட்டது. மிகப் பிரபலமான HP நிறுவனம் தள்ளாடும் நிலைக்கு வந்துவிட்டது. Dell  நிறுவனமும் அதுபோலவே. பயன்படுத்தப்படும் கணினி பழசாகியோ, பழுதாகியோ போனால், அதன் இடத்தில் மொபைல் சாதனங்களான Tablet, Smartphone, eReader போன்றவற்றை வாங்கிவிடும் பழக்கம் நுகர்வோருக்கு வந்திருப்பது தெரியவருகிறது. இந்தப் பழக்கம் வரும் பல வருடங்களுக்கு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.

எதையெல்லாம் கணினியில் செய்தார்களோ, அவற்றையெல்லாம் மொபைல் சாதனங்களில் செய்யத் தொடங்கிவிட்டனர் பயனீட்டாளர்கள். இளைய தலைமுறை வேகமாக மொபைல் யுகத்தை ஏற்றுக்கொள்வதால், அவர்களுக்குப் பிடித்த மொபைல் விளையாட்டுகளின் பயனீடு மாதாமாதம் அதிகரித்தபடியே இருக்கிறது. இசை கேட்டு ரசிப்பது அதற்கு அடுத்த பயன்பாடு. அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவது; செய்திகளைப் படிப்பது; வலைதளங்களில் உலா வருவது எனப் பல்வேறு பயன்பாடுகள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு பயன்பாடு தொலைக்காட்சி முன்னால் மொபைல் சாதனம் சகிதம் அமர்ந்து, பார்க்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய பின்னூட்டங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது அதிகரித்தபடி இருக்கிறது. இதனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பயனீட்டாளர்கள், சமூக ஊடகப் பங்களிப்புடன் ஒன்றிணைத்து தங்களது நிகழ்ச்சிகளை நடத்தும் நிலை விரைவில் வந்துவிடும். உதாரணத்துக்கு, திருச்சி பகுதியில் வெள்ளத்தால் பாதிப்பு என்றால், செய்திகளை வாசிப்பவர், நீங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் #Thiruchi-Flood என்ற பதத்தைப் (hashtag) பயன்படுத்தி ட்வீட்டுகள் அனுப்பச் சொல்ல, அதை நேரடியாகக் கண நேரத்தில் காட்ட முடியும்.

காணொளிகளை நுகரும் பழக்கம், அதுவும் குறிப்பாக, இரவு நேரத்தில் மொபைல் சாதனங்களில் இருந்து பார்க்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. மொபைல் சாதனங் களை எளிதாகக் கையில் எடுத்துக்கொண்டு ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு நகரவோ, அல்லது படுத்துக்கொண்டு பார்க்கவோ எளிது என்பதால், பயன்பாடு அதிகரித்திருக்கிறது என யூகிக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி நேரடியாகப் பொருட்களை வாங்கும் பழக்கம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த வாரத்தில் வாடிக்கையாளர்களைக் கடைகளுக்கு வரவைத்து பொருட்களை விற்கும் brick & mortar  வணிக நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் மொபைல் திட்டம் இணைய வரலாற்றில் புரட்சிகரமானது. அது என்ன என்பதை  அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

-Log off

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism