Published:Updated:

ஒரு குயிலின் குமுறல்!

ஒரு குயிலின் குமுறல்!

ஒரு குயிலின் குமுறல்!

ஒரு குயிலின் குமுறல்!

Published:Updated:
##~##

50 ஆண்டுகள் பின்னோக்கிய பயணம் இது...

 சுதந்திரத்துக்கு முன், தமிழ்த் திரைப்படவுலகில் புதிதான பூங்காற்று ஈழத்தில் இருந்து ஜிவ்வென்று பிரவேசித்தது. தமிழ்ப் பட ரசிகர்கள் அந்தப் புதுமுகத்தைக் கண்டு ஆனந்தித்தனர்... அதிசயித்தனர்... பரவசப்பட்டனர். படத் தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களுக்குக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய அலைமோதினர். எல்லாம் கூடிவந்த வேளையில், எதிர்பாராதவிதமாக அந்த சினிமா நட்சத்திரம் படவுலகைத் துறக்க நேரிட்டது. 'கவர்ச்சிக் கன்னி’, 'இலங்கைக் குயில்’ என்றெல்லாம் பட்டங்கள் சூட்டப் பெற்ற அந்தத் தாரகை தவமணி தேவி. இன்று ராமேஸ்வரம் மேலத் தெருவில் வசிக்கிறார். அவரைச் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெற்றியில் பளீரெனப் பட்டையாக விபூதி. அகலமான குங்குமப் பொட்டு. மேக்கப் செய்வது ஏறக்குறைய மறந்துவிட்டது. தவமணிக்கு இப்போது 64 வயதாகிறது.

குறுக்கே நாம் கேள்விகள் கேட்கும் சிரமம்கூடத் தராமல், மடை திறந்த வெள்ளமாகத் தன் சாதனை களை, சோதனைகளை, வேதனைகளை நினைவு அலைகளாகக் கொட்டினார் தவமணி தேவி.

ஒரு குயிலின் குமுறல்!

''நாங்கள் அப்போது கொழும்பில் வசித்தோம். சொந்த ஊர் யாழ்ப்பாணத்துக்கு அருகில். ஆசாரமான பிராமணக் குடும்பம். அப்பா கதிரேச சுப்பிரமணியம், கொழும்பில் நீதிபதியாக இருந்தார். மாமா பால சிங்கதுரை, இலங்கை அரசில் அமைச்சராக இருந்தார். எங்கள் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள். பணக்காரர்களும்கூட. ஐந்து ஆண் பிள்ளைகள் இருந்த குடும்பத்தில், 'ஒரு பெண் குழந்தை வேண்டும்’ என்று பல கோயில்களுக்குச் சென்றுவந்த பிறகு நான் பிறந்ததால் தவமணி தேவி எனப் பெயரிட்டார்கள். அதனால் எனக்குச் செல்லம் அதிகம்.

பள்ளியில் படிக்கும்போது உடையப்பா என்ற பையனின் நட்பு கிடைத்தது. உடையப்பா பாடுவதிலும் நடனத்திலும் படுகெட்டி. எனக்குத் தமிழ்ப் பாடல்களைச் சொல்லித் தருவான். வீட்டில் பாசுரங்கள் பாடினதாலும் கிட்டப்பா பாடல்களை கிராமபோன் மூலம் கேட்டதாலும் எனக்கும் சங்கீத ஞானம் இருந்தது. வீட்டிலும் சங்கீதம் கற்க வசதி செய்து தந்திருந்தார்கள். கிட்டப்பாவின் 'தசரத ராஜ குமாரா...’ போன்ற பாடல்கள் மனப்பாடம்.

ஒரு முறை வகுப்பில் பாட்டுப் போட்டி நடந்தபோது, 'கை ராட்டை சுற்றுவோம்’ என்ற இந்திய தேசபக்திப் பாடலைப் பாடினேன். அது வீட்டுக்குத் தெரியவர, 'இந்திய தேசபக்திப் பாடலைக் கொழும்பில் பாடுவதா? இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிந்தால், உன்னைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்’ என்று வீட்டில் ஆளாளுக்கு என்னைக் கண்டித்தார் கள். அந்த நேரம், இலங்கையும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தது. நல்ல வேளையாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

சிங்கள மொழி எனக்கு எழுதப் படிக்கத் தெரியும். சிங்களப் பாடல்களையும் பாடுவேன். இலங்கை வானொலியில் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 'இலங்கைக் குயில்’ என்ற பட்டத்தை இலங்கை வானொலி எனக்கு வழங்கியது. வானொலி பாடலைக் கேட்ட மாலத்தீவு மன்னர் பாராட்டிப் பரிசு வழங்கினார். தொடர்ந்து, பத்திரிகை களில் எனது படத்துடன் செய்தி வந்ததும் 'குடும்ப கௌரவமே போச்சு’ என்று உறவினர்கள் கோபப்பட்டார்கள். அவர் களைப் பெரும்பாடுபட்டு அப்பா சமாளித்தார்.

லார்டு வேவல் இலங்கைக்கு வந்திருந்தபோது, அவர் முன்னிலையில் நடனமாடிப் பாராட்டுப் பெற்றது என்னைப் பிரபலப்படுத்தியது. அந்தச் சமயம் எம்.கே.தியாக ராஜ பாகவதர் தனது குழுவினருடன் கச்சேரிகள் செய்ய இலங்கைக்கு வந்திருந் தார். பாகவதரின் கச்சேரிக்கு நாங்களும் சென்றிருந்தோம். இறந்துபோன என் அண்ணன்போலவே இருந்த பாகவதரைப் பார்த்ததும் 'இறந்துபோன மகனைப் போலவே பாகவதர் இருக்கிறாரே... ஒருவேளை, மகன்தான் மீண்டும் பாகவதராகப் பிறந்துவிட்டானோ...’ என்று அம்மா மருகத் தொடங்கினார்.

கச்சேரி முடிந்ததும் பாகவதரைச் சந்திக்க அப்பா போனார். நானும் போனேன். என் தந்தையைக் கண்டதும், 'அப்பா... வாங்க... வாங்க...’ என்று பாகவதர் வரவேற்க... அப்பாவுக் கும் அதிசயம். தன்னை முன்பின் பார்த்திராத பாகவதர், அப்பா என்று ஏன் அழைக்க வேண்டும்? அம்மாவைப் போலவே 'மகன்தான் பாகவதர்’ என்று அப்பாவும் நினைக்க ஆரம்பித்துவிட்டார். பாகவதரை வீட்டுக்கு அழைத்தோம். வந்தார். நான் அவர் முன் பாடினேன். 'தங்கச்சி நல்லாப் பாடுது... என்கூட அழைத்துச் சென்று சினிமாவில் நடிக்கவைக்கிறேனே...’ என்று அப்பாவிடம் பாகவதர் அனுமதி கேட்டார். இதில் அப்பாவுக்கு விருப்பம் இல்லை. 'பார்க்கலாம்’ என்று நாசூக்காக மறுத்துவிட்டார்.

இலங்கையில் பாகவதரின் கச்சேரிகள் தொடர்ந்தபோது பாகவதருடன் வந்திருந்த அவரது தந்தை திடீரென இறந்துவிட, உடலைத் தனது சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லத் துடித்தார் பாகவதர். அந்தச் சமயத்தில் இறந்தவர்களின் உடலை ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்குக் கொண்டுசெல்வதில் அநேகப் பிரச்னைகள், நிர்வாகச் சிக்கல்கள். அதோடு, அநியாயத்துக்குப் பணச் செலவு. பாகவதர் எனது தந்தையிடம் வந்து, 'எத்தனை செலவானாலும் பரவாயில்லை. இறந்துபோன என் அப்பாவின் உடலை எனது அம்மாவுக்குக் கடைசி முறையாகக் காண்பித்தே ஆக வேண்டும். இதைச் செய்யலேன்னா, அவருக்கு மகனாப் பிறந்தது அர்த்தமில்லாமப் போயிடும்... நீங்கதான் எனக்கு உதவணும்’ என்று குழந்தையாக அழுதார்'' எனச் சற்று நிறுத்திப் பெருமூச்சுவிட்டார் தவமணி தேவி.

கதிரேச சுப்பிரமணியம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உடலைக் கப்பல் மூலம் தனுஷ்கோடிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். இதற்குப் பிறகு, பாகவதர் குடும்பமும் தவமணி தேவியின் குடும்பமும் மிகவும் நெருக்கமாயின.

''எனக்கு 13 வயதிருக்கும். என்னைப் பற்றி நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட 'மாடர்ன் தியேட்டர்ஸ்’ அதிபர் டி.ஆர்.சுந்தரம், தனது படத்தில் என்னை ஒப்பந்தம் செய்வதற்காகத் தனது உதவியாளரை இலங்கைக்கு அனுப்பிவைத்து இருந்தார். அப்பா முதலில் மறுத்தார். வந்தவர் எப்படியோ ஒரு மாதிரி அப்பாவைச் சம்மதிக்கவைத்தார். 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸும் தந்தார்.

ஒரு குயிலின் குமுறல்!

நாங்கள் தமிழகம் வந்தோம். ஸ்டுடியோவில் எங்களுக்கென்று வீடு தந்தார்கள். முதல் நாள் வைத்த டெஸ்ட்டில், வசனங்களை நான் உணர்ச்சிபூர்வமாகப் பேச, டி.ஆர்.சுந்தரத்துக்குப் பிடித்துவிட்டது. 'சதி அகல்யா’ படத்தின் ஹீரோயின் ஆனேன். எங்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தந்து, கண்ணியமாக நடத்தினார் டி.ஆர்.சுந்தரம். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், சினிமா சம்பந்தப்பட்ட எவரும் - சுந்தரம் உட்பட - நாங்கள் இருக்கும் வீட்டுக்கு வர மாட்டார்கள். அந்த சினிமா சூழ்நிலை எங்களுக்குப் பிடித்துப்போனது. 'சதி அகல்யா’வுக்குப் பிறகு 'ஷியாம் சுந்தர்’, 'சீதா ஜனனம்’ என்று பட வாய்ப்புகள் வந்தன. இந்தப் படங்களில் நடிக்க, இலங்கையில் இருந்து வந்து வந்து போவேன். எல்லாமே நல்ல கம்பெனிகள். அம்மா இறந்த கொஞ்ச நாளில், அப்பாவும் பதவியில் இருந்து ஓய்வுபெற... நானும் அப்பாவும் சென்னையில் குடியேறினோம்.

டி.ஆர்.சுந்தரமும் அப்பாவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்கள். சினிமா கெடுபிடி, டென்ஷனை மறக்க... சுந்தரம் அப்பாவுடன் செஸ் விளையாடுவார். சுந்தரமும் அப்பாவும் பேசவோ, விளையாடவோ அமர்ந்தால், யாரும் அங்கு போகக் கூடாது. நான் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டேன்.

'உத்தமபுத்திரன்’ படத்தில் பி.யு.சின்னப்பாவுக்கு சான்ஸ் தரும்படி ஒரு நாள் செஸ் ஆட்ட வேளையில் நான் சுந்தரத்திடம் சிபாரிசு செய்யப்போய்... ஆட்ட சுவாரஸ்யத்தைக் கெடுத்ததற்காக அவரிடம் நான் பயங்கரத் திட்டு வாங்கியதை என்னால் மறக்கவே முடியாது. அதே சமயம், சின்னப்பாவுக்கு அவர் சான்ஸ் தந்ததையும் நான் சொல்லாமல் இருக்க முடியாது.

1945-46-களில் நான் நடித்து வெளியான 'வனமோஹினி’ படம், இந்தியப் படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், படம் முழுக்க முழுக்க 'டார்ஜான்’ ஸ்டைலில் காட்டில் எடுக்கப்பட்டது. படத்தில் நான் ஓடி, ஆடி, தாவி, குதித்து ஆக்ஷன் ஹீரோயினாக நடித்தேன். காட்டு ராணியாக 'டூ பீஸ்’ உடை அணிந்து கவர்ச்சியாக நடித்திருந்ததுதான் லட்சக்கணக்கான புருவங்களை உயரச் செய்தது. அந்தச் சமயத்தில் இதுமாதிரியான கவர்ச்சி... புரட்சிகரமான திருப்பமாக அமைந்துவிட்டது. 'வனமோகினி’ வெற்றிப் பாதையில் ஓடியபோது, எனக்கு 17 வயது தான். தொடர்ந்து பட ஒப்பந்தங்கள் அதிகமாக வந்தன. 'விஜயா’ என்ற சொந்தப் படத் தயாரிப்பிலும் இறங்கினேன். இந்த நேரத்தில்தான், எனக்கு எதிர்ப்பு அலை உருவாகியிருப்பதை உணர்ந்தேன். ''தவமணியை ஒப்பந்தங்களில் இருந்து விலக்க வேண்டும். இதை மீறி ஹீரோயினாகப் போட்டுப் படத்தைத் தயாரித்தால், அதை ரிலீஸ் பண்ண விட மாட்டோம். படம் ஓடவும் அனுமதிக்க மாட்டோம்'' என்பது போன்ற மிரட்டல்கள். ஒரு நடிகரும் இரண்டு வசனகர்த்தாக்களும் என்னைத் திரையுலகைவிட்டு விரட்டக் கூட்டணி அமைத்துக்கொண்டு இப்படி மிரட்டல் காரியங்களில் ஈடுபட்டனர். என்னை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருந்த அத்தனை படத் தயாரிப்பாளர்களும் தர்ம சங்கடத்துக்கு ஆளானார்கள்.

இந்த எதிர்ப்பு எழுந்ததற்குக் காரணம் உண்டு. சில தயாரிப்பாளர்கள் மற்றும் சில டைரக்டர்களுக்கு, நடிகைகள் அவர்களது படங்களில் நடித்தால் மட்டும் போதாது... அவர்களுடன் 'எல்லா விஷயங்களிலும்’ அனுசரித்துப்போக வேண்டும். ஆனால், நான் கௌரவமான பட கம்பெனிகளில் மட்டுமே நடித்தேன்.

ஒரு தயாரிப்பாளர் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தங்க வளையல்களை அன்ப ளிப்பாகக் கொடுக்க வந்தார். ''தவமணி, போட்டுக்கொள்... உன் கைக்குப் பொருத்தமாக இருக்கும்'' என்று வழிந்தார். ''நீங்கள் ஏன் எனக்கு அன்பளிப்பு தர வேண்டும்?'' என்று கேட்டேன். ''சும்மாதான்...'' என்றார் அசட்டுச் சிரிப்புடன். ''உங்கள் படத்தில் நடிக்கத் தரும் சம்பளம் போதும்'' என்று நான் சொல்லிவிட்டேன். இதேபோல ஷூட்டிங்குக்கு நடுவே, இன்னொரு தயாரிப்பாளர், ''வாயேன்... தனியாகப் பேசிக்கொண்டிருக்கலாம்'' என்றார். ''அதை இங்கேயே பேசலாமே...'' என்று நான் அவரை கட் பண்ணித் துரத்தினேன்.

நான் கௌரவமாக வாழ விரும்பினேன். ஆனால், எதிராளிகளின் சூழ்ச்சியால் நான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட பல பட வாய்ப்புகளை இழந்தேன். சொந்தப் படத்தில் கணிசமான தொகை முடக்கப்பட்டுவிட்டதால், பொருளா தாரத்தட்டுப்பாடு வந்துவிட்டது.

அப்பாவையும் இழந்து தனியாக இருந்த நான், இலங்கைக்கும் போக முடியாமல் கார், நகைகளை விற்றுக் காலம் தள்ள ஆரம்பித்தேன். நடன, இசை நிகழ்ச்சி நடத்தலாம் என்று முயற்சித்தபோது, அதற்கும் எதிர்ப்பு எழுந்தது. திருச்சி தேவர் ஹாலில் எனது இசை நிகழ்ச்சியை நடத்தவிடாமல் கிளர்ச்சியே நடந்தது. பலவிதங்களிலும் சோதனைகள்... வேதனைகள்.

சென்னையில் கடைசி வரை வாடகை வீட்டிலேயே குடியிருந்தேன். நான் குடியிருந்த வீட்டின் பின்புறத்தில் இரவு நேரங்களில் திடீர் திடீரென எலும்புத் துண்டுகள் வந்து விழும். மாலையில் வீட்டு முற்றத்தில் கோலம் போட்டிருப்போம். காலையில் பார்த்தால் ஏதோ மந்திரித்துப் போட்ட மாதிரி எலுமிச்சம் பழங்கள், குங்குமப்பொடிச் சிதறல் போன்றவை கிடக்கும். இப்படி எல்லாக் கோணங்களிலும் நிராயுதபாணியான என் மீது 'நிழல் யுத்தம்’ ஒன்று தொடங்கப்பட்டது. 10 ஆண்டு காலம், உடைமைகளை ஒவ்வொன்றாக விற்று... காலத் தைத் தள்ளினேன். கடைசியாக, மன அமைதி தேடி ராமேஸ்வரம் சென்றேன்.

ராமேஸ்வரத்தில் ஒரு ஆசிரமத்தில் தங்கி, தினமும் கோயிலுக்குச் சென்று வந்தேன். நான் கோயிலுக்கு வந்து போவதை அறிந்த, ராமநாதசுவாமி கோயில் பட்டரான ஸ்ரீமத் கோடிலிங்க சாஸ்திரி, ஒரு நாள் ''ஏம்மா... நீங்க தவமணிதானே?'' என்று கேட்க... நான் ''ஆமாம்...'' என்றேன். ''நாங்க இருக்கும்போது நீங்க ஆசிரமத்தில் தங்கலாமா? உங்க குடும்பத்துடன் நேற்று இன்றைக்கா பழகி னோம்? தலைமுறையாப் பழகி வந்திருக்கோம். எங்க மாமா வீட்டில் தங்கலாம், வாங்க...'' என்று என்னை அழைத்தார்.

முன்பு நாங்கள் இலங்கை யில் இருந்தபோது, கோடி லிங்க சாஸ்திரியின் தந்தை தான் எங்கள் குடும்பப் புரோகிதர். வீட்டு விசேஷங்களின்போது, ராமேஸ்வரத்தில் இருந்து எங்களுக்காக இலங்கைக்கு வருவார். தந்தையுடன் கோடிலிங்க சாஸ்திரியும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்ததால் அவரை எனக்குத் தெரியும். அப்போது எங்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பும் இருந்தது. அந்த உரிமையோடுதான் சாஸ்திரி என்னை அழைத்தார்.

கோடிலிங்க சாஸ்திரிக்கு முன்னரே திருமணம் நடந்திருந்தது. ஆனால், மனைவி இறந்துவிட்டார். எனது பிரச்னைகளை அறிந்த சாஸ்திரியின் மாமா, என்னைக் கோடிலிங்க சாஸ்திரிக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். என்னையும் வெகுவாகக் கேட்டுக்கொண்டார்.

எனக்கும் சாஸ்திரிக்கும் 1962, நவம்பரில் திருமணம் நடந்தது. நானும் சினிமா உலகை மறந்து ஆன்மிகத்தோடு கூடிய புதிய வாழ்வை ஏற்றேன்!''

கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துக்கொண்டு புன்னகைத்தார் தவமணி தேவி.

- பிஸ்மி பரிணாமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism