Published:Updated:

பேயோன் பக்கம்!

பேயோன் பக்கம்!

இன்ஸ்பெக்டர் குமார் துப்பறிகிறார்

மரணக் கிணறு

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'வெல், வெல், வெல்!' என்றார் இன்ஸ்பெக்டர் குமார் கிணறுகளை எண்ணியபடி. மூன்று வீடுகளுக்குப் பின்னே மூன்று கிணறுகள். ஈரம் சொட்ட இரண்டு பிணங்கள். மூன்றாவது ஆள் மட்டும் பிழைத்துவிட்டான். ஒரு பிணத்தின் திறந்த வாயில் இன்னும் இருந்த கிணற்று நீரில் இரண்டு தலைப்பிரட்டைகள் விளையாடிக்கொண்டிருந்தன. இரு பிணங்களும் மிகையான அட்டென்ஷனில் படுத்திருப்பது போல்இருந்தது. ஏனென்றால், விண்வெளி வீரர்களின் பிராண வாயு போல் முதுகில் கனமான செவ்வகப் பாறை கட்டப்பட்டிருந்தது. இருவருக்கும் 30 வயதுக்கு மேல் இருக்காது. பிழைத்தவனை உடை மாற்றி உட்காரவைத்திருந்தார்கள்.

சம்பவக் கிணறுகளைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் திரண்டிருந்தது. தொலைக்காட்சி ஒளிப்பதிவில் விழ எட்டிப்பார்ப்பது போல் பல தலைகள் பிணங்களைப் பார்க்க எம்பின.

குமார் எரிச்சலடைந்தார். 'ஃபர்ஸ்ட் ரோ பாத்துட்டீங்கன்னா நகருங்க, மத்தவங்களுக்கு வழி விடுங்க' என்று அதட்டினார். முதல் வரிசைக்காரர்கள் முணுமுணுத்தபடி விலகிச் செல்ல... பின்னாலிருந்தவர்கள் முன்னே வந்தனர். மூன்று கிணறுகளையும் எட்டிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

பேயோன் பக்கம்!

'யாரு முதல்ல பாத்தது?' என்று குமார் கேட்டதும் எங்கோ மூலையிலிருந்து ஒரு இளைஞன், 'நான்தான் சார்!' என்று கைதூக்கிக் கத்தினான். எல்லோரும் அவனுக்கு வழிவிட்டார்கள்.

'என்ன நடந்துது சொல்லு?'

'என் பேரு கணேஷ் சார். அங்க படுத்திருக்காருல்ல சார் மாணிக்கம் (முதல் பிணம்), அவரப் பாக்க வந்தேன் சார். தொப்புனு சத்தம் கேட்டுச்சு. இவரு (பிழைத்தவன்) கெணத்துலருந்து ஏற ட்ரை பண்ணிட்டிருந்தாரு. நான் ஒரு கயிறப் போட்டு மேல ஏத்துனேன். பக்கத்துக் கிணத்துலயும் ஆள் விழுந்திருக்குன்னு இவர் சொன்னாருன்னு உள்ள பாத்தா, ஒரு ஆள் கெடந்தாரு. பாடிய வெளிய எடுத்தோம். அதுக்கப்புறம் என் ஃப்ரெண்டப் பாக்கப்போனா, அவர் வீட்ல இல்ல. சரி, கெணத்துல இருப்பாரானு பாத்தேன். அங்கதான் சார்பொணமாக் கெடக்கு றாரு!' என்று முடிக்கும்போது குரல் கம்மியது அந்த இளைஞனுக்கு.

இன்ஸ்பெக்டர் மாற்று ஆடை அணிந்த மூன்றா மவனை ஏற இறங்கப் பார்த்தார்.

'என்னய்யா, கல்லு சரியா கட்டலியா?' என்றார்.

'ஆமா சார், பொழச்சிட்டன் சார்' என்று குழைந்தான் அந்த வாலிபன்.

பேயோன் பக்கம்!

'உம் பேரு என்ன? உம் பேருக்கு அப்புறம் என்ன நடந்துச்சு?'

'எம் பேரு சீனிவாசன்ங்க சார். இந்தப் பக்கமாப் போயிட்டிருந்தப்ப பெருசா ஏதோ சத்தம் கேட்டுச்சுன்னு வந்து பாத்தேங்க. ஒருத்தர் கெணத்துல மூழ்கிட்டுஇருந்தாரு. யாருன்னு பாக்கச் சொல்லோ பின்னாலேந்து மண்டைல யாரோ ஓங்கி அடிச்சாங்க சார். நெக்ஸ்ட் முளிச்சுப் பாத்தா, கெணத்துல கெடக்குறேன். எனக்கு நீச்சல்கூடத் தெரியாதுங் சார். இவர்தான் காப்பாத்துனாரு. அப்புறம் இவரு சொன்ன மாதிரி ரெண்டு பாடிய வெளிய எடுத்தோம்' என்று சொன்னவனின் பின் மண்டையை குமார் தடவிப் பார்த்தார். வீங்கித்தான் இருந்தது.

'எங்க, சட்டையக் கழட்டு பாப்போம்' என்றார் இன்ஸ்பெக்டர்.

சீனிவாசன் உடலுறவு அவசரத்தில் கழற்றுவதுபோல் பரபரவென்று சட்டையைக் கழற்றினான். உடலின் முன் பகுதியில் சில இடங்களில் நேர்த்தியான கீறல்கள். தடயவியல் நிபுணர் அவன் கிணற்றில் விழுந்தபோது அணிந்திருந்த ஈர ஆடைகளையும் அவற்றில் இருந்த பொருட்களையும் குமாரிடம் காட்டினார். அதில் குமாரைக் கவர்ந்தது ஒரு பேனாக் கத்தி. அவர் அதை எடுத்துக் கூர்மையைச் சோதித்தார், பிறகு முகர்ந்து பார்த்தார்.

பேயோன் பக்கம்!

'இப்ப நான் ஒரு கதை சொல்லட்டுமா? நீயும் கணேஷ§ம் மாணிக்கத்த பிளான் போட்டுக் கொலை பண்றீங்க. அத நடு வீட்டுக்காரரு பாத்துடுறாரு. அவரையும் அதே மாதிரி கல்லக் கட்டி கெணத்துல போட்டுத் தள்றீங்க. உங்க ரெண்டு பேர் மேலயும் பழி விழக் கூடாதுன்றதுக்காக நீயும் விழுந்த மாதிரி காட்டிக்க ஒரு கல்லக் கெணத்துல போடுறதா பிளான் பண்றீங்க. ஆனா, கணேஷ§ உன்னைத் தீத்துக்கட்ட பிளான் போட்ருக்கான். உன்னை அடிச்சுப் போட்டு கல்லக் கட்டி கெணத்துல தள்றான். உனக்கு கணேஷ§ மேல முன்னாடியே நம்பிக்கை இல்ல. தற்காப் புக்காக பாக்கெட்ல பேனாக் கத்தி வச்சிருக்க. கணேஷ§ பய டென்சன்ல கல்ல கொஞ்சம் லூசாக் கட்டிட்டான். நீ கத்தியால கயித்தை அறுக்குறப்ப உடம்புல காயம் பட்டிருக்கு. நீ வெளிய வர்றதுக்குள்ளாற ஜனம் சேந்துருச்சு. மாட்டிக்காம இருக்க நீங்க திருப்பியும் தோஸ்தாயிட்டீங்க. ரைட்டா?'

கணேஷ§ம் சீனிவாசனும் இன்ஸ்பெக்டரின் கதை சொல்லலில் வெகுநேரமாய் கட்டுண்டிருந்தார்கள். தப்பிக்க வழி தேடி இருவரின் கண்களும் அலை பாய்ந்தன. ஆனால் 114 லத்தியை உயர்த்தித் தயாராக இருந்தார். தடயவியல் நிபுணரும் பேனா கத்தியை அது இருந்த பாலிதீன் பையுடன் சேர்த்துக் காட்டி மிரட்டினார்.

இன்ஸ்பெக்டர் சூழலை ரசித்துப் புன்னகைத்தபடி இருவரையும் கேட்டார், 'எதுக்குடா கொன்னீங்க?'

சிநேக் பார் சிநேகிதர்

'தம்பி, எனக்கு ஒரே ஒரு டீ குடுப்பா. சரியா?' என்றேன் டீ மாஸ்டரிடம். 'ரைட்டு சார்' என்றார் மாஸ்டர். டீக்கடைக்குள் இரண்டு பேர் மௌனமாக தேநீர் கிளாஸுக்குள் ஊதிக்கொண்டிருந்தார்கள். எனக்கு முன்பு ஒருவருக்கு 'எஸ்.பி. டீ’ தயாராகி வந்தது. மாஸ்டர் இஞ்சியை இடித்துக்கொண்டு இருந்தார். பொழுதை ஓட்ட நான் கடை உரிமை யாளரிடம் பேச ஆரம்பித்தேன்.

பேயோன் பக்கம்!

'தெனமும் இவ்ளோ பேருக்கு டீ போட்டுத் தர்றீங்களே, யாருமே காசு குடுக்காட்டி உங்க கடை நொடிச்சுப்போயிரும்ல?'

துண்டுச் சீட்டில் பொடி எண்களில் கணக்கு எழுதிக்கொண்டிருந்த உரிமையாளர், நான் பேசி முடிக்கும்போது திடுக்கென நிமிர்ந்தார். சிறிது நேரம் என்னைப் பார்த்தார்.

'கண்டிப்பா சார். என் குடும்பமே நடுத் தெருவுக்கு வந்திரும்'' என்றார் அமைதியாக.

'அது ரொம்பக் கஷ்டமாச்சே! செலவுகள சமாளிக்க முடியாது பாத்துக்குங்க' என்றேன்.

'ஆமா சார். கஷ்டமாத்தான் இருக்கும்.'

'ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாது. குழந்தைங் கள வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. புள்ளைங்க படிக்காட்டி வேல கெடைக்காது. நம்ம கடைசிக் காலத்துல நம்மளோட அவங்களும் சேந்துல்ல கஷ்டப்படுவாங்க?'

'ஆமா சார், நாம நிம்மதியாத் தனியாக் கஷ்டப்பட முடியாது.'

'சரியா பாயின்ட்டைப் புடிச்சீங்க சார். அதுக்காகத்தான் சொல்றேன், ஒவ்வொரு காசும் முக்கியம். இன்னெக்கி அஞ்சு காசுக்கு வேல்யூ இல்லாம இருக்கலாம். ஆனா, எல்லாக் காசும் சேந்தா அதோட வேல்யூ நமக்கு யூஸ் ஆகும். பிசினஸ்ல மறக்கக் கூடாத விசயம் இதுதான். இல்லன்னா தாலி அந்துரும்.'

'ஆமா சார்.'

இன்னும் எவ்வளவு நேரம் இவருடன் பேச வேண்டியிருக்குமோ என்று யோசிக்கையில் எனக்கான தேநீர் கைக்கு வந்தது. ஆனால், அதீத சூடு. 'ஆத்திக் குடுப்பா' என்று மாஸ்டரிடம் நீட்டினேன். ஆற்றிக் கொடுத்தார். 'கொஞ்சம் சக்கரை...'

தேநீர் தீர்ந்ததும் கிளாஸை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு உரிமையாளரிடம் காசு கொடுத்து 'வரட்டுமா?' என்று கிளம்பினேன். இரண்டடி எடுத்துவைத்த பின் இரு காதுகளையும் அழுத்தமாகப் பொத்திக்கொண்டே நடந்தேன். அப்போதுதான் 'போறாம் பாரு சாவுகிராக்கி' என்று டீக்கடை உரிமையாளர் சொல்வது என் காதில் விழாது.

- புரட்டுவோம்...