Published:Updated:

ஒரு துறவியின் சாதனை!

ஒரு துறவியின் சாதனை!

ஒரு துறவியின் சாதனை!
##~##

குன்றக்குடி ஊரின் எல்லையில் நுழையும்போது -

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வண்ண மயில் வடிவத்தில் அமைந்துள்ள குன்றின் உச்சியில் குமரக் கடவுள் குடிகொண்டு இருக்கும் கோபுரம் கம்பீரமாகக் காட்சி தந்தது.

அழகிய தாமரைத் தடாகம். சிறிது இடைவெளிக்கு இடையே ஊர் மக்களுக்குப் பயன்படும் மூன்று ஊருணிகள். நான்கு கோபுரங்களை மையமாகக்கொண்டு மதுரை நகரம் அமைந்திருத்தல் போன்று - நான்கு தடாகங்களுக்கு நடுவில் அழகிய குன்றமைந்த ஊர் குன்றக்குடி.

சுகமான காலைப் பொழுதில், சுத்தமான கிராமப் பின்னணியில் அமைந்த தெருக்களைக் கடந்து மணியோசை தவழும் மடத்துக்குள் நுழைந்தோம்.

ஐந்து நிமிட இடைவெளிக்குப் பின்னர் அடிகளாரிடம் இருந்து அழைப்பு.

விளைந்த சிப்பி பிளந்து சிரிப்பது போன்று புன்னகை ஒளி. ''வாங்க... வாங்க...'' என்று கரம் கூப்பியபடி உட்காருவதற்கு இருக்கையைக் காட்டினார்.

''மயில் வாகனம் இல்லாதபோது முருகப் பெருமானுக்கு மட்டும்தான் இங்கே நின்றுகொண்டு இருக்க அனுமதி உண்டு... நீங்கள் உட்காரலாம்'' என்றார்.

விநாடிப் பொழுதையும் விரயம் செய்யாமல், பார்வையாளர்களைச் சந்திக்கிறார்.

அதிகாரிகள், ஏழைபாழைகள் எல்லோரையும் வித்தியாசமின்றி வரவேற்கிறார். இடையிடையே கோப்புகள் வருகின்றன. படித்துப் பார்த்துக் கையெழுத்திடுகிறார்.

'ஆறு காலப் பூஜை, ஆராதனை, ஆறுமுகப் பெருமானின் துதி பாடும் திருத்தொண்டு’ - இப்படிச் செயல்பட வேண்டிய ஒரு சமயத் துறவியா அல்லது ஒரு அமைச்சரின் அலுவலகத்தில் இருக்கிறோமா என்கிற சந்தேகமே எழுந்தது.

அடிகளார் தஞ்சை மாவட்டம், மயிலாடு துறைக்கு அருகே உள்ள நடுத்திட்டு என்ற கிராமத்தில் 11.7.1925-ம் ஆண்டு பிறந்தார். தந்தையார் பெயர் சீனிவாசப் பிள்ளை. தாயார் பெயர் சொர்ணத்தம்மாள். தாய் தந்தையர் இட்ட பெயர் அரங்கநாதன்.

குன்றக்குடி ஆதீனத்தின் முழுப் பொறுப் பும் அடிகளார் திருப் பார்வைக்கு வந்த ஆண்டு 1962. இதற்காக அவரைப் பாராட்டும் வகையில் மயிலாடுதுறை திருமடத்தில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. இங்கே உணவு படைக்கும்போது சைவப் பந்தி என்றும் சைவர் அல்லாதார் பந்தி என்றும் இலை போட்டார்கள். 'தன்னுடன் வந்த நண்பர்களுக்கு ஏன் இலை போடவில்லை?’ என்று அடிகளார் கேட்க, 'பிற ஜாதித் தொண்டர்களுக்கு இலை தனியாகப்போடப் பட்டு இருக்கிறது’ என்று பதில் வந்ததும் திகைத்துப்போன அடிகளார், 'சாதியை ஒழிக்கும் நோக்கம் உடையவர் நாம்... சாதி யைப் பாராட்டும் இந்த மகேஸ்வர பூஜை எனக்கு வேண்டியது இல்லை’ என எழுந்து வெளியேறிவிட்டார். அதன் பிறகு, அவரே சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்து, நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

ஒரு துறவியின் சாதனை!

நேமம் என்ற கிராமத்தின் திட்டப் பணிகள் குறித்துப் பேசுவதற்காக தவத்திரு அடிக ளார் மக்களைச் சந்திக்க வருகிறார் என்பது தெரிந்தவுடனேயே, அவரை வரவேற்க 500 பேருக்கு மேல் திரண்டிருக்கும் மக்கள் கூட்டம்... அந்தக் கூட்டத்தில் ஒவ்வொருவரையும் அடையாளம் தெரிந்து பெயர் சொல்லி அழைக்கிறார். அவர்களின் குறை களைக் கேட்கிறார் அடிகளார்.

''வீதி விளக்குகள் எரிவதே இல்லை'' என்ற குற்றச்சாட்டு.

''இவர்கள் வரி கட்டினால்தானே விளக்கு எரியும்'' என்கிறார் வந்திருக்கும் அதிகாரி.

''ஒரு சிலர் தவறு செய்யலாம்... பெரும்பாலோர் வரி கட்டத் தயாராக இருக்கிறோம். பல மாதங்களாக வரி வசூலிக்க யாரும் வர வில்லை'' என்று கிராமத் தலைவர் கூறுகிறார்.

''சரி, நாளைக்கு வரி வசூலிக்க நானே வருகிறேன்'' என்கிறார் பி.டி.ஓ.

''வாங்க! நானே பொறுப்பு ஏத்துக்கிட்டு வரியை வசூலிச்சுத் தர்றேன்'' என்கிறார் கிராமத் தலைவர்.

''ஆடு, மாடுகள்

வாங்குவதற்காக வங்கியில் வாங்கிய கடனை ஒரு சிலர் இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை'' என்று அடிகளாரிடம் புகார் செய்கிறார் வங்கி மேலாளர்.

கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்திவிட்டு, வங்கி அதிகாரியிடம் தனிமையில் மனிதநேயத்துடன் வேண்டுகோள் வைக்கிறார் அடிகளார்.

''வறட்சி அவர்களைத் தாக்கவில்லை என்றால் கட்டியிருப்பார்கள். முதலாளிக்கு வர வேண்டிய பணம் போனால் நட்டம். ஏழைகளுக்கோ கையில் இருக்கும் பணம் போனாலே நட்டம். அவர்கள் வறுமையோடும் வாழ்க்கையோடும் போராடுகிறவர்கள். அந்த மக்களிடம் கறாராக இல்லாமல் கொஞ்சம் நீக்குப்போக்குடன் நடந்துகொள்ளுங்கள். அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைக்கு நான் பொறுப்பு'' என்கிறார் அடிகளார்.

கூட்டம் முடிந்து புறப்படுகையில் சிலரைத் தட்டிக்கொடுக்கிறார், சிலரிடம் கை குலுக்குகிறார். விடைபெறும்போது, ''சென்ற முறை வந்தபோது சொன்னேன்... இந்த ஊரில் 400 வீடுகளுக்கு மேல் இருக்கிறது. வீட்டுக்கு ஒரு மரம் வைக்க வேண்டும் என்று. எத்தனை பேர் வைத்திருக்கிறீர்கள்? இன்னும் வைக்காதவர்கள் என்னைச் சந்தித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். மரம் நிறைய வளர்ந் தால்தான் காற்று அடிக்கும். காற்று வீசினால்தான் மழை பெய்யும், மழை பொழிந்தால் எல்லாத் துன்பங்களும் தீரும்'' என்று அறிவுப் பிரசாரம் செய்து, அவர்களிடம் இருந்து விடைபெறுகிறார் அடிகளார்.

குன்றக்குடிக்கு அருகில் பாரதியார் பெயரில் அமைந்துள்ள பொட்டாசியம் குளோரைடு தொழிற்சாலையைப் பார்வை யிடுகிறார். குன்றக்குடியைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள்.

நாள் ஒன்றுக்கு 1.2 டன் தீக்குச்சி மருந்து (பொட்டாசியம் குளோரைடு) தயார்செய்து கூட்டுறவுத் துறைகளுக்கு விற்கப்படுகிறது. மேலும் 18 டன் கூடுதல் உற்பத்திக்கும் அடிகளார் முயற்சி எடுத்துவருகிறார். இந்தத் தொழிற்சாலையில் அடிகளாரோடு சுற்றி வந்துபோது ஒரு பொறியாளருக்குரிய தொழிலறிவு அவரிடம் பொங்கி வழிவதைக் காண முடிந்தது.

அடிகளாரைக் கண்டதும் தொழிற்சாலையில் பணிசெய்துகொண்டு இருந்த பெண்கள், காலில் இருந்த மிதியடியைக் கழற்றிவிட்டு அவருக்கு வணக்கம் செலுத்துகின்றனர்.

இதைக் கவனித்த அடிகளார், ''உங்களுக்கு நூறு முறை சொல்லியிருக்கிறேன்... மரியாதை மனதில் இருந்தால் போதும்... கெமிக்கல் பகுதியில் வேலை செய்யும்போது காலில் செருப்பு இருக்க வேண்டும். இல்லையேல் ஆறாத புண் ஏற்பட்டுவிடும். மிதியடியைப் போட்டுக்கொள்ளுங்கள்'' என்று அறிவுறுத்து கிறார். ஆனால், அவர் வெறுங்காலுடனேயே நடந்துவருகிறார்.

''நீங்கள் மிதியடி அணியவில்லையே?'' - கேட்டோம்.

''பத்து ஆண்டுகளுக்கு முன்பு அரிஜனங் கள் வாழும் பகுதிக்குச் சென்றபோது

அவர்களின் துன்பத்தை நானும் உணரும் வகையில் வெறுங்காலுடனேயே நடந்து சென்றேன். பிறகு, அதையே பழக்கமாக்கிக்கொண்டேன். இப்போது என் நடைமுறை கள் அனைத்தும் 'நடையன்’ (செருப்பு) போடாமல்தான்'' என்கிறார் சிரித்தபடி.

பெரியாரின் பெயரில் குன்றக்குடியில் ஒரு முந்திரித் தொழிற்சாலை உள்ளது. இதில் ஏராளமாகப் பெண்கள் பணிபுரிகிறார்கள். ''இந்த முந்திரிப் பருப்புக்கு வடக்கே நல்ல கிராக்கி உள்ளது'' என்றார் ஓர் ஊழியர்.

முந்திரிப் பருப்புத் தோலைக்கூட வீண் செய்யாமல், அதில் இருந்து எண்ணெய் எடுத்து, அந்த எண்ணெயில் இருந்து பெயின்ட் தயார் செய்யப்படுகிறது.

இப்படி தவத்திரு அடிகளார் சிந்தனையில் உருவாகி, அரசின் ஆதரவோடும் வங்கிகளின் உதவியோடும் நடைபெற்றுவரும் ஒன்பது நிறுவனங்களுக்கு அடிகளார் பதவி இல்லாத நிர்வாகி. குன்றக்குடியைச் சுற்றி உள்ள 22 கிராமங்களுக்கும் அங்கு வாழும் 50 ஆயிரம் மக்களுக்கும் வாழ்வளிக்கும் ஜீவ நதிகளாக இந்த நிறுவனங்கள் உள்ளன.

அடிகளார் பிறந்தது தஞ்சை மாவட்டம். குன்றக்குடி மடம் அமைந்திருக்கும் இடம் செட்டிநாட்டுப் பகுதி... விருந்தோம்பல் பண்புக்குச் சொல்லவா வேண்டும்!

ஒரு நாள் அடிகளார் ஊழியர்களை அழைத்து, ''நாளை நமது மடத்துக்கு சிவகங்கை மன்னர் வருகை தருகிறார். அவருக்கும் அவருடன் வருகிறவர்களுக்கும் மிகச் சிறந்த வகையில் உணவு தயாரிக்க வேண்டும். பூரண கும்ப மரியாதைக்கும் ஏற்பாடு செய்யுங்கள்'' என்று கட்டளையிட்டார்.

மறு நாள் பணியாளர்கள் ஆர்வத்தோடு சுவைமிகுந்த பல்வேறு வகையான உணவு களைத் தயாரித்துவைத்தார்கள்.

மதியம் 12 மணி அளவில் மடத்து நிலங்களில் கூலி வேலை செய்யும் ஆண்களும் பெண்களும் பண்ணைகளில் பணிபுரியும் தோட்டக்காரர்களுமாக 40 பேர் மடத்தின் வாயிலுக்கு வந்தார்கள். அடிகளார் அவர் களுக்குப் பூரணகும்ப மரியாதை கொடுத்து ஆலயத்துக்குள் அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி, உணவு மையத்துக்கு அழைத்துவந்தார்.

சிவகங்கை மன்னருக்குத் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் அவர்களுக்குப் பரிமாறப்பட்டன. உணவு முடிந்த பிறகு அவர்களுக்கு அன்பளிப்புக் கொடுத்து அனுப்பிவைத்தார் அடிகளார்.

அவர்கள் போன பிறகு மடத்துப் பணியாளர்கள், ''என்ன சாமி... சிவகங்கை மன்னர் வரவில்லையே... ஏமாற்றமாகிவிட்டதே?'' என்று கேட்டனர்.

''இந்தக் குடிமக்கள்தான் நாட்டின் உண்மையான மன்னர்கள். இவர்களின் உழைப்பால்தான் குன்றக்குடி ஆதீனம் சிறப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. மன்னர் மரியாதை இவர்களுக்கு வேண்டும் அல்லவா? இவர்கள்தான் வருகிறார்கள் என்று முன்னமே சொல்லியிருந்தால், இவ்வளவு சிறந்த உணவை நீங்கள் தயாரித் திருக்க மாட்டீர்களே'' என்று கூறிப் பலமாகச் சிரித்தாராம்.

காந்தியடிகள் நடத்திய நவகாளி யாத்திரை போன்று, 1982-ல் குமரி மாவட் டம் மண்டைக் காட்டில் நடைபெற்ற மதக் கலவரத்தில் சமரசம் ஏற்படுத்த அடிகளார் மேற்கொண்ட பாத யாத் திரை சரித்திர முக்கி யத்துவம் வாய்ந்தது. அந்த நேரம் போலீஸ் உயர் அதிகாரிகளே போக அஞ்சிய குமரி முனைக்கு, எச்சரிக்கைகளையும் எதிர்ப்பு களையும் மீறி அடிகளார் துணிச்சலோடு சென்று இரு பிரிவினரையும் சந்திக்க வைத்துக் கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தி வெற்றி கண்டார். இந்தச் சாதனையை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். சட்டமன்றத்திலேயே வியந்து பாராட்டினார்.

அடிகளாரோடு மூன்று நாட்கள் வலம் வந்தபோது காவி உடைக்குள் ஒரு துறவியை, தொழிலதிபரை, சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைய வேண்டும் என்பதில் அக்கறையுள்ள பொது நலத் தொண்டரைக் காண முடிந்தது.

- தேவகோட்டையான்