பிரீமியம் ஸ்டோரி
##~##

த்தனை வாரங்களாக தினை, கேழ்வரகு, நெல்லி, கொய்யா உள்ளிட்ட தமிழர்களுக்கு நெருக்க மாகவும் விருப்பமாகவும் இருந்த உணவு வகைளைப் பற்றிப் பார்த்தோம். இனி, 'கார்ப்பரேட் கலாசாரம்’ நம் வாழ்க்கை முறையில் என்னவெல்லாம் தவறான நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது, அதில் இருந்து தெளிவது எப்படி என்பதைப் பார்ப்போம்...

 'பசித்துப் புசி’ என்பதுதான் தமிழர்களின் உணவுக் கலாசாரம். சாப்பிட்டது நன்கு ஜீரணம் ஆகிய பின்னரே அடுத்த வேளை உணவைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பதை, 'மருந்தெனவேண்டா வாம் யாக்கைக்கு’ என்று கூறியதன் மூலம் உறுதிப் படுத்தி இருக்கிறார் வள்ளுவர். ஆனால், இன்றைய நடப்பு?

அரக்கப்பரக்க வேலையை முடித்து ஓடி,கோபத் துடன் காத்திருக்கும் குடும்பத்தைச் சமாதானப் படுத்தி, அகோரப் பசியுடன் ஹோட்டலில் அமர்ந் தால், 'வாட் சூப் டு யூ லைக் டூ ஹாவ் சார்?’ என்பதே பேரரின் முதல் கேள்வியாக இருக்கிறது.

எங்கோ குளிர் தேசத்தில், உடல் உறுப்புகளுக்கு வேலையே வைக்காமல் பொழுதைக் கழித்து, பசி எடுக்காமல்... ஆனால், சாப்பிட வேண்டுமே என்ற சூழலில் பசியைத் தூண்டுவதற்காகக் தயாரிக்கப்பட்ட 'அப்பிடைசர்’தான் சூப்புகள். ஆனால், வேகாத வெயிலில் வெந்து, அலைந்து திரிந்து, பசியோடு வந்து சாப்பிட அமரும் நம்மவர்களும், 'அப்பிடை சர்ல ஆரம்பிக்கிறதுதானே ஐதீகம்’ என்று எடுத்த எடுப்பில் சூப்பை உறிஞ்சுவது... மன்னித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே... இது மிகமிக முட்டாள்தனம்.

ஆறாம் திணை

ஏற்கெனவே பசித் தூண்டலில் வயிற்றில் ஜீரண அமிலங்கள் நிறைந்து கொதித்துக்கொண்டுஇருக்கும் போது, ரசாயன மூலப் பொருட்கள் நிரம்பிய சூப்பை வயிற்றுக்குள் இறக்குவது என்ன நியாயம் நண்பர்களே? ஆனால், இப்படி எடுத்த எடுப்பிலேயே வயிற்றைப் பதம் பார்ப்பதில்தான் துவங்குகின்றன இன்றைய விருந்துகள்.

முதலில் பழத் துண்டுகள், பிறகு உணவு, இடை யில் ரசம் (அல்லது அது போன்ற சூப்), இறுதியில் கண்டிப்பாக மோர். இதுதான் தமிழர் வாழ்வியலுக் கான உணவுக் கலாசாரம். ஆரோக்கியமான வாழ்க்கை என்பது எதைச் சாப்பிட வேண்டும் என்பதோடு, எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கிறது.

விருந்து என்றால், யூனிஃபார்ம் போட்ட சிப்பந்திகள் பரிமாற, ஹோட்டல் மேஜையில் சாப்பிடு வது மட்டும்தானா? பௌர்ணமி வெளிச்சம் வெள்ளமெனப் பொழிய, தென்னை மரத் தாலாட்டுடன் மொட்டை மாடியில் சாப்பிடும் நிலாச் சோறும் விருந்துதான்.

ஆறாம் திணை

' 'தூரம்’ வந்த பெரியவளுக்கு உளுந்தங்களி செஞ்சு கொடுத் தியா?’, 'அவன் மூஞ்சப் பார்த்தா, சரியா வெளியே போற மாதிரி தெரியலையே, பாலாஸ்பத்திரியில கடுக்காய் லேகியம் வாங்கிக் கொடுத்தியா?’, 'ஏண்டி புதுப் பொண்ணு... 'அவகளுக்கு’ பால்ல முருங்கைப் பூ போட்டுக் காய்ச்சித் தரச் சொன்னேனே... செஞ்சியா?’ - இவை அனைத்துமே நலம் பயக் கும் விருந்துகள்தான்.

சாப்பாடுதான் பசித்துப் புசி. தண்ணீரைப் பொறுத்தவரை தவிக்காவிட்டாலும் குடித்தே ஆக வேண்டும் மக்களே! இரண்டு சதவிகித நீர் இழப்பைக்கூட மனித உடல் தாங்காது. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகமிக அவசியம்.

'என் அலுவலகம் முழுக்கக் குளிரூட்டப்பட்டது. நாள் முழுக்க நான் அங்குதான் பணிபுரிகிறேன். நானும் அவ்வளவு தண்ணீர் குடிப்பது அவசியமா?’ என்று நீங்கள் கேட்கலாம். ஏ.சி. அறையிலேயே அமர்ந்திருக்கும் உங்கள் சருமம் வியர்வையை வெளிக்காட்டிக்கொள்ளாது. ஆனால், வெயிலில் அலைந்து திரிபவர்களைவிட உங்களுடைய கிட்னிக்கு வேலை அதிகம். சருமத்தில் கசியும் வியர்வையை ஏ.சி. காற்று உடனடியாகப் பதப்படுத்தி உங்களை உற்சாகத்திலேயே வைத்திருக்கும். ஆனால், பிசுபிசுப்பு உணர்வு இல்லாமல் உங்கள் உடல் அதிவேகமாக நீர்ச் சத்தினை இழந்துவரும். ஆதலால், குளிர்சாதன அறையிலேயே இருந்தாலும் அடிக்கடி நீர் அருந்துங்கள்.

'ஆபீஸ் டென்ஷன்ல அடிக்கடி என்னால எந்திரிச்சுப் போய் தண்ணி குடிச்சுட்டு இருக்க முடியாது. காலையில எந்திரிச்சதுமே ரெண்டு லிட்டர் தண்ணி குடிச்சா நல்லதுனு நெட்ல படிச்சிருக்கேன்!’ என்றபடி காலை எழுந்ததும் மாங்கு மாங்கென்று தண்ணீரை மண்டுகிறார்கள் பலர். தடாலடியாக இந்தப் பழக்கத்துக்கு மாறுவது உடல்நலத்துக்குக் கேடு.

ஆறாம் திணை

திடீரென ஒரே நாளிலேயே உங்களால் மாரத் தான் ஓட்டத்தின் முழுத் தொலைவையும் ஓடிக் கடக்க முடியுமா? இரண்டிரண்டு கிலோ மீட்டர் களாக ஓடிப் பழகித்தானே முழு தூரத்தையும் கடக்க முடியும். அப்படிக் கொஞ்சம் கொஞ்ச மாக இரண்டு, மூன்று குவளைகளாக ஒரு லிட்டர் வரை நீர் அருந்துங்கள். அதற்கு மேல் ஒரே நேரத்தில் தண்ணீர் அருந்த வேண்டிய அவசியம் இல்லை.

உணவு உண்ணும்போது எப்படி நீர் அருந்த வேண்டும்? 'இடையில் குடியாதே... கடையில் மறவாதே’ என்பதே நமது பழக்கமாக இருக்க வேண்டும். உணவு உண்ணும்போது இடையில் குடித்தால் ஜீரண அமிலங்கள் நீர்த்துப்போகும். அதே சமயம், உணவு உண்டு முடித்ததும் சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, நீரோ... மோரோ அருந்தத் தவறாதீர்கள். அதுதான் உங்கள் வயிற்றைப் புண்ணாகாமல் எப்போதும் பாதுகாக்கும்.

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு